ராமதாஸ் வாத்தியார்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரத் தோட்டம் கிட்டத்தட்ட ஒரு காலேஜ் போலவே மாறிப்போயிருக்கிறது. எம்.எல்.ஏ., எம்.பி., நிர்வாகி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் புத்தகமும் கையுமாக இருக்கிறார்கள், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, பரீட்சை வேறு எழுதுகிறார்கள்!

தைலாபுரம் தோட்டத்தில் ஒரு அரசியல் பயிலரங்கத்தை அமைத்து அதன்மூலம் தனது கட்சியினருக்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்த பார்வையை விசாலமாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். கல்வித்துறையில் பிரபலமானவர்களை வரவழைத்து வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்கிறார் அவர். அண்மைக்காலமாக வகுப்புகள் நடத்துவதோடு, தேர்வுகள் நடத்தி மார்க்கும் போட ஆரம்பித்திருக்கிறார் டாக்டர்! ஒவ்வொரு சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் இந்தத் தேர்வுகள் குறித்து அறிந்துகொள்ள நாமும் பயிலரங்கத்துக்குச் சென்றோம்.

ஏதோ கல்லூரிக்குள் வந்துவிட்டோமோ என்று சந்தேகம் எட்டிப்பார்க்கும் அளவுக்குக் கையில் நோட்டுப் புத்தகத்தோடு இருந்தார்கள் பா.ம.க&வினர். சனிக்கிழமைகளில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ&க்களாக இருப்பவர்களுக்கு வகுப்புகள் அமர்க்களப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்ட அளவில் இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இட ஒதுக்கீடு, பெரியார் கொள்கைகள், சுயமரியாதை சம்பந்தமான விஷயங்கள், அம்பேத்கர் பற்றிய செய்தி கள், உலக வரலாறு, இந்திய, தமிழக அரசியல் வரலாறு, அரசியல் கட்சிகள் பற்றிய விவரங்கள் என பாடப்பிரிவுகள் நீண்டுகொண்டே போகின்றன. இவற் றோடு லேட்டஸ்ட் விவகாரங்களான துணை நகரத் திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது, நவீன வேளாண்மையில் இருக்கும் குறைகள் ஆகியவை குறித்த வகுப்பு களும் சேர்க்கப்பட்டிருக் கின்றன.

வகுப்புகள் தொடங்கப் படுவதற்கு முன்பாக அனைவருக்கும் ஒவ்வொரு கேள்வித்தாள் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் என்ன வகுப்புகள் எடுக்கப்பட இருக்கிறதோ அந்த சப்ஜெக்ட்களைப் பற்றிய கேள்விகள் அந்தத் தேர்வில் கேட்கப்படுகின்றன. இருபது மார்க்குக்குக் கேட்கப்படும் கேள்வித்தாளை முடிக்க வேண்டிய நேரம் பதினைந்து நிமிடங்கள்! பதினைந்தாவது நிமிடத்தில், ‘எல்லோரும் விடைத்தாள்களை ஆசிரியரிடம் கொடுத்து விடுங்கள்’ என்று அறிவிப்புச் செய்கிறார் டாக்டர் ராமதாஸ். அடுத்து விடைத்தாள்கள் அனைத்தும் பயிலரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் ஒரு ஆசிரியர் குழுவால் திருத்தப்பட்டு, மார்க்குகள் போடும் பணி துவங்கி விடுகிறது. இதற்கிடையில் பயிலரங்கத்தில் வகுப்புகள் ஆரம்பமாகிவிடுகிறது. வகுப்புகள் முடியும் நேரம், தேர்வு முடிவுகளை ராமதாஸ் முன்னிலையில் ஆசிரியர்கள் வெளியிடுகிறார்கள். முதல் இடத்தைப் பிடித்த நபர்களின் பெயரைச் சொல்லும்போது, ‘எல்லோரும் கைதட்டுங்க’ என்று சொல்லும் ராமதாஸ், தானும் கைதட்டுகிறார். அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் நபர்கள் யார் என்று சொன்னாலும் யார் எவ்வளவு மார்க் என்பதை நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறார்கள்.

இந்த வகுப்புகளில் பாடங்களை எடுப்பவர்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், நிதித்துறை செயலர் அந்தஸ்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு சம்பளம் மணிக்கணக்கில் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு மொத்தம் நான்கு வகுப்புகள், தலா ஒரு மணி நேரம் என நீள்கிறது. காலையில் நான்கு வகுப்புகள் முடிந்தபிறகு மாலையில் பல குழுக்களாகப் பிரிந்து நாட்டில் லேட்டஸ்ட் பிரச்னை என்னவோ அது பற்றிய விவாதங்களை ஆரம்பிக்கிறார்கள். விவாதம் செய்வதோடு நின்றுவிடாமல் தீர்வையும் எட்டுகிறார்கள்.

இந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழுவைச் சுற்றியும் நடந்தவாறே அவர்களது விவாதங்களைக் கேட்டு உள்வாங்கிக் கொள்கிறார் ராமதாஸ். இலங்கைப் பிரச்னை தொடர்பாக விவாதம் செய்து கொண்டிருந்த ஒரு குழு, இலங்கை விஷயத்தில் போர்தான் தீர்வு என்ற அளவில் படு பரபரப்பாக விவாதம் செய்து கொண்டிருக்க, ‘அப்படின்னா இலங்கைக்குப் படையெடுத்துப் போகச் சொல்றீங்களா? அதெல்லாம் சாத்தியமில்லை. மத்திய அரசைத்தான் நாம் வலியுறுத்தணும். ஒட்டு மொத்த தமிழகத்தையும் இந்த விஷயத்தில் ஒன்று திரட்டி, நமது உணர்வுகளை வெளிப் படுத்தணும். அதுதான் அங்குள்ள தமிழனுக்கு நாம் உடனடியாக செய்யும் பேருதவி’ என்று தனது கருத்தைச் சொல்கிறார் ராமதாஸ்.

விவாதத்தில் சினிமா பற்றி இல்லாமலா? ஆனால், ரஜினி பற்றிய எந்த விஷயமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக சினிமாவில் கவர்ச்சிக் காட்சிகள், இளைஞர்களை தவறான வழிக்கு இழுத்துப்போகும் விஷயங்கள் தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கின்றன.

பெரும்பாலும் தேர்வுகளில் முதல் இடத்தைப் பிடிப்பது குறிப்பிட்ட ஐந்து அல்லது ஆறு பேர்கள்தான். அவர்கள் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், பா.ம.க&வின் இளைஞர் அணிச் செயலாளர்களான அறிவுச்செல்வன், அருள், சென்னை மாநகாராட்சியின் நகரமைப்புக் குழு தலைவர் பிரகாஷ், எதிரொலி மணியன், டி.கே.ராஜன் ஆகியோர்தான். இவர்களில் வேல்முருகன், அறிவுச்செல்வன், அருள் ஆகியோர், ‘இதுக்கு ஏன் மார்க் போடலை சார்? இது சரியான பதில்தானே? இவருக்கு மட்டும் மார்க் போட்டிருக்கீங்க?’ என்று பள்ளிக் குழந்தைகளைப் போலவே ஆசிரியர்களிடம் போய் முறையிடுகிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

‘‘அரசியலைப் பொறுத்தவரை ஒண்ணுமே தெரியாம எதையாச்சும் செஞ்சு மேல வந்துட்டாப் போதும்னுதான் நினைக்கிறாங்க. பொது மக்களுக்கு சேவை செய்யற இடத்துல இருக்கறவங்க, அரசாங்கத்தையே நடத்தப் போறவங்க அதுகுறித்த அறிவு இல்லாம இருக்கறது நாட்டுக்கு நல்லதில்ல. அதனாலதான் அய்யா இதை ஆரம்பிச்சாங்க. இந்த வகுப்புகள் எல்லாம் எங்களை எவ்வளவு தூரத்துக்கு முன்னேற்றியிருக்குன்னா ஒரு பட்ஜெட்டே போடுற அளவுக்கு முன்னேற்றியிருக்கு. ஒரு பட்ஜெட்டை சபையில படிக்கிறப்பவே அது நல்ல பட்ஜெட்டா இல்லையானு சொல்ற அளவுக்கு எல்லோரும் தேறியிருக்கோம்’’ என்றார்கள்.

