பட்டம் சூட்டு விழா

மாமனிதர் மகான் ஷிவாஜி கணேஷன் அவர்களின் சிலை திறப்பிற்கு பெரும் ஆபத்து வர இருந்த நிலையில் , அவரின் ஆருயிர் நண்பரும், அரசியல் சாணக்கியரும், முக்கியமாக இன்றைய முதல்வருமாகிய தலைவர் கலைஞர் அவர்கள் ஒருவாரமாக தூங்காமல் உறங்காமல் மன உளைச்சல் கொண்டார்கள் .

சிலைக்காக மன உளைச்சல் கொள்வது இதுதான் முதல்முறையா? இல்லை இல்லை பல முறை பல்லாயிரம் முறை. சுனாமி அலை வந்த போது கூட வள்ளுவர் சிலைக்கு ஆபத்தோ என்று மன உளைச்சலுக்கு உள்ளானவர்தான் நம் முதல்வர் .

இதுமட்டுமா கண்ணகி சிலைக்காக எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டார் நம் தலைவர் என இந்த உலகிற்குத் தெரியாதா என்ன?

நமது முதல்வரின் மன உளைச்சல்களை பாராட்டி "சிலைகாக்க மன உளைச்சல் கொண்டான்" என்ற பட்டத்தை இம்மாமன்றம் சூட்டுகிறது .

பி.கு :

இம்சை அரசன் படத்திற்கும் இந்த பட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிக்கொள்கிறேன் .

சினிமா ...சிலை... கூத்து

சிவாஜி வேடத்தில் நாடகத்தில் ஒருவர் நடித்தாராம்.. மிகவும் நன்றாக நடித்தாராம்.. கண்டிப்பாக நனறாக நடித்திருப்பார். அவரை புகழ்ந்து பேசிய ஒருவர் அவரை 'சிவாஜி' என்று பட்டம் சூட்டினாராம் . ஆதலால் அவர் பெயர் சிவாஜி கணேசனாம்.. 'சிவாஜி' நாடகத்திற்கு பிறகு அவர் பாகப்பிரிவினை , தெய்வமகன் போன்ற படங்களில் பல வேடங்களில் சிறப்பான வேடங்களை வழங்கவில்லையா? அந்த வேடங்கள் பெயரில் அவர் பெயர் ஏன் மாறவில்லை . இதில் ஆரம்பித்தது.... கேப்டன் பெயர் வைத்த படத்தில் நடித்ததில் கேப்டன் என்ற பட்டம் வந்து சேர்ந்து விட்டது . அவர் 'கூலிக்காரன்' என்றொரு படத்திலும் தான் நடித்தார் . ஏன் அந்த பட்டம் வந்து சேரவில்லை ? சொரிந்து விட்டவர்களுக்கு தெரியாதா எந்த இடத்தில் சொரிந்துவிட்டால் சுகமாக இருக்குமென்று?

ரசிகர் மன்றம் வைப்பது சாமான்யர்கள் செய்யும் வேலை.. அரசாங்கம் அதனை விட பெரியது இல்லையா.. ஆதலால், சிலை வைக்கிறார்கள் .. மாமனிதராம் ..மஹாத்மாவாம்.. ம்ம்.. தெய்வமாவது எப்போதென்று தெரியவில்லை ? இனிமேல் மணிமண்டபம் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை வரும் . அதற்கும் இந்த அரசாங்கம் செவிசாய்க்கும்.. சாதனைப் பட்டியலிலும் அது இடம் பெறும். இதைத்தானே இந்த அரசாங்கங்கள் செய்துகொண்டிருக்கின்றன.. வள்ளுவருக்கு பெருமை சேர்க்க கோட்டம் கட்டினார்களாம், சிலை வைத்திருக்கிறார்களாம் .. வள்ளுவனுக்கு பெருமை , தமிழனுக்கு பெருமை திருக்குறள்தானே தவிர கோட்டம் இல்லை . சிலை இல்லை .

மக்களின் பணத்தை விவேகமாக செலவு செய்வது அரசாங்கத்தின் கடமை இல்லையா? அதனை ஒவ்வொருவருக்கும் சிலை வைப்பதையும் வெட்டி செலவு செய்வதையுமா மக்கள் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்?

