பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரத் தோட்டம் கிட்டத்தட்ட ஒரு காலேஜ் போலவே மாறிப்போயிருக்கிறது. எம்.எல்.ஏ., எம்.பி., நிர்வாகி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் புத்தகமும் கையுமாக இருக்கிறார்கள், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, பரீட்சை வேறு எழுதுகிறார்கள்!
தைலாபுரம் தோட்டத்தில் ஒரு அரசியல் பயிலரங்கத்தை அமைத்து அதன்மூலம் தனது கட்சியினருக்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்த பார்வையை விசாலமாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். கல்வித்துறையில் பிரபலமானவர்களை வரவழைத்து வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்கிறார் அவர். அண்மைக்காலமாக வகுப்புகள் நடத்துவதோடு, தேர்வுகள் நடத்தி மார்க்கும் போட ஆரம்பித்திருக்கிறார் டாக்டர்! ஒவ்வொரு சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் இந்தத் தேர்வுகள் குறித்து அறிந்துகொள்ள நாமும் பயிலரங்கத்துக்குச் சென்றோம்.
ஏதோ கல்லூரிக்குள் வந்துவிட்டோமோ என்று சந்தேகம் எட்டிப்பார்க்கும் அளவுக்குக் கையில் நோட்டுப் புத்தகத்தோடு இருந்தார்கள் பா.ம.க&வினர். சனிக்கிழமைகளில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ&க்களாக இருப்பவர்களுக்கு வகுப்புகள் அமர்க்களப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்ட அளவில் இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இட ஒதுக்கீடு, பெரியார் கொள்கைகள், சுயமரியாதை சம்பந்தமான விஷயங்கள், அம்பேத்கர் பற்றிய செய்தி கள், உலக வரலாறு, இந்திய, தமிழக அரசியல் வரலாறு, அரசியல் கட்சிகள் பற்றிய விவரங்கள் என பாடப்பிரிவுகள் நீண்டுகொண்டே போகின்றன. இவற் றோடு லேட்டஸ்ட் விவகாரங்களான துணை நகரத் திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது, நவீன வேளாண்மையில் இருக்கும் குறைகள் ஆகியவை குறித்த வகுப்பு களும் சேர்க்கப்பட்டிருக் கின்றன.
வகுப்புகள் தொடங்கப் படுவதற்கு முன்பாக அனைவருக்கும் ஒவ்வொரு கேள்வித்தாள் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் என்ன வகுப்புகள் எடுக்கப்பட இருக்கிறதோ அந்த சப்ஜெக்ட்களைப் பற்றிய கேள்விகள் அந்தத் தேர்வில் கேட்கப்படுகின்றன. இருபது மார்க்குக்குக் கேட்கப்படும் கேள்வித்தாளை முடிக்க வேண்டிய நேரம் பதினைந்து நிமிடங்கள்! பதினைந்தாவது நிமிடத்தில், ‘எல்லோரும் விடைத்தாள்களை ஆசிரியரிடம் கொடுத்து விடுங்கள்’ என்று அறிவிப்புச் செய்கிறார் டாக்டர் ராமதாஸ். அடுத்து விடைத்தாள்கள் அனைத்தும் பயிலரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் ஒரு ஆசிரியர் குழுவால் திருத்தப்பட்டு, மார்க்குகள் போடும் பணி துவங்கி விடுகிறது. இதற்கிடையில் பயிலரங்கத்தில் வகுப்புகள் ஆரம்பமாகிவிடுகிறது. வகுப்புகள் முடியும் நேரம், தேர்வு முடிவுகளை ராமதாஸ் முன்னிலையில் ஆசிரியர்கள் வெளியிடுகிறார்கள். முதல் இடத்தைப் பிடித்த நபர்களின் பெயரைச் சொல்லும்போது, ‘எல்லோரும் கைதட்டுங்க’ என்று சொல்லும் ராமதாஸ், தானும் கைதட்டுகிறார். அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் நபர்கள் யார் என்று சொன்னாலும் யார் எவ்வளவு மார்க் என்பதை நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறார்கள்.
இந்த வகுப்புகளில் பாடங்களை எடுப்பவர்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், நிதித்துறை செயலர் அந்தஸ்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு சம்பளம் மணிக்கணக்கில் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு மொத்தம் நான்கு வகுப்புகள், தலா ஒரு மணி நேரம் என நீள்கிறது. காலையில் நான்கு வகுப்புகள் முடிந்தபிறகு மாலையில் பல குழுக்களாகப் பிரிந்து நாட்டில் லேட்டஸ்ட் பிரச்னை என்னவோ அது பற்றிய விவாதங்களை ஆரம்பிக்கிறார்கள். விவாதம் செய்வதோடு நின்றுவிடாமல் தீர்வையும் எட்டுகிறார்கள்.