வாத்தியார் அவதாரம் எடுத்திருக்கும் டாக்டர் ராமதாஸிடம் பேசினோம். ‘‘தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதி நிதிகள், அரசு போடும் திட்டங் களின் சாதக&பாதகங்களை ஆராய்ந்து, அந்தத் திட்டங்களை தங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் காலம் இது. அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் அளவுக்கு எங்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும், இதில் அவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும் என்பது என் ஆசை. நான் நினைத்ததைவிட அனைவரும் வகுப்புகளிலும், தேர்வுகளிலும் அதிகமாகவே அக்கறை காட்டுகிறார்கள். படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அல்லது அரசியலுக்கு வந்தவர்கள் பொது விஷயங்களைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயிலரங்கம்’’ என்றார்.

நன்றி ஜுனியர் விகடன்

நூடுல்ஸ் செய்வது எப்படி?

எண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு , கடாயில் ஊற்றி , அது காய்ந்தவுடன் முட்டையை அடித்து ஊற்றி, கொஞ்சம் உப்பை சேர்த்தவுடன் , மூடி போட்டு , கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளவும்.

இன்னோரு கடாயில் , தண்ணீரை ஊற்றி, கொதித்தவுடன் , நூடுல்ஸை பிரித்து கொட்டி , ஒரு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் .

இதனிடையில் ,.முதல் கடாயில் உள்ள முட்டையை திருப்பி போட்டிருக்கவேண்டும் . முட்டை பர்கரிலுள்ள முட்டை போல வந்தவுடன் , அதனை கொஞசம் கிண்டிவிட்டு, வெளியில் எடுத்தவுடன் , அந்த கடாயில், கொஞ்சம் எண்ணெய் ஊற்றி , நறுக்கிய வெங்காயமும், வெள்ளைப்பூண்டும் சேர்த்து , வதக்க வேண்டும் . பொன்னிறம் ஆகும்போது , தக்காளி வெட்டி அதனுடன் சேர்க்க வேண்டும் . இவற்றை அவ்வப்போது கிண்டிவிட்டுக்கொள்ளவேண்டும் . இதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிண்டிவிடவேண்டும் . பின், பொடியாக வெட்டிய பீன்ஸயும், தொடர்ந்து , கேரட் பச்சை பட்டாணி முதலியவற்றை சேர்த்து , கொஞ்ச நேரம் வேகவைக்க வேண்டும் . காய் வெந்தவுடன் அதன் மேல் , இன்னொரு கடாயில் வைத்திருந்த நூடுல்ஸையும் , முட்டையையும் கலக்கி, இன்னும் கொஞ்சம் நேரம் அடுப்பில் வைத்து , எடுத்து விடவும் .

என் மதமும் வெளிநாட்டுப் பணமும்

பரபரப்புக்குள்ளாயிருக்கும் ஆனந்த்ராஜ் , பிஷப் என்றே குறிப்பிடப்படுவதால் , தங்கள் மரியாதையும், புனித பிம்பங்களும் உடைந்துவிடுமோ என்ற பயத்தில் கத்தோலிக்க பிஷப்புகள் அறிக்கை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.(Sun News) அவர்கள் அறிக்கையில் உள்ளவாறு ஆனந்தராஜுக்கும் கத்தோலிக்கிற்கும் சம்பந்தம் இல்லைதான் . ஆனால் இந்த பிஷப்புகள் மற்றும் கத்தோலிக்க குருமார்களுக்கும் , பண மோசடிகளுக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை விட முடியுமா?

எனக்கும் மதமாற்ற கோஷ்டிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை, சில பேர் என்னிடமும் வந்து , அவர்கள் குழுவுக்கு மதம் மாறச் சொன்ன எரிச்சலுற்ற தருணங்கள் தவிர . மதமாற்றத்தில் ஏதாவது பண ஆதாயம் அவர்களுக்கு கிடைக்குமா என எனக்குத் தெரியாது.

நான் சொல்கிற விஷயம் எவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால் கேள்விப்பட்ட, கேள்விப்பட்ட விஷயங்களை ஊர்ஜிதப்படுத்துகிற நிகழ்வுகளை வைத்து அது உண்மையாக இருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன .

ஆனால் எல்லா குருமார்களும் அப்படியில்லை. சேவை செய்வதை எண்ணமாக கொண்ட பலரும் உண்டு. அப்படியொரு குரு, அவருக்கு பெல்ஜியத்திலிருந்து பணம் வந்துகொண்டிருந்தது. பல ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் . பசு மாடு, நிலம் என முடிந்தளவு செய்தார் . ஆனால் இதுவெல்லாம் தன் பணமில்லை, வெளிநாட்டிலிருந்து வருகிறது என்றும் சொன்னார். (பயணடைந்தவர் எல்லோரும் கிறித்துவர்கள் இல்லை . யாரும் மதமும் மாறவில்லை). பெல்ஜியத்திலிருந்து பணம் அனுப்பும் வெள்ளைக்காரர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்தனர் . கிராமத்தினர் முன்னிலையில் , அந்த வெள்ளைக்காரர்களிடம் செலவுக்கணக்கு படித்துக்காட்டப்பட்டது. அந்த வெளிநாட்டவரிடம் பேசியபொழுது, அவர்கள் இங்கு பணம் அனுப்புவது இங்குள்ள ஏழைகளுக்கு உதவும் நோக்கம் அன்றி, அதை ஒரு இறைப்பணி என்று நினைத்து செய்வதேயன்றி வேறு எந்த உள்நோக்கம் இல்லை எனப் புரிந்தது. அதில் சிலர் கிறிஸ்தவர்கள் கூட இல்லை . சிலர் தன் வேலை நேரம் போக , பகுதி நேர வேலை செய்து, அதில் ஒருவர் பகுதி நேர வேலையாக டாய்லெட் கழுவுவதாகக்கூடச் சொன்னார் . குருமார்கள் நம்பிக்கைக்குறியவர்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் குருக்கள் மூலமாக பணம் அனுப்புகிறார்கள். ஆனால், இந்த குருவைப்போல எல்லோரும் நம்பிக்கைத்துரோகம் பண்ணாமல் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி?


திடீரென கோவில் (சர்ச்) வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது . குடமுழுக்கு போன்ற ஒரு விழாவும் எடுக்கப்பட்டது.. பாதிரியாரும் , சில சிஷ்ய கோடிகளும் , கோவிலைச் சுற்றி புகைப்படம் எடுத்தார்கள் . மக்களுக்கு சந்தோஷம். புகைப்படம் எடுத்தது வெளிநாட்டிற்கு அனுப்ப. கோவில் கட்டியதற்கு அத்தாட்சி வேண்டாமா? .கோவில் கட்ட பணம் வாங்கி, கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது ஒரு வழக்கம் என பின்னால் அறிந்தேன் .