இதில் வேறு நட்பின் இலக்கணமாக சிலை வைக்கிறார்களாம். நட்பின் இலக்கணததை காண்பிக்கவேண்டுமென்றால். தன் பணத்தில் , தன் சொந்த இடத்தில் , தங்க சிலையையே வைக்கலாமே? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்களாம் . இதுதான் நட்பாம். வெட்கமாயில்லை .

சிலை வைக்கவேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள், மேடையில் பேசியவர்கள், இந்த விழாவிற்கு வந்து தியாகம் செய்தவர்கள், ரசிக மகாஜனங்கள் இவர்கள் பணம் கொடுத்து, வசூல் செய்து சிலையை, தங்கள் சொந்த இடத்திலோ, தனியார் இடத்தை பணம் கொடுத்து வாங்கியோ, தங்கள் அன்பை காண்பித்திருக்கலாமே? பணம் இல்லாதவர்களா இவர்கள்? பஞ்ச பரதேசிகளான மக்களின் வரிப்பணம்தானா இவர்களுக்கு கிடைத்தது.?

மகாநடிகர் கணேசன். அவருக்கு சிலை வைத்தாயிற்று . ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் அவருக்கும் ஒரு சிலை. . சிரித்தால் குழிவிழும் பிரபுவுக்கு. அவருக்கு ஒரு சிலை . இரும்பு உடம்பு சரத்குமாருக்கு. அவருக்கு ஒரு சிலை. தன் ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்து கதாநாயாகனாய் ஆனதற்காக தனுஷுக்கு ஒரு சிலை. அறுபதிலும் தலைகீழாய் உதைப்பதற்காக விஜய்காந்திற்கு சிலை.... போங்கடா நீங்களும் உங்க சிலையும் ...

சூடு தணிய (ரசிக குஞ்சுகளுக்கல்ல....)

1)சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்... என் பல்பத்தை அவன் எடுத்துட்டான் .. என்னிடமிருந்து , பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து பல்பத்தை அவன் எடுத்துட்டான். ......

சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்.. என் தொடையை கிள்ளிட்டான் ..என்னை, பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னை கிள்ளிட்டான் .


- தாவியதற்கு சின்னப்புள்ளத்தனமான காரணங்களைக் கூறி சரத்குமார் ஜெயாவில் பேட்டி




2) இந்த விஜய்காந்த் ... ரஜினிகாந்த் நினைச்சா ..

- காவிரி பிரச்சினையை தீர்க்க பிரதமரை பார்க்க சென்றதாக ஊடகப் புரளிகளுக்கிடையே , இமயமலை சென்றதாக ரஜினி கூறி விமான நிலையத்தில் உளறியது ..


3)நாங்கள் இருவரும் நண்பர்கள் ..ஆதிகாலத்திலிருந்தே அடிச்சுக்குவோம்.. நான் அவனை அடிப்பேன் அவன் சுற்றியுள்ள எல்லோரையும் அடிப்பான். கவுண்டமணி செந்தில் காமெடியை விட கலக்கலா இருக்கும் .
-இதெல்லாம் யார் சொன்னது என்று சொல்லத்தேவையில்லை



4) புரச்சித்தலைவி வால்க ..புரச்சித்தலைவி வால்க ..

- பாராளுமன்றத்தில் ராமராஜனின் கன்னி மற்றும் இறுதி உரை



5)எங்க நாட்டுக்கு வராதீங்க .. அங்கே ஆடு மாடு மேய்க்கிறவர்கள்தான் இருக்கிறார்கள் என்று என் அப்பனே மலேஷியாவில் சொல்லியிருக்கான் ..

- முன்னால் எம்.எல்.ஏ ராதாரவி சிங்கப்பூரில் பிச்சை எடுக்கும்போது முழு போதையில் உளறியது



6)தலீ..வா..

- தமிழக ரசிகக்குஞ்சுகளின் தாரக மந்திரம்

விஜயகாந்தின் ஊழல் ஒழிப்பு

விஜயகாந்த் அவர்கள் ஊழலை ஒழிப்பதற்கான வழிகளை இரவும் பகலும் ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை தொடர்ந்து செய்து வருகிறார் என நாம் அறிந்ததே.. அதன் அடுத்த கட்ட பணிகளில் இப்போது இறங்கியுள்ளார் .


Image hosted by Photobucket.com
நன்றி : தினமலர்

ச்ச்சீ .. நீயெல்லாம் ஒரு தெய்வமா..??

