சிங்கப்பூரில் சன் தொலைக்காட்சி மட்டுமே இந்திய நேரப்படி (2.30 மணி நேர தாமதத்தில் ) ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது . அதாவது ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியை, அதே வேளையில் சிங்கப்பூர் நேரம் 11.30 மணிக்கு பார்க்கலாம் . மே 2006 யில் நேர மாறுதல் கொண்டுவரப்பட்டது . ஒவ்வொரு நிகழ்ச்சியும் இந்தியாவில் ஒளிபரப்பும் அதே நேரம் ஒளிபரப்பு ஆரம்பமாகியது .ஆனால் ஒரு வார கால இடைவெளியில் . அதாவது முந்தின வாரம் இந்தியாவில் ஒளிபரப்பின 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' அடுத்த ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் .ஆனால் சன் செய்திகள் மட்டும் அதே வேளையில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன . இதனால் சன் செயதிகளைத் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே வரும் விளம்பரங்களை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் என்ன நல்லது தானே என்று நினைத்தாலும் , விளம்பர நேரம் எல்லாம் , சன் நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பாக, திரும்ப திரும்ப மெகா சீரியல் பாட்டும் நடனமும் கழுத்தறுக்கின்றன் .
வாரநாட்களில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த , மெகாத்தொடர் இல்லாத நிகழ்ச்சிகளாகிய, சூப்பர் 10, திரைவிமர்சனம் போன்ற நிகழ்ச்சிகள், மீனா நடிக்கிற ஒரு மெகாத்தொடரருக்காக நேரம் மாறியதால் , சன் தொலைக்காட்சி என்றாலே மெகாத்தொடர் என்று அலுப்பாகிபோன நேரத்தில், விஜய் தொலைக்காட்சியும் சிங்கப்பூரில் ஒளிபரப்பைத் தொடங்கியது . நல்லவேளையாக மெகாத்தொடர்களை மட்டும் நம்பாமல், மற்ற சில நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது .
முதலில் கவனத்தை கவர்ந்த நிகழ்ச்சி 'க்ராண்ட் மாஸ்டர்' . 21 கேள்விகளுக்குள் , மனதில் நினைத்த நபரை திரு,ப்ரதீப் அவர்கள் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி . விளையாட்டீனூடே பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சி . இது ஒரு செட்-அப் ஆக இருக்க வாய்ப்புள்ளது என சிலர் சொல்லவும் செய்தார்கள். ஆனால், உண்மையில், திரு,ப்ரதீப்புக்கு இந்த திறமை இல்லாமல் செட்-அப்பாக இருக்குமென்றால், ஏதாவது ஒரு சினிமா நடிகர்தான் இந்த நிகழ்ச்சியை செய்திருப்பார் .
எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு நிகழ்ச்சி 'நீயா? நானா?' .. பலமுறை விவாதங்கள் தலைப்பை விட்டு சென்றாலும், நமக்கு பிடிக்காத கருத்துகள் முட்டாள்தனமான கருத்துகள் எனத் தோன்றினாலும் , விவாதம் மிக சூடாகவும் சுவையாகுமே உள்ளது . நடத்துபவரும் திறமையான் சொல்லாடலுடன் கருத்துகளை கூறுகிறார் . ஆனால் முக்கிய விருந்தினராக வருபவர் பெரும்பாலும் சினிமா, தொலைக்காட்சித் துறையினரே .
கல்லூரி மாணவர்களுக்கிடையே கலைநிகழ்ச்சி போட்டி நடத்தும் EQவும் அருமையான நிகழ்ச்சி . அதிலும் , மெல்லிசையில், கலந்து கொள்கின்ற அனைவருமே பின்னுகிறார்கள் . டேப் ரிக்கார்டை போட்டு வாய் மட்டும் அசைக்கிறார்களோ என்ற ஐயம் வருமளவுக்கு அருமையாக பாடுகிறார்கள் . போட்டிக்கு பின் நடுவர்கள் சொல்லும் பின்னூட்டங்களும் அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருக்கும் .