இன்னொரு இடத்தில் , குரு தங்கியிருந்த வீடு ஒரு டீஸன்டாகத்தான் இருக்கும் . வீட்டைச் சுற்றிலும் தோட்டமும் தென்னை மரங்கள் உட்பட நிறைய மரங்களும் அதில் இருந்தன. அவருக்கு முன் இருந்த குருக்கள் வளர்த்தது . அவர் வெளிநாடு சென்று வந்தார் . கோவிலுக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டது . அவருடைய வீடு இடிக்கப்பட்டது , மரங்களும் வெட்டப்பட்டன . தெற்கு வடக்காக இருந்த அவருடைய வீடு கிழ்க்கு மேற்காக மாற்றப்பட்டது . பழைய வீடு அவர் டேஸ்ட்டுக்கு இல்லையோ அல்லது வாஸ்து போன்ற கருமாந்திரமோ. மரங்களை வெட்ட எப்படித்தான் மனசு வந்ததோ .

இன்னொருவர் , வெளியில் தெரியுமளவுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் . நல்ல கார் ஒன்றை வாங்கிக்கொண்டார் . தன் சகோதரி வாங்கிக் கொடுத்ததாக சொல்லிக்கொண்டார். (அந்த சகோதரி அந்தப் பகுதி என்பதால் அது நம்பும்படி இல்லை) வெளியில் பெயர் கெட , பிஷப் மாற்றல் உத்தரவு போட்டார். அதற்கும் அடிபணியவில்லை.அவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? அமெரிக்காவுக்கு மாற்றல் . வேறு வழி ?

வேளாங்கண்ணி கோவிலில் பணி(?) செய்ய தஞ்சை மறைமாவட்ட குருக்களிடையே பெரும்போரே நடக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஒருவர் அங்கே பங்குத்தந்தையானவுடன் அவரை பணிமாற்றம் செய்வதும் பிஷப்புக்கு கடினம் . அங்கே பணி செய்ய ஏன் அவ்வளவு போட்டி என்ற காரணத்தை சொல்லியா தெரியவேண்டும் ?

இங்கே எனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே சொல்லியுள்ளேன் . இதற்கும் மேல் எத்தனையோ? மாட்டிக்கொள்ளாததினால் இவர்கள் ஆனந்த்ராஜை விட உத்தமர்கள் இல்லை . ஆனால் ஒன்று, ஆனந்த்ராஜ், சங்கராச்சாரி போன்றோரே மதங்கள் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கத்தை முழுமையாக புரிந்தவர்கள் . அதனை ஒழுங்காக செய்கிறார்கள் ..

மீதி அடுத்தப் பதிவில்

தெய்வங்களான பலி ஆடுகள்-2

முதல் பகுதி இங்கே. நம்ம ஊர்ல ரொம்பக் காலத்துக்கு முன்னால காவக்காரன் குடும்பம்னு ஒண்ணு இருந்துச்சு . வாரிசு பரம்பரையா, அந்தக் குடும்பத்துக்காரங்க அரண்மனைக் காவக்கரங்களா இருந்தாங்க . அந்த குடும்பத்தை சேர்ந்த ராக்கு முத்துத் தேவர்க்கு ஒரு அழகான மகள் இருந்தா . அவ பேரு பூவாத்தா , பூவாத்தா செக்க செவேலுன்னு செவத்த ரெட்டுப் போல இருப்பா. அவளுக்கு கரண்டக்கால் வரை தலைமுடி இருந்துச்சு .

ஒருநா பூவாத்தா குளத்துக்கு குளிக்கதுக்குப் போனா. குளிச்சி முடித்து, குளத்துக்கரையோரம் இருந்த மரத்தடியில் நின்று தன் தலைமுடியை விரித்து உலர்த்தியபடி, , தன் தலைக்கு சிக்கு எடுத்துகிட்டிருந்தா . அப்ப அந்த வழியா குதிரையில போன இளைய மகராஜா, பூவாத்தாளையும் அவளோட தலைமுடி அழகையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு சூறாவளி காத்து அடித்து, அவளோட முடி, பக்கத்திலிருந்த கள்ளிச்செடி மேல் விழுந்துருச்சு . அத பார்த்த மகராஜா அதனை எடுக்கப்பொனாரு. 'அன்னிய ஆம்பளைகள் என் கேசத்தை தொடக்கூடாது' என்று சொன்னாள் பூவாததா . அத கேட்டதும் மகராஜா 'நான் யாருன்னு தெரியுமா'ன்னு கேட்டார். 'ஏன் தெரியாது? நீங்க இளைய மகாராஜாதான்னு தெரியும். தெரிஞ்சிதான் சொல்லுதேன்னா பூவாத்தா .

இளைய மகாராஜா தான் இன்னார்னு தெரிஞ்சும் தன் கேசத்தை தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாளேன்னு நினைச்சி, கோவத்துல தன் கையில இருந்த வாளால, கள்ளிச் செடியில மாட்டியிருந்தது போக மீதி உள்ள தலைமுடியை வெட்டிட்டார் .

தான் ஆசையா வளர்த்த தலைமுடியை இளைய மகாராஜா வெட்டிட்டாரேன்னு அழுதுகிட்டே வீடு போய் செர்ந்து 'நடந்த கதை'யை தன் அண்ணன்மாரிடம் சொன்னா பூவாத்தா . அண்ணன்மார்களுக்கு கோபம் தாங்க முடியவில்லை . 'என்ன செய்ய . அரண்மனையை எதிர்க்கவா முடியும்? இப்படிச் செய்யலாமா? இது முறையான்னு அவங்களுக்கா தெரியனும்! வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கேன்னு நினச்சு மனசுக்கு உள்ளேயே குமுறுனாங்க .

இதுக்கிடையில , மகாராஜா அவர்களைக் கூப்பிட்டு , 'பூவாத்தாளை கட்டிக்க ஆசப்படுதேன் .எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்னு இன்னும் ஒரு வாரத்தில் சொல்லி அனுப்புங்க' என்றார் .

'சரி மகராஜா'ன்னு சொல்லி தலையை ஆட்டிட்டு வந்தாங்க . வீட்டுக்கு வந்ததும் , குடும்பத்துக்காரன் ஆம்பளைங்க எல்லொருமாச் சேர்ந்து கூடி ஆலோசனை செய்தார்கள் .

குடும்பத்து மூப்பன் 'இந்த மகாராஜாவுக்கு நன்றியே இல்லை. நாம தலைமுறை தலைமுறையா உயிரை பணயம் வைத்து காபந்து பண்ணியிருக்கோம் . ஆனா இளைய மகாராஜா நம்ம வீட்டு பிள்ளை தலைமுடிய அறுத்து மானபங்கபடுத்துனது காணாது, பெண் வேறு கேட்கிறார். என்னதான் நாட்டை ஆளற ராஜாவானாலும் அவங்க குலம் கோத்திரம் வேற; நம்ம சாதி சனம் வேறதான் . அதனால , நாம மகாராஜாவுக்கு இந்த விசயத்துல விட்டுகொடுக்ககூடாது' என்றார் .

பிறகு , ஆம்பளைங்க எல்லோருமா கலந்து பேசி , 'நமக்கு நம்ம சாதியோட கௌரவம்தான் முக்கியம். இந்த ராஜாவுக்கு பெண் கட்டி கொடுக்கக் கூடாது . அதே சமயம் நாம ராஜாவை பகைச்சிக்கிட்டு இந்த நாட்டுல வாழவும் முடியாது . ராஜா அவமானப்படுத்துன பிள்ளையையும் நம்மோடு வச்சிக்கிட முடியாது . அதே சமயம் இந்த ராஜாவையும் தலைகுனிய வைக்கனும்' என்று முடிவெடுத்தாஙக .

அதுபடிக்கு மறுநாள் , அரண்மனைக்கு வார வெள்ளிக்கிழமை ராத்திரியில் எங்கள் வீட்டு பெண்ணை வில்வண்டியில் 'பெண் அழைத்து' அனுப்புகிறோம். ஆனால் நாங்கள் யாரும் கூடி வரமாட்டோம் . வண்டிக்காரன் மட்டும்தான் வருவான் என்று சொல்லை அனுப்பினார்கள் .