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . நான் நினைத்திருக்கும் கடவுள் அய்யப்பனாக இருக்கலாம் .ஆனால் அக்கடவுள் மனத்தையன்றி , குறி உட்பட வேறெதும் பார்க்கமாட்டான் என்ற எண்ணம் எனக்குண்டு . தன்னை பார்க்கத்தகுதி ஆண்குறிதான் என ஒருவன் நினைத்தால் அவன் இறைவன் இல்லை , இழிபிறவி ... நான் நினைத்திருக்கும் கடவுள் இவற்றைவிட மேலானவன் .

நான் நினைத்திருக்கும் கடவுள் இயேசுவாக இருக்கலாம் . பிறந்த குழந்தை கூட , திருமுழுக்கு பெற்றால்தான் மோட்சம் என்று சொல்லும் மூடனாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .

நான் நினைத்திருக்கும் கடவுள் அல்லாவாக இருக்கலாம் . ஆனால் தீயவனைக்கூட கொன்றால்தான் மோட்சம் என்று சொல்லும் கொடியவனாக கண்டிப்பாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .

கடவுள் என்பவன் , அவனி(ளி)ன் பெயர் என்னவாக இருந்தாலும் கருணை உருவானவாகவே இருக்கமுடியுமேயன்றி , யூதர்களின் கடவுள் என்றோ , சில ஜாதியினர் மட்டுமே தொட முடியும் என்ற எண்ணம் கொண்டவனாகவோ , தெய்வ பாஷை என்று ஒன்றை கொண்டவனாகவோ , ஆண்/பெண் என்றோ , வி.ஐ.பி என்றோ , ஏன் குளித்து வருபவன்/வராதவன் என்றோ பேதம் பார்ப்பவனாகவோ எப்படி இருக்கமுடியும் . அவ்வாறு ஒரு கடவுள் இருக்கிறான் என்று சொல்லுவது ஏமாற்று வேலை அன்றி வேறென்ன? எளியோரை, ஜாதியின் பெயரால் , இனத்தின் பெயரால் , அடக்குவது தானே மதம் உருவாக்கியவர்களின் குறிக்கோள் . அது மிகவும் வெற்றிகரமான யுக்தி என மீண்டும் மீண்டும் நிருபனமாகி வருகிறதே .

உண்மையான கடவுள் எங்கும் இருக்கிறான் .. தூணிலும் இருக்கிறான் , துரும்பிலும் இருக்கிறான் .. ஆனால் அவன் வர அருவருப்படையும் ஒரு இடம் கோயிலாகத்தான் இருக்கமுடியும் . எல்லோரையும் வித்தியாசமினறி அனுமதிக்கும் ஒரு வியாபாரகூடத்திலோ, திரையரங்கிலோ இறைவன் இன்பமாக வருவானெயன்றி , சில சாதியினரை கருவரையில் அனுமதிக்கும் கோயிலுக்குள் எப்படி இறைவன் குடியிருப்பான் ? பெண்களை திருப்பீடத்தில் பூஜை செய்ய அனுமதிக்காத மாதா கோவிலுக்குள் எப்படி வருவான் ?

'பெண்கள் உள்ளே வந்தால் ஆண்களின் மனக்கட்டுப்பாடு தவறிவிடும் என்பதற்காக இப்படியொரு நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் பெண்களும் தைரியமாக கோயிலுக்குள் வரலாம்' ..இது நம்ம குருசாமி நம்பியார் கூறியது . அடக்கடவுளே மதவாதிகளுக்கு மட்டுமே இப்படி ஒரு லாஜிக் கிடைக்கிறது என்று தெரியவில்லை . ஏன் பர்தா போடுகிறார்கள் என்றாலும் , ஏன் பெண்களை திருப்பலி செய்ய அனுமதிப்பதில்லை என்றாலும் இதே மாதிரியான பதில்கள்தான் மதவாதிகளிடமிருந்து வருகிறது . ஆண் தவறு செய்வானென்றால் அவனைத்தானே கொவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது . ஆண் கண்ணைத்தானே கட்டவேண்டும். எதற்கு பெண்ணுக்குத் தணடனை ? மதங்கள் மாறினாலும், மதவாதிகளின் எண்ணங்கள் ஏன் ஒரே மாதிரியாய் உள்ளது?

Related Links :

http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_29.html
http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post.html