சன் தொலைக்காட்சியிலும் திரு .ரமணன் நடத்திய ஒரு நிகழ்ச்சி இருந்தது . கார்த்திக் போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிண்ணணி பாடகர்களானார்கள். இப்போது என்ன ஆனது எனத் தெரியவில்லை .
காஃபி வித் அனு .. இதுவும் வழமையான பேட்டி போல அல்லாமல் வித்தியாசமாக உள்ளது .. நடிகர் ஜெயராம் , கங்கை அமரன குடும்பம் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன . இது கலந்து கொள்கின்ற விருந்தினரை பொறுத்து இனிமையாகவும் கொடுமையாகவும் அமையும்.
ஜோடி நம்பர்-1 , இது விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது . எனக்கு பொதுவாக போட்டி நிகழ்ச்சிகள் பிடிக்கும் . தொலைக்காட்சி நடிகர்கள் ஆட்டமும் அதற்கு நடுவர்கள் சொன்ன பின்னூட்டமும் சுவாரஷ்யமாகவே இருந்தது . . இதில் சேத்தன், ப்ரியதர்ஷினி , விஜய் ஆனந்த் தவிர மற்ற அனைவரும் புதுமுகமாகவே எனக்குத் தெரிந்தனர் . மெகாத்தொடர்களை பார்த்திருந்தால் எல்லோரையும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் . ராகவ் ப்ரீத்தா ஜோடி தொடர்ந்து நன்றாக ஆடினர் . விஜய் ஆனந்த் இறுதி சுற்றில் அருமையாக செய்திருப்பார் . ஆனால் , முன்றைய சுற்றுகளில் நன்றாக ஆடியிருந்தாலும் , இறுதி சுற்றில் ,பூஜா -வெங்கட் ஜோடி மற்ற இருவரை காட்டிலும் சாதரணமாகவே செய்திருந்தாலும் , அவர்களே SMS ஓட்டின் மூலம் வெற்றி பெற்றனர் . இதற்கு காரணம் திருமணம் ஆகாத பூஜாவா அல்லது மற்ற ஜோடிகளின் 'ஆத்தில்' இருந்து உறவினர்கள் கொடுத்த பேட்டிகளா எனத் தெரியவில்லை .
ஆனால் இது அடுத்த சுற்றில் மிகவும் சுவாரஷ்யமின்றி முடிந்தது . சன் குழுவினர் ஜோடி நம்பர்-1 இல் கலந்துகொள்ள கூடாது என நெருக்கடி கொடுத்ததாக வந்த செய்திக்கும் ,. நடிகர்களின்றி, நடணக்கலைஞர்களை வைத்து ஜோடி நம்பர்-1 நடந்ததற்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது .
அடுத்து 'கலக்கப்போவது யாரு' .. பலராலும் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இது என்று நினைக்கிறேன் . வெள்ளி இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி , சனி காலையும், ஞாயிறு மாலையும் மறுஒளிபரப்பாகி கொண்டிருந்தது . ஆதலால் இந்த நிகழ்ச்சியை தவறவிடமுடியாது . சிலமுறை மூன்று தடவையும் பார்க்கும் சந்தர்ப்பம் வரும் . ஆனால் , இந்த நிகழ்ச்சிக்கிடையேயும் சன் தொலைக்காட்சி குறுக்கே வந்துவிட்டது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கிய எல்லோரும் சன் தொலைக்காட்சியில் அசத்த வந்துவிட்டார்கள் . 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதைப் போல , கலைஞர்கள், தாமே சன் தொலைக்காட்சிக்கு வந்ததாக பலமுறை சொன்னார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எல்லோரையும் அப்படியே கடத்துவது எந்தளவு முறையான வியாபார முறை? . Business Etiquette உண்டா இதில்?