வெள்ளிக்கிழமை வந்தது . அன்னக்கி காலையில, பூவாத்தாளை குளிப்பாட்டி , புதுச்சேலை , சட்டை கொடுத்து உடுத்தச் சொல்லி ஜோடிச்சு , சாமிகும்புடச் சொன்னாங்க. பூவாத்தாளுக்கு , நம்மளை என்ன செய்யப் போறாங்கன்னே புரிய்லே. என்றாலும் ஐயாவும் அண்ணண்மாரும் சொன்னபடி செஞ்சா.

காவக்காரங்களோட மூப்பன் வீட்டுல ஒரு பெரிய 'மரிசல்' இருந்துச்சு . மரிசல்னா, தானியம் போட்டு சேர்த்து வைக்கிற இடம் . மூப்பன் வீட்டுல இருந்த மரிசல் , ரொம்ப பெரிசு . அதுல நூறு இருநூறு கோட்டைத் தானியம் போட்டு வைக்கலாம் . மகராஜாவுக்கு வரிக்குப்பதிலா அளந்து வாங்குற தானியத்தையெல்லாம் அதுலதான் போட்டு வைப்பாங்க .

மூப்பன் வீட்டு மரிசல் நிறைய அந்த வருசம் வரியா வந்த காடக்கன்னியை (தினைமாதிரியான ஒரு வகை தானியம் ) போட்டு வச்சிருந்தாங்க. காடக்கண்ணி 'கம்பு' என்ற தாணியம் மாதிரி இருக்கும் . ஆனா அதோட தொலி வழுவழுன்னு பட்டுமாதிரி இருக்கும் . காடக்கன்னி குமிஞ்சி கிடக்கிற இடத்துல காலை வைக்க முடியாது . ஒரு சாக்கு நிறைய காடக்கன்னியை அள்ளிக்கிட்டு அதன் மேலே ஒரு பனங்காயைப் போட்டா, அது வழுவி , வழுவி, சாக்கின் தூருக்கே போயிரும். அப்படி வழுக்கும் அந்த தானியம் .

பூவாத்தாளை கூட்டிக்கிட்டுப்போயி , மூப்பன் வீட்டுல இருந்த காடக்கன்னி மருசல்மேல் போட்டு இருந்த பலகை மேல் நின்னு சாமி கும்புடச் சொன்னாங்க . பூவாத்தாள் மருசல் மேல ஏறி நின்னு கண்களை மூடி கைகளை உயர்த்தியபடி சாமி கும்பிட்டாள் . அப்ப மூப்பன் ஒரு விசையைத் தட்டினான் . பூவாத்தா நின்ற பலகை தாழ்ந்தது .

பலகையில் நின்ற பூவாத்தாளும் காடக்கன்னி மறுசலின் உள்ளே இறங்கினாள் . 'தன்னைக் கொல்லத்தான் இத்தனை வேலையும் பார்த்தார்கள் ' என்பதை அப்போதுதான் உணர்ந்த பூவாத்தாள், 'சண்டாளப்பாவிங்களா.. நீங்களும் உங்க ராஜாவும் மண்ணாப் போவிங்க' என்று சாபம் கொடுத்துக் கொண்டே, காடக்கன்னி குவியலில் மூழ்கி , மூச்சுத் திணறி செத்துப்போனாள் .

அன்னக்கி ராத்திரி, மூப்பன் வீட்டு வில் வண்டியில் ஒரு பெரிய பெட்டியை ஏற்றி, அதில் ஒரு பெட்டைக் கழுதையை ஜோடித்து பெட்டிக்குள் வைத்துப்பூட்டி, அரண்மனைக்கு அனுப்பிவிட்டு , காவக்காரன் குடும்பத்துக்காரங்க அனைவரும் ராவோடு ராவா, ஊரைக் காலி பண்ணிட்டு போயிட்டாங்க .

அன்னையிலிருந்து அவங்க செஞ்ச காரியத்துக்குப் பரிகாரமா பூவாத்தாளுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுதாங்க. காடக்கன்னி தானியத்துல மாவிடிச்சி, பூவாத்தா சாமிக்கு படையல் வைச்சு கும்புடுறாங்க' .

நன்றி: மண் மணக்கும் மனுஷங்க

அவள் அப்படித்தான் - விமர்சனம்

'பண்ணீர் புஷ்பங்களே..' என்ற பாடல்தான் எனக்கு முதலில் அறிமுகம் . என் குரலுக்கு சரியாக அமையும் பாடல் என (தவறாக) நினைத்து, ஏதாவது ஒரு போட்டியில் இதை பாட வேண்டும் என எண்ணியிருந்தேன் . (நல்ல காலம் அது ஈடேரவில்லை.) பின்பு ஒரு முறை சிங்கப்பூர் வானொலியில் (ஒலி 96.8), 'உறவுகள் தொடர்கதை' என்ற பாடல் ஒலியேற்றப்பட்டபோது , அந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது . முதல்முறை அது எந்த படத்தின் பாடல் என கவனிக்கத் தவறியதால் , மீண்டும் அந்த பாடலை ஒலிபரப்புவார்களா என காத்திருந்த பொழுது, ஒலி அறிவிப்பாளர் கீதா அவர்களால் திரும்பவும் ஒலிபரப்பப்பட்டபோது, 'அவள் அப்படித்தான்' எனக்கு அறிமுகமானது. அதுமுதல் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவே முதலானது . நண்பர்களுடான பகிர்தலில் இது ஒரு பாலச்சந்தர் படம் என்றே தவறான தகவலே எனக்கு கிடைத்தது, ஞாயிறன்று வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்வரை .

இதுவும் ஒரு வகையான பாலச்சந்தர் வகைப் படமே . ஆனால் 'படாபட்' என கிறுக்குத்தனமாக உளரும் கதாநாயகி இல்லை இதில், லூசுத்தனமான விடுகதை போடும் கதாப்பாத்திரங்கள் இல்லை . இரத்தமும் சதையுமாக நம்மிடையே இருக்கும், நாமாக இருக்கும் கதாபாத்திரங்களே இவை . இவன் நல்லவன், இவன் கெட்டவன் என தீர்ப்புகள் இல்லை, க்ளைமாக்ஸில் திருந்துவனும் இல்லை, திருத்துபவனும் இல்லை . தீர்வும் இல்லை.

இரு கதாநாயகிகள் ஒருவனை காதலித்து, கதாநாயகன் அதில் ஒருத்தியை திருமணம் செய்யும்போது, இன்னொரு கதாநாயகி , இன்னொருவனை திருமணம் செய்தால், கற்பு போய்விடும் என, அந்த கதாநாயகியை சாகடிக்கும் தமிழ் சினிமா சூழலில் , இந்த படத்தில் , ஏற்கனவே இருவரால் காதலிக்கப்பட்டு, அதில் ஒருவனிடம் கற்பையும் பறிகொடுத்து அதனையும் மிகவும் மனத்தெளிச்சியுடனே செய்தவள், ஒரு கள்ளக் காதலனைக் கொண்டவளின் மகள் , இந்த கதாநாயகி என்பதே ஒரு புதுமை . இதில் நடித்த ஷ்ரீப்ரியாவிற்கு பாராட்டுகள் .

'எனக்கு ஒரு பசி , என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு பசி' என ஒரு காபரே ஆட்டக்காரி சொல்வது முதல் ஆரம்பிக்கிறது படத்தில் சாட்டையடிகள், உங்களுக்கும் எனக்கும் . கதாநாயகன் பெண்களை பற்றி குறும்படம் எடுக்க கோவையிருந்து சென்னை வருகிறான் . பெண்ணுரிமை பேசுகிறான் . கதாநாயகியின் சோகங்களை பரிவுடனே கேட்டுக்கொள்கிறான் . அவளின் 'கற்பு' கதை தெரிந்து அவளை காதலிப்பதாக 'க்ளைமாக்'சில் , அவளிடமில்லை , அவள் தோழியிடம் சொல்லி தன் புனித பிம்பத்தை காத்துக்கொண்டு, திருமணம் செய்வதோ , 'பெண்ணுரிமை' பேசாத , ஒரு அடக்கமான பெண்ணை .. .