இந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழுவைச் சுற்றியும் நடந்தவாறே அவர்களது விவாதங்களைக் கேட்டு உள்வாங்கிக் கொள்கிறார் ராமதாஸ். இலங்கைப் பிரச்னை தொடர்பாக விவாதம் செய்து கொண்டிருந்த ஒரு குழு, இலங்கை விஷயத்தில் போர்தான் தீர்வு என்ற அளவில் படு பரபரப்பாக விவாதம் செய்து கொண்டிருக்க, ‘அப்படின்னா இலங்கைக்குப் படையெடுத்துப் போகச் சொல்றீங்களா? அதெல்லாம் சாத்தியமில்லை. மத்திய அரசைத்தான் நாம் வலியுறுத்தணும். ஒட்டு மொத்த தமிழகத்தையும் இந்த விஷயத்தில் ஒன்று திரட்டி, நமது உணர்வுகளை வெளிப் படுத்தணும். அதுதான் அங்குள்ள தமிழனுக்கு நாம் உடனடியாக செய்யும் பேருதவி’ என்று தனது கருத்தைச் சொல்கிறார் ராமதாஸ்.
விவாதத்தில் சினிமா பற்றி இல்லாமலா? ஆனால், ரஜினி பற்றிய எந்த விஷயமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக சினிமாவில் கவர்ச்சிக் காட்சிகள், இளைஞர்களை தவறான வழிக்கு இழுத்துப்போகும் விஷயங்கள் தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கின்றன.
பெரும்பாலும் தேர்வுகளில் முதல் இடத்தைப் பிடிப்பது குறிப்பிட்ட ஐந்து அல்லது ஆறு பேர்கள்தான். அவர்கள் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், பா.ம.க&வின் இளைஞர் அணிச் செயலாளர்களான அறிவுச்செல்வன், அருள், சென்னை மாநகாராட்சியின் நகரமைப்புக் குழு தலைவர் பிரகாஷ், எதிரொலி மணியன், டி.கே.ராஜன் ஆகியோர்தான். இவர்களில் வேல்முருகன், அறிவுச்செல்வன், அருள் ஆகியோர், ‘இதுக்கு ஏன் மார்க் போடலை சார்? இது சரியான பதில்தானே? இவருக்கு மட்டும் மார்க் போட்டிருக்கீங்க?’ என்று பள்ளிக் குழந்தைகளைப் போலவே ஆசிரியர்களிடம் போய் முறையிடுகிறார்கள். அவர்களிடம் பேசினோம்.
‘‘அரசியலைப் பொறுத்தவரை ஒண்ணுமே தெரியாம எதையாச்சும் செஞ்சு மேல வந்துட்டாப் போதும்னுதான் நினைக்கிறாங்க. பொது மக்களுக்கு சேவை செய்யற இடத்துல இருக்கறவங்க, அரசாங்கத்தையே நடத்தப் போறவங்க அதுகுறித்த அறிவு இல்லாம இருக்கறது நாட்டுக்கு நல்லதில்ல. அதனாலதான் அய்யா இதை ஆரம்பிச்சாங்க. இந்த வகுப்புகள் எல்லாம் எங்களை எவ்வளவு தூரத்துக்கு முன்னேற்றியிருக்குன்னா ஒரு பட்ஜெட்டே போடுற அளவுக்கு முன்னேற்றியிருக்கு. ஒரு பட்ஜெட்டை சபையில படிக்கிறப்பவே அது நல்ல பட்ஜெட்டா இல்லையானு சொல்ற அளவுக்கு எல்லோரும் தேறியிருக்கோம்’’ என்றார்கள்.
வாத்தியார் அவதாரம் எடுத்திருக்கும் டாக்டர் ராமதாஸிடம் பேசினோம். ‘‘தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதி நிதிகள், அரசு போடும் திட்டங் களின் சாதக&பாதகங்களை ஆராய்ந்து, அந்தத் திட்டங்களை தங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் காலம் இது. அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் அளவுக்கு எங்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும், இதில் அவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும் என்பது என் ஆசை. நான் நினைத்ததைவிட அனைவரும் வகுப்புகளிலும், தேர்வுகளிலும் அதிகமாகவே அக்கறை காட்டுகிறார்கள். படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அல்லது அரசியலுக்கு வந்தவர்கள் பொது விஷயங்களைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயிலரங்கம்’’ என்றார்.
நன்றி ஜுனியர் விகடன்
ராமதாஸ் வாத்தியார்
Posted by -L-L-D-a-s-u at 1 comments
Labels: அரசியல்
Subscribe to:
Posts (Atom)