என் மதமும் வெளிநாட்டுப் பணமும்

பரபரப்புக்குள்ளாயிருக்கும் ஆனந்த்ராஜ் , பிஷப் என்றே குறிப்பிடப்படுவதால் , தங்கள் மரியாதையும், புனித பிம்பங்களும் உடைந்துவிடுமோ என்ற பயத்தில் கத்தோலிக்க பிஷப்புகள் அறிக்கை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.(Sun News) அவர்கள் அறிக்கையில் உள்ளவாறு ஆனந்தராஜுக்கும் கத்தோலிக்கிற்கும் சம்பந்தம் இல்லைதான் . ஆனால் இந்த பிஷப்புகள் மற்றும் கத்தோலிக்க குருமார்களுக்கும் , பண மோசடிகளுக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை விட முடியுமா?

எனக்கும் மதமாற்ற கோஷ்டிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை, சில பேர் என்னிடமும் வந்து , அவர்கள் குழுவுக்கு மதம் மாறச் சொன்ன எரிச்சலுற்ற தருணங்கள் தவிர . மதமாற்றத்தில் ஏதாவது பண ஆதாயம் அவர்களுக்கு கிடைக்குமா என எனக்குத் தெரியாது.

நான் சொல்கிற விஷயம் எவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால் கேள்விப்பட்ட, கேள்விப்பட்ட விஷயங்களை ஊர்ஜிதப்படுத்துகிற நிகழ்வுகளை வைத்து அது உண்மையாக இருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன .

ஆனால் எல்லா குருமார்களும் அப்படியில்லை. சேவை செய்வதை எண்ணமாக கொண்ட பலரும் உண்டு. அப்படியொரு குரு, அவருக்கு பெல்ஜியத்திலிருந்து பணம் வந்துகொண்டிருந்தது. பல ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் . பசு மாடு, நிலம் என முடிந்தளவு செய்தார் . ஆனால் இதுவெல்லாம் தன் பணமில்லை, வெளிநாட்டிலிருந்து வருகிறது என்றும் சொன்னார். (பயணடைந்தவர் எல்லோரும் கிறித்துவர்கள் இல்லை . யாரும் மதமும் மாறவில்லை). பெல்ஜியத்திலிருந்து பணம் அனுப்பும் வெள்ளைக்காரர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்தனர் . கிராமத்தினர் முன்னிலையில் , அந்த வெள்ளைக்காரர்களிடம் செலவுக்கணக்கு படித்துக்காட்டப்பட்டது. அந்த வெளிநாட்டவரிடம் பேசியபொழுது, அவர்கள் இங்கு பணம் அனுப்புவது இங்குள்ள ஏழைகளுக்கு உதவும் நோக்கம் அன்றி, அதை ஒரு இறைப்பணி என்று நினைத்து செய்வதேயன்றி வேறு எந்த உள்நோக்கம் இல்லை எனப் புரிந்தது. அதில் சிலர் கிறிஸ்தவர்கள் கூட இல்லை . சிலர் தன் வேலை நேரம் போக , பகுதி நேர வேலை செய்து, அதில் ஒருவர் பகுதி நேர வேலையாக டாய்லெட் கழுவுவதாகக்கூடச் சொன்னார் . குருமார்கள் நம்பிக்கைக்குறியவர்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் குருக்கள் மூலமாக பணம் அனுப்புகிறார்கள். ஆனால், இந்த குருவைப்போல எல்லோரும் நம்பிக்கைத்துரோகம் பண்ணாமல் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி?


திடீரென கோவில் (சர்ச்) வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது . குடமுழுக்கு போன்ற ஒரு விழாவும் எடுக்கப்பட்டது.. பாதிரியாரும் , சில சிஷ்ய கோடிகளும் , கோவிலைச் சுற்றி புகைப்படம் எடுத்தார்கள் . மக்களுக்கு சந்தோஷம். புகைப்படம் எடுத்தது வெளிநாட்டிற்கு அனுப்ப. கோவில் கட்டியதற்கு அத்தாட்சி வேண்டாமா? .கோவில் கட்ட பணம் வாங்கி, கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது ஒரு வழக்கம் என பின்னால் அறிந்தேன் .

இன்னொரு இடத்தில் , குரு தங்கியிருந்த வீடு ஒரு டீஸன்டாகத்தான் இருக்கும் . வீட்டைச் சுற்றிலும் தோட்டமும் தென்னை மரங்கள் உட்பட நிறைய மரங்களும் அதில் இருந்தன. அவருக்கு முன் இருந்த குருக்கள் வளர்த்தது . அவர் வெளிநாடு சென்று வந்தார் . கோவிலுக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டது . அவருடைய வீடு இடிக்கப்பட்டது , மரங்களும் வெட்டப்பட்டன . தெற்கு வடக்காக இருந்த அவருடைய வீடு கிழ்க்கு மேற்காக மாற்றப்பட்டது . பழைய வீடு அவர் டேஸ்ட்டுக்கு இல்லையோ அல்லது வாஸ்து போன்ற கருமாந்திரமோ. மரங்களை வெட்ட எப்படித்தான் மனசு வந்ததோ .

இன்னொருவர் , வெளியில் தெரியுமளவுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் . நல்ல கார் ஒன்றை வாங்கிக்கொண்டார் . தன் சகோதரி வாங்கிக் கொடுத்ததாக சொல்லிக்கொண்டார். (அந்த சகோதரி அந்தப் பகுதி என்பதால் அது நம்பும்படி இல்லை) வெளியில் பெயர் கெட , பிஷப் மாற்றல் உத்தரவு போட்டார். அதற்கும் அடிபணியவில்லை.அவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? அமெரிக்காவுக்கு மாற்றல் . வேறு வழி ?

வேளாங்கண்ணி கோவிலில் பணி(?) செய்ய தஞ்சை மறைமாவட்ட குருக்களிடையே பெரும்போரே நடக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஒருவர் அங்கே பங்குத்தந்தையானவுடன் அவரை பணிமாற்றம் செய்வதும் பிஷப்புக்கு கடினம் . அங்கே பணி செய்ய ஏன் அவ்வளவு போட்டி என்ற காரணத்தை சொல்லியா தெரியவேண்டும் ?

இங்கே எனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே சொல்லியுள்ளேன் . இதற்கும் மேல் எத்தனையோ? மாட்டிக்கொள்ளாததினால் இவர்கள் ஆனந்த்ராஜை விட உத்தமர்கள் இல்லை . ஆனால் ஒன்று, ஆனந்த்ராஜ், சங்கராச்சாரி போன்றோரே மதங்கள் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கத்தை முழுமையாக புரிந்தவர்கள் . அதனை ஒழுங்காக செய்கிறார்கள் ..

மீதி அடுத்தப் பதிவில்