கதாநாயகி , போலி வேஷங்களை சாட்டையடி அடிப்பவள். சோஷியல் ஒர்க்கரை பேட்டி காண செல்லும்போது, வேறு எந்த மேக்-அப்பும் வேண்டாம் , சோஷியல் ஒர்க்கர் என்னும் மேக்-அப்பே போதும் என்று சொல்பவள், ஆனால் தன் பெற்றோர் பாரிஸில் உள்ளனர் என போலி வேடம் போட எத்தளிப்பவள். சமூகத்திற்காக கணவன் மனைவியாக இருக்கும் பெற்றோர்களாலும், தன்னை காதலித்து சீரழித்தவன் தன்னையே தங்கை எனக்கூறி உறவுகளை கொச்சைப்படுத்துவதாக வாதம் செய்பவள் , உறவுகளை வெறுப்பதாக கூறுபவள் , உறவுக்காக, அன்புக்காக ஏங்கி ஒருமுறை இல்லை, இரு முறை ஏமாந்தாலும் மூன்றாம் முறையும் காதலிக்கிறாள் ஏமாறுவதற்காகவே .

மூன்றாவதாக ஒரு கேரக்டர் . கதாநாயகன் கமலின் நண்பனாக, கதநாயகி ப்ரியாவின் முதலாளியாக, ரஜினிகாந்த் . நம்மில் பலரின் பிம்பம் . பெண்களை போகப்பொருளாக எண்ணுபவன் . தன் சொந்தக்காலில் நிற்கலாம் என பெண்கள் நினைப்பதையே பாவம் என நினைக்கும் ஆச்சாரியான்(?) அவன் . சந்தர்ப்பம் கிடைக்கும்போது , கதாநாகியிடம் கலவிக்கும் ஆயத்தமாகிறான். அவள் அறைந்தவுடன் , கற்பழிக்க எத்தளிக்கவில்லை. 'உன்னை அடைந்தே தீருவேன்' என பொதுவான வில்ல வசனம் பேசவில்லை..... அந்த இடத்தை விட்டே ஓடிவிடுகிறான் . வாய்ப்பு கிடைக்கும் வரை நல்லவன் நம்மைப்போலவே .

கதாநாயகின் இரண்டாவது காதலன். ரவீந்தர் என நினைக்கிறேன் . நல்லவன். பக்திமான் . கதநாயகியுடனான உறவுக்குப்பின் தவறு செய்துவிட்டதாக அழுகிறான் . தவறை தெரிந்தே செய்த பின் , அதனை மறைத்து, பின்னர் உணராமல் செய்து விட்டதாக பாவமன்னிப்பு கேடபவர் எத்தனை பேர். ஆனால் இச்சை முடிந்தவுடன் தன் வேஷம் கலைந்து தன் காதலியை சகோதரி என்கிறான் . பக்திமான்களுக்கே உரிய புத்தி. குரூரம். வெளிவேஷம் .

க்ளைமாக்சில் நாயகன் மனைவியிடம் (சரிதா?), நாயகி 'பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்' எனக்கேட்க, அவள் ' எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என 'அதனால்தான் நீ சந்தோஷமாய் இருக்கிறாய்' என்பாள் கதாநாயகி. ’அவள் மீண்டும் இறந்து போனாள், அவள் இறப்பாள், பிறப்பாள், இறப்பாள். . . . அவள் அப்படிதான்’’என்ற பின் குரலோடு படம் முடியும் . இந்த படத்தில் எந்த தீர்ப்பும் சொல்லப்படவில்லை . யாரும் திருந்தவில்லை. எனவே அவள் மட்டுமில்லை அவர்கள் எல்லோருமே அப்படித்தான் .

இயக்குனர் ருத்ரையா மனித உறவுகள் , எண்ணங்களோடு ஒரு காவியமே உருவாக்கியிருக்கிறார் . பாலச்சந்தர் போன்றவர்கள் அளவுக்கு மீறி போற்றப்படும் சூழலில், ருத்ரையா போன்றோர் வாய்ப் பில்லாமல் தவிப்பது தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு . பெயரை வைத்து அவர் தெலுங்கர் என நினைத்தேன். ஆனால் அவர் சேலம் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்தவர் என்றும், இன்றும் திரைப்படம் எடுப்பதே இலட்சியமாக இருப்பதாகவும், கார்த்திக்கை வைத்து ஒரு த்ரில்லரை உருவாக்கும் பணியில் இருப்பதாகவும் ஒரு நண்பர் மூலமாக அறிந்தேன் . குத்தாட்ட கூமுட்டைகளிடமிருந்தும் பஞ்ச் வசன பரதேசிகளிடமிருந்தும் தமிழ் சினிமாவுக்கு எப்போது விடுதலையோ ?

காக்காக்கூட்டம்

அடுத்த மாதம் 23-ந் தேதி முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டுவிழா. இதற்காக 22 மற்றும் 23-ந் தேதி அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.
தமிழ் திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பாராட்டு விழா நடக்கிறது. இது குறித்து விழாக்குழுவின் தலைவர் ராம. நாராயணன், செயலாளர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கருணாநிதியின் வரிச்சலுகை, படப்பிடிப்பு கட்டணக் குறைப்பு ஆகியவற்றால் சிறு முதலீட்டாளர்களுடன் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. விழா சிறப்பாக நடைபெற, நடிகர்சங்கம் சார்பில் சத்யராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், தொழிலாளர் சம்மேளனம் சார்பில் விஜயன் தலைமையில் ஒரு குழுவும், விநியோகஸ்தர் கூட்டமைப்பு சார்பில் அருள்பதி தலைமையில் ஒரு குழுவும், திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அண்ணாமலை, அபிராமி ராமநாதன் ஆகிய இருவர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழாவில் கலைநிகழ்ச்சி, ஓரங்க நாடகம், காமெடி தர்பார், இன்னிசை என நவரசங்களும் இடம் பெறுகிறது. கருணாநிதியின் புகழ்பாடும் ஒரு புத்தகமும் விழாவில் வெளியிடப்படுகிறது.

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கில் அனுமதிக்கப்படுவர். அதற்காக கவலை வேண்டாம். எப்படியும் சன் டி.வி.யில் ஒரு சன்டே இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாமலா இருப்பார்கள்!
நன்றி : சினிசௌத்

தெய்வங்களான பலி ஆடுகள் ..

'தான்' என்ற ஆணவத்திற்காகவும் 'தன் சாதி உயர்ந்தது' என்ற போலி கௌரவத்திற்காகவும் விலையாகி பெற்ற தந்தையும் உடன் பிறந்த சகோதரனும் சேர்ந்து கைகோர்த்து நின்று எத்தனையோ கன்னிப் பெண்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள் . தலையை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள் . இப்படி கொலை செய்த பின் மனசாட்சி உள்ள சில மனிதர்கள் அதை நினைத்து வருந்தியிருக்கிறார்கள் . அதோடு பரிதாபமாக செத்த அந்த கன்னிப் பெண் பின்னாளில் ஆவியாக தனக்கோ , தன் குடும்பத்திற்கோ, அல்லது தன் வாரிசு பரம்பரையினருக்கோ தீங்கு செய்வாளோ என்ற பயமும் இருந்திருக்கிறது. எனவே கொலையுண்ட கன்னிப்பெண்ணை குலதெய்வமாக்கி வழிபட்டு தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்திட முயன்றிருக்கிறார்கள் . அதன்மூலம் மன அமைதி அடைந்திருக்கிறார்கள் .

