தேவதாசிமுறை பற்றி தினமலரில் ..

சாதரணமாக திராவிட வலைப்பதிவுகளில் படிக்கக்கூடிய செய்தி தினமலரில் இருப்பது ஆச்சரியம்தான் .

வாரமலர் பா.கே.ப கீழே ..
... தமிழ்நாட்டில் பதினோரு ஜாதியினர் தங்கள் குலத்தில் பிறந்த பெண்களை பொட்டு கட்டி தாசிகளாக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

... கைக்கோளர் சிறுமிகள் கோவிலுக்கு முறைப்படி தாசிகளாக நேர்ந்து விடப்படுவர்! அவ்வாறு நேர்ந்தளிக்கப்படும் சிறுமிக்குப் பாடவும், ஆடவும் கற்றுத் தரப்படுகிறது. நாட்டியம் கற்றுத் தரும் நட்டுவனார், கைக்கோளர் ஜாதியைச் சேர்ந்தவராகவும், பாட்டு கற்றுத் தருபவர், பிராமணர் ஜாதியைச் சேர்ந்த பாகவதராகவும் இருப்பர். நேர்ந்து விடப்படும் சிறுமி பூப்படைந்த பின் நடைபெறும் தாலி கட்டும் சடங்கின் போது, அவளை அணிகள் பூட்டி அலங்கரித்து நெற்குவியலின் மீது நிற்கும்படி செய்வர். அவளுக்கு முன்பக்கம் அதே போல நெற்குவியலின் மீது நிற்கும் இரண்டு தாசிகள், மடிக்கப்பட்ட ஒரு சேலையைப் பிடித்துக் கொண்டு நிற்பர். அச்சிறுமி அந்தத் துணியைப் பிடித்துக் கொள்வாள். அவளுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் நட்டுவனார், அவளுடைய கால்களைப் பிடித்தபடி முழங்கும் இன்னிசைக்கேற்ப மேலும் கீழும், அசைப்பார். அன்று எல்லாரும் விருந்து உண்பர்.

மாலையில் அச்சிறுமியை ஒரு மட்டக் குதிரை மேல் அமர்த்தி கோவிலுக்கு அழைத்துச் செல்வர். அங்கு, தெய்வத்திற்கு புதிய துணி, தாலி, பூஜைப் பொருட்கள் தயார் செய்யப்பட்டிருக்கும். சிறுமியை கோவில