அதுவும் நிகழ்ச்சி பெயர் முதற்கொண்டு , எல்லாமே ஈயடிச்சான் காப்பி . சம்பந்தமே இல்லாது கோட் போட்டு கலக்கியவர்கள் , அதே சம்பந்தமே இல்லாத கோட்டுடன் வந்து அசத்துகிறார்கள் . அதில் கூட மாற்றம் இல்லை . விஜயில் விருந்தினராக வந்தவர்களின் சின்னி ஜெயந்த் நல்ல பின்னூட்டங்களையும் , சில நேரங்களில் தானே மிமிக்ரியும் பண்ணினார், ஆனால் சிரித்து மட்டுமே கொண்டிருந்த மதன் பாப், சன்னிலும் வந்து சிரிக்கிறார் ..
அது சரி , நிகழ்ச்சி சன்னில் வந்தால் என்ன , விஜயில் வந்தால் என்ன? நான் என்ன விஜயின் பங்குதாரரா .. கவலைப்படுவதற்கு .. ஆனால் நான் விரும்பும் நிகழ்ச்சி , சன்னிற்கு போனது கவலைதான் . விஜயைப் போல சன் , மறு ஒளிபரப்பு செய்யப்போவது கிடையாது . அவர்கள் நேரத்தை நிரப்ப நிறைய மெகாத்தொடர்களை வைத்துள்ளார்கள். மேலும் , ஒளிபரப்பாகும் நேரம்.. சனி இரவு 10.00 மணி . 10.30 மணிக்கு சன் செய்திகள்(சிங்கப்பூரில் சன் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பாவதால்) இடையூறு வேறு . 11:30 மணிக்கு முடியும் நிகழ்ச்சி .. எஸ். ஜே. சூர்யா வந்த நிகழ்ச்சி வரும் வாரம் ஒளிபரப்பாகும்.
'மக்கள் யார் பக்கம்' என்ற நிகழ்ச்சி ஈராண்டுகளுக்குமுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . அரசியல் தலைவர்களும் , பத்திரிக்கையாளரும் கல்ந்துரையாடும் நிகழ்ச்சி . செல்வி .ஜெயலலிதா ஆட்சியின்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுகவின் ஏழு கட்சி கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நேரம் . 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சியில் திரு.பொன்முடி கலந்துகொண்டிருந்த நேரடி ஒளிபரப்பின் போது , சன் தொலைக்காடசியின் பங்குதாரராயும் இருந்த திரு.கருணாநிதி , தொலைபேசியில் தொடர்பு கொண்டு , 'மக்கள் , தாம் யார் பக்கம் என்று முடிவெடுத்துவிட்டரே!! , இன்னும் என்ன இந்த நிகழ்ச்சி என திரு.பொன்முடியையும் , விஜய் தொலைக்காட்சியையும் கடிந்துகொண்டதாக படித்தேன் . அந்த வாரம் முதல் அந்த நிகழ்ச்சி தொடரவில்லையாம் . ஒரு நிகழ்ச்சியை இடையூறு செய்வது என்ன நாகரீகமான் செயலா, அதுவும் ஒரு போட்டி தொலைக்காட்சியின் பங்குதாரர் . காரணமும் நியாயமாகப்படவில்லை .. தலைப்பைத் தெரிவு செய்வதும் அந்த தொலைக்காட்சியின் தனியுரிமை , மற்றும், 'மக்கள் அன்று உங்கள் பக்கமாய் இருந்தாலும் , அதற்கு முன் உங்கள் எதிர்ப்பக்கம் இருந்தார்கள். இனிமேலும் இருப்பார்கள் ' 'மக்கள் யார் பக்கம்?' என்பது எப்போதும் விடைதெரியா கேள்விதான் .
இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சி , பெரும் வெற்றியடையக்கூடாது என விழைகிறேன் . அப்போதுதான் அதை தொடர்ந்து இடையூரில்லாமல் பார்த்து ரசிக்கமுடியும் .
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
விஜய் , சன் மற்றும் அரசியல்
Posted by
-L-L-D-a-s-u
at
12
comments
Labels: தொலைக்காட்சி
Subscribe to:
Posts (Atom)