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் கடந்து வந்த பாதை மிகக்கடுமையானது . பெண்கள் அக்கினிக் குண்டங்களையும் நெருப்பாற்றையும் நீந்திவந்த நெடிய வரலாற்றுக்கு சான்றாதாராமாக எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளைக் கூறமுடியும் . இத்தகையை கதைகளில் எல்லாம் சம்பந்தப்பட்ட பெண் தவறு செய்தாள் என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை . அவள் அழகாய் இருந்தாள் என்பதைத் தவிர .

சாதிய பிரமைக்கு ஆட்பட்ட ஒருவன் , வலிமையானவனை எதிர்த்து போராட முடியாமலும் , தன் சாதி போலி கௌரவத்தை விட்டுக்கொடுக்கமுடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தபோது , தான் பெற்ற மகளையே அழித்துவிடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளான் .

இங்கே சொல்லப்படப்போகிற கதையும் வழக்கமான 'கன்னித் தெய்வ வழிபாடு' சார்ந்த கதைதான் . ஆனால் அதில் அந்த பெண்ணை கொலை செய்த முறை மட்டும் புதுமையாக இருந்தது .. இனி கதை .. அடுத்த பதிவில் .

நன்றி : தாராமதி

கருணாநிதி.. ஜெயலலிதா.. கிறிஸ்தவம்

'கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரமாகக்கூடாது' என்று சிந்தித்த கருணாநிதி நாத்திகர் என சொல்லிக்கொள்வது ஒரு முரண்பாடுதான் . இதே சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கு வந்தது.. அவர் இயேசு.. அவருக்கு கோபம் வந்ததாக பைபிளில் கூறப்படும் ஒரே இடம் அதுதான் . இறைவனின் இடத்தை கள்வரின் குகைகளாக்காதீர் என கோபப்பட்டதாக கூறப்பட்டுள்ளது .எப்போதும் அப்படித்தான் .. கள்வர்கள் குடியிருக்கும் இடம் கோவில்தான் போலிருக்கிறது .. இயேசு காலத்திலும் .. கருணாநிதி காலத்திலும் ..

ஒரு கிறிஸ்தவனாக நான் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல நினைத்த ஒரு சட்டம் . கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் . ஒரு போப் சொல்ல வேண்டியதை .. கிறிஸ்தவ மதகுருமார்கள் கடைபிடிக்க வேண்டியதை, ஜெயலலிதா செய்துள்ளார் . 'பல்லுக்கு பல் ..கண்ணுக்கு கண் ' என்ற சட்டத்தை கடிந்து , 'இறைவனையும் மனிதனையும் அன்பு செய்வதே' தன் சட்டமாக்கி , அந்த நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க சொன்ன இயேசுவை பின்பற்றுவதாக சொல்லும் இந்த கிறித்துவ மத குருமார்கள் 'மதமாற்றம்' என்பதை இயேசுவே சொன்னதுபோல் திரித்து அலைவது இயேசுவிற்கு செய்யும் பெரும் துரோகம் .. கிறிஸ்தவ மதத்தை உருவாக்கிய பவுல் கூட , அவர் பல பிற்பட்ட சட்டங்களை வலியுறுத்தியிருந்தாலும் , மதமாற்றத்தையல்ல மனமாற்றத்தைத் தான் வலியுறுத்தியுள்ளார் . கிறிஸ்தவர்கள் தன் வாழ்வியல் நடைமுறைகளால் , மற்றோரை மனமாற்றம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளார.. ஆனால் பல அரசியல்களில் சிக்குண்ட கிறிஸ்தவ மதங்கள் , கிறிஸ்துவை பின்பற்றுவதாக சொல்லும் பல போலிக்கள் இன்று பல அரசியல் காரணங்களுக்காக மதமாற்று வைபவத்தை நடத்துவது இயேசுவுக்கு செய்யும் துரோகம் . கிறித்துவம் தவிர மற்ற எந்த காரணத்திற்காகவும் , பணத்திற்காகவோ , வியாதி , சாதீய காரணங்களுக்காகவோ, மற்ற எந்த காரணத்திற்காகவோ மதம் மாறுவதும் தடை செய்யப்படவேண்டும்., இதனை செய்யவேண்டியது மதகுருமார்கள் .. இதனை இந்த போலிக்கள் செய்யாமல், கிறிஸ்துவத்தை உயர்த்தும் இந்த சட்டத்தை எதிர்த்தது கேலிக்குறியது.

சினிமாவும் அரசியலும்

சினிமாவும் மக்களை ஏமாற்றுகிறது. அரசியலும் மக்களை ஏமாற்றுகிறது . சினிமாவில் காட்சிகளின் மூலம் மக்களை அழ வைக்கிறோம் . சிரிக்க வைக்கிறோம் . எமோஷனலாக வைக்கிறோம் . அரசியல் கட்சிகளும் இதே உணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்துகினறன. தலைவர்களின் அறிக்கைகள் , மேடை பேச்சுகளின் மூலம். இப்படி ஒரே காரியத்தைச் செய்யும் சினிமாவும் , அரசியலும் சில விஷயங்களில் மட்டும்தான் வித்தியாசப்படுகிறது .

சினிமாத் துறையில் எதிரும் புதிருமாக இருக்கும் நடிகர்கள், விழா மேடைகளில் சந்தித்துக் கொள்ளும்போது ஆரத் தழுவி அன்பு செலுத்துவார்கள் . மைக்கைப்பிடித்து பாசமழை பொழிவார்கள். உள்ளுக்குள் ஒருத்தர்மீது இன்னொருத்தருக்கு கருத்து வேறுபாடும் , கசப்பான எண்ணமும் இருக்கும் .
அரசியலில் இதற்கு நேர்மாறானது நடக்கும், மேடைகளில் ஒருத்தரை ஒருத்தர் திட்டித் தீர்ப்பார்கள். ஜென்ம விரோதி போல் வார்த்தைகளை வீசிக் கொள்வார்கள் .ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் அன்னியோன்யத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள் .

இது போன்ற சின்ன விஷயங்களைத் தவிர்த்து , மற்ற எல்லா வகையிலும் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை . தமிழக அரசியலில் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாக சினிமா கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தி வருவதற்கும் இந்த ஒற்றுமைதான் காரணம்.

அரசியலை மிஞ்சியதுதான் சினிமா. கயவர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்று சொல்வார்கள். சமீப காலமாக அந்த நிலைமை மாறி , சினிமா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது .
சமுதாயம், இன்று சினிமாக்காரர்களை தேவதூதர்களாக நினைக்கிறது. அதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளும் சினிமாக்காரர்களின் முதுகில் பயணம் செய்கின்றன் . கட்சிகளின் இந்தக் கணக்கு புரியாமல் நம் நட்சத்திரங்கள் அரசியலில் ஆரவம் காட்டி வருகின்றனர் . இவர்களது ஆரவ்த்தின் பிண்ணணி மக்கள் சேவை அல்ல . சினிமா மீது அவர்களுக்கிருக்கும் அவநம்பிக்கைதான் .

சினிமாவில் மார்க்கெட் போய்விட்டால் மனைவிகூட மதிக்கமாட்டாள் . அப்படியொரு நிலைமைக்கு வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் சினிமாவைப்போலவே கவர்ச்சிகரமான தொழிலாக இருக்கும் அரசியலுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறாரகள்.

இவர்கள் அரசியலை ஆக்ரமித்தால் , எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் ?

சினிமாக்காரர்களுக்கு ஈகோ பல மடங்கு அதிகம் . கல்யாண வீட்டுக்குப் போனால் மாப்பிள்ளையாகவும் , சாவு வீட்டுக்குப் போனால் சவமாகவும் இருக்க நினைப்பார்கள். எங்கும் நாமே முதன்மையான் ஆளாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள் .

இப்படிப்பட்ட சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உடைய சினிமாக் கலைஞர்களால் அவமானத்தையோ , புறக்கணிப்பையோ தாங்கிக் கொள்ள முடியாது .

பொதுவாகவே அரசியலில் தனிப்பட்ட ஒருவர் செல்வாக்குப் பெற முடியாது . அப்படிச் செல்வாக்குத் தேடி வரும்போது, கட்சித் தலைமையே கட்டம் கட்டி, அவரைச் செல்லாக் காசாக்கி வேடிக்கை பார்க்கும் . பல கட்சிகள் உருவானதற்கும் , பல தலைவர்கள் உருவானதற்கும் இப்படியான அரசியல் விளையாட்டுக்கள் தான் காரணமாக இருந்திருக்கின்றன.

இந்த அனுபவம் சினிமா கலைஞர்களுக்கு ஏற்படும்ப்பொது அவமானத்தை அதிக நாட்கள் அவர்களால் தாங்க முடியாது. தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபிப்பதற்காக உடனே தனிக்கட்சி தொடங்குவார்கள் . புற்றீசல் போல் பெருகும் நட்சத்திரங்களின் தனிக் கட்சிகள் தாக்குப் பிடிக்குமா என்றால் முடியாது என்ற சொல்வேன். சில வருஷங்கள் இயங்குவது போல் தெரியும். சில வருஷங்கள் பரபரப்பாக இயங்குவது போல் தெரியும் அப்புறம் அடங்கி போய்விடும் .

கலை வேறு , அரசியல் வேறு என்ற முடிவுக்கு வந்து மக்கள் தெளிந்து விடுவார்கள் . அந்த தெளிவின் அடிப்படையில் மக்கள் சொல்லும் தீர்ப்பு நட்சத்திரங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பது மட்டும் உறுதி.


- கேயார் எழுதிய 'இதுதான் சினிமா'விலிருந்து உருவப்பட்டது .


சினிமாத்துறையைப் பற்றி அவர் எழுதிய மற்றொரு பகுதி கீழே கொசுறாக..

சினிமாத்தோழில் முடங்கியதற்கு , ப. சிதம்பரம் கொண்டுவந்த வி.டி.ஐ.எஸ் திட்டம் ஒரு காரணம் . இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வெள்ளையாகிவிட்டது. இப்படி வெள்ளையாக்கப்பட பணம் சினிமாவில் புழங்கி வந்த பணம்தான் . வி.டி.ஐ.எஸ் திட்டத்தினால் அந்த பணத்தை இழந்துவிட்டது சினிமாத்துறை !

பட்டம் சூட்டு விழா

மாமனிதர் மகான் ஷிவாஜி கணேஷன் அவர்களின் சிலை திறப்பிற்கு பெரும் ஆபத்து வர இருந்த நிலையில் , அவரின் ஆருயிர் நண்பரும், அரசியல் சாணக்கியரும், முக்கியமாக இன்றைய முதல்வருமாகிய தலைவர் கலைஞர் அவர்கள் ஒருவாரமாக தூங்காமல் உறங்காமல் மன உளைச்சல் கொண்டார்கள் .

சிலைக்காக மன உளைச்சல் கொள்வது இதுதான் முதல்முறையா? இல்லை இல்லை பல முறை பல்லாயிரம் முறை. சுனாமி அலை வந்த போது கூட வள்ளுவர் சிலைக்கு ஆபத்தோ என்று மன உளைச்சலுக்கு உள்ளானவர்தான் நம் முதல்வர் .

இதுமட்டுமா கண்ணகி சிலைக்காக எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டார் நம் தலைவர் என இந்த உலகிற்குத் தெரியாதா என்ன?

நமது முதல்வரின் மன உளைச்சல்களை பாராட்டி "சிலைகாக்க மன உளைச்சல் கொண்டான்" என்ற பட்டத்தை இம்மாமன்றம் சூட்டுகிறது .

பி.கு :

இம்சை அரசன் படத்திற்கும் இந்த பட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிக்கொள்கிறேன் .

சினிமா ...சிலை... கூத்து

சிவாஜி வேடத்தில் நாடகத்தில் ஒருவர் நடித்தாராம்.. மிகவும் நன்றாக நடித்தாராம்.. கண்டிப்பாக நனறாக நடித்திருப்பார். அவரை புகழ்ந்து பேசிய ஒருவர் அவரை 'சிவாஜி' என்று பட்டம் சூட்டினாராம் . ஆதலால் அவர் பெயர் சிவாஜி கணேசனாம்.. 'சிவாஜி' நாடகத்திற்கு பிறகு அவர் பாகப்பிரிவினை , தெய்வமகன் போன்ற படங்களில் பல வேடங்களில் சிறப்பான வேடங்களை வழங்கவில்லையா? அந்த வேடங்கள் பெயரில் அவர் பெயர் ஏன் மாறவில்லை . இதில் ஆரம்பித்தது.... கேப்டன் பெயர் வைத்த படத்தில் நடித்ததில் கேப்டன் என்ற பட்டம் வந்து சேர்ந்து விட்டது . அவர் 'கூலிக்காரன்' என்றொரு படத்திலும் தான் நடித்தார் . ஏன் அந்த பட்டம் வந்து சேரவில்லை ? சொரிந்து விட்டவர்களுக்கு தெரியாதா எந்த இடத்தில் சொரிந்துவிட்டால் சுகமாக இருக்குமென்று?

ரசிகர் மன்றம் வைப்பது சாமான்யர்கள் செய்யும் வேலை.. அரசாங்கம் அதனை விட பெரியது இல்லையா.. ஆதலால், சிலை வைக்கிறார்கள் .. மாமனிதராம் ..மஹாத்மாவாம்.. ம்ம்.. தெய்வமாவது எப்போதென்று தெரியவில்லை ? இனிமேல் மணிமண்டபம் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை வரும் . அதற்கும் இந்த அரசாங்கம் செவிசாய்க்கும்.. சாதனைப் பட்டியலிலும் அது இடம் பெறும். இதைத்தானே இந்த அரசாங்கங்கள் செய்துகொண்டிருக்கின்றன.. வள்ளுவருக்கு பெருமை சேர்க்க கோட்டம் கட்டினார்களாம், சிலை வைத்திருக்கிறார்களாம் .. வள்ளுவனுக்கு பெருமை , தமிழனுக்கு பெருமை திருக்குறள்தானே தவிர கோட்டம் இல்லை . சிலை இல்லை .

மக்களின் பணத்தை விவேகமாக செலவு செய்வது அரசாங்கத்தின் கடமை இல்லையா? அதனை ஒவ்வொருவருக்கும் சிலை வைப்பதையும் வெட்டி செலவு செய்வதையுமா மக்கள் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்?

இதில் வேறு நட்பின் இலக்கணமாக சிலை வைக்கிறார்களாம். நட்பின் இலக்கணததை காண்பிக்கவேண்டுமென்றால். தன் பணத்தில் , தன் சொந்த இடத்தில் , தங்க சிலையையே வைக்கலாமே? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்களாம் . இதுதான் நட்பாம். வெட்கமாயில்லை .

சிலை வைக்கவேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள், மேடையில் பேசியவர்கள், இந்த விழாவிற்கு வந்து தியாகம் செய்தவர்கள், ரசிக மகாஜனங்கள் இவர்கள் பணம் கொடுத்து, வசூல் செய்து சிலையை, தங்கள் சொந்த இடத்திலோ, தனியார் இடத்தை பணம் கொடுத்து வாங்கியோ, தங்கள் அன்பை காண்பித்திருக்கலாமே? பணம் இல்லாதவர்களா இவர்கள்? பஞ்ச பரதேசிகளான மக்களின் வரிப்பணம்தானா இவர்களுக்கு கிடைத்தது.?

மகாநடிகர் கணேசன். அவருக்கு சிலை வைத்தாயிற்று . ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் அவருக்கும் ஒரு சிலை. . சிரித்தால் குழிவிழும் பிரபுவுக்கு. அவருக்கு ஒரு சிலை . இரும்பு உடம்பு சரத்குமாருக்கு. அவருக்கு ஒரு சிலை. தன் ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்து கதாநாயாகனாய் ஆனதற்காக தனுஷுக்கு ஒரு சிலை. அறுபதிலும் தலைகீழாய் உதைப்பதற்காக விஜய்காந்திற்கு சிலை.... போங்கடா நீங்களும் உங்க சிலையும் ...

சூடு தணிய (ரசிக குஞ்சுகளுக்கல்ல....)

1)சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்... என் பல்பத்தை அவன் எடுத்துட்டான் .. என்னிடமிருந்து , பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து பல்பத்தை அவன் எடுத்துட்டான். ......

சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்.. என் தொடையை கிள்ளிட்டான் ..என்னை, பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னை கிள்ளிட்டான் .


- தாவியதற்கு சின்னப்புள்ளத்தனமான காரணங்களைக் கூறி சரத்குமார் ஜெயாவில் பேட்டி
2) இந்த விஜய்காந்த் ... ரஜினிகாந்த் நினைச்சா ..

- காவிரி பிரச்சினையை தீர்க்க பிரதமரை பார்க்க சென்றதாக ஊடகப் புரளிகளுக்கிடையே , இமயமலை சென்றதாக ரஜினி கூறி விமான நிலையத்தில் உளறியது ..


3)நாங்கள் இருவரும் நண்பர்கள் ..ஆதிகாலத்திலிருந்தே அடிச்சுக்குவோம்.. நான் அவனை அடிப்பேன் அவன் சுற்றியுள்ள எல்லோரையும் அடிப்பான். கவுண்டமணி செந்தில் காமெடியை விட கலக்கலா இருக்கும் .
-இதெல்லாம் யார் சொன்னது என்று சொல்லத்தேவையில்லை4) புரச்சித்தலைவி வால்க ..புரச்சித்தலைவி வால்க ..

- பாராளுமன்றத்தில் ராமராஜனின் கன்னி மற்றும் இறுதி உரை5)எங்க நாட்டுக்கு வராதீங்க .. அங்கே ஆடு மாடு மேய்க்கிறவர்கள்தான் இருக்கிறார்கள் என்று என் அப்பனே மலேஷியாவில் சொல்லியிருக்கான் ..

- முன்னால் எம்.எல்.ஏ ராதாரவி சிங்கப்பூரில் பிச்சை எடுக்கும்போது முழு போதையில் உளறியது6)தலீ..வா..

- தமிழக ரசிகக்குஞ்சுகளின் தாரக மந்திரம்

விஜயகாந்தின் ஊழல் ஒழிப்பு

விஜயகாந்த் அவர்கள் ஊழலை ஒழிப்பதற்கான வழிகளை இரவும் பகலும் ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை தொடர்ந்து செய்து வருகிறார் என நாம் அறிந்ததே.. அதன் அடுத்த கட்ட பணிகளில் இப்போது இறங்கியுள்ளார் .


Image hosted by Photobucket.com
நன்றி : தினமலர்

ச்ச்சீ .. நீயெல்லாம் ஒரு தெய்வமா..??

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . நான் நினைத்திருக்கும் கடவுள் அய்யப்பனாக இருக்கலாம் .ஆனால் அக்கடவுள் மனத்தையன்றி , குறி உட்பட வேறெதும் பார்க்கமாட்டான் என்ற எண்ணம் எனக்குண்டு . தன்னை பார்க்கத்தகுதி ஆண்குறிதான் என ஒருவன் நினைத்தால் அவன் இறைவன் இல்லை , இழிபிறவி ... நான் நினைத்திருக்கும் கடவுள் இவற்றைவிட மேலானவன் .

நான் நினைத்திருக்கும் கடவுள் இயேசுவாக இருக்கலாம் . பிறந்த குழந்தை கூட , திருமுழுக்கு பெற்றால்தான் மோட்சம் என்று சொல்லும் மூடனாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .

நான் நினைத்திருக்கும் கடவுள் அல்லாவாக இருக்கலாம் . ஆனால் தீயவனைக்கூட கொன்றால்தான் மோட்சம் என்று சொல்லும் கொடியவனாக கண்டிப்பாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .

கடவுள் என்பவன் , அவனி(ளி)ன் பெயர் என்னவாக இருந்தாலும் கருணை உருவானவாகவே இருக்கமுடியுமேயன்றி , யூதர்களின் கடவுள் என்றோ , சில ஜாதியினர் மட்டுமே தொட முடியும் என்ற எண்ணம் கொண்டவனாகவோ , தெய்வ பாஷை என்று ஒன்றை கொண்டவனாகவோ , ஆண்/பெண் என்றோ , வி.ஐ.பி என்றோ , ஏன் குளித்து வருபவன்/வராதவன் என்றோ பேதம் பார்ப்பவனாகவோ எப்படி இருக்கமுடியும் . அவ்வாறு ஒரு கடவுள் இருக்கிறான் என்று சொல்லுவது ஏமாற்று வேலை அன்றி வேறென்ன? எளியோரை, ஜாதியின் பெயரால் , இனத்தின் பெயரால் , அடக்குவது தானே மதம் உருவாக்கியவர்களின் குறிக்கோள் . அது மிகவும் வெற்றிகரமான யுக்தி என மீண்டும் மீண்டும் நிருபனமாகி வருகிறதே .

உண்மையான கடவுள் எங்கும் இருக்கிறான் .. தூணிலும் இருக்கிறான் , துரும்பிலும் இருக்கிறான் .. ஆனால் அவன் வர அருவருப்படையும் ஒரு இடம் கோயிலாகத்தான் இருக்கமுடியும் . எல்லோரையும் வித்தியாசமினறி அனுமதிக்கும் ஒரு வியாபாரகூடத்திலோ, திரையரங்கிலோ இறைவன் இன்பமாக வருவானெயன்றி , சில சாதியினரை கருவரையில் அனுமதிக்கும் கோயிலுக்குள் எப்படி இறைவன் குடியிருப்பான் ? பெண்களை திருப்பீடத்தில் பூஜை செய்ய அனுமதிக்காத மாதா கோவிலுக்குள் எப்படி வருவான் ?

'பெண்கள் உள்ளே வந்தால் ஆண்களின் மனக்கட்டுப்பாடு தவறிவிடும் என்பதற்காக இப்படியொரு நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் பெண்களும் தைரியமாக கோயிலுக்குள் வரலாம்' ..இது நம்ம குருசாமி நம்பியார் கூறியது . அடக்கடவுளே மதவாதிகளுக்கு மட்டுமே இப்படி ஒரு லாஜிக் கிடைக்கிறது என்று தெரியவில்லை . ஏன் பர்தா போடுகிறார்கள் என்றாலும் , ஏன் பெண்களை திருப்பலி செய்ய அனுமதிப்பதில்லை என்றாலும் இதே மாதிரியான பதில்கள்தான் மதவாதிகளிடமிருந்து வருகிறது . ஆண் தவறு செய்வானென்றால் அவனைத்தானே கொவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது . ஆண் கண்ணைத்தானே கட்டவேண்டும். எதற்கு பெண்ணுக்குத் தணடனை ? மதங்கள் மாறினாலும், மதவாதிகளின் எண்ணங்கள் ஏன் ஒரே மாதிரியாய் உள்ளது?

Related Links :

http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_29.html
http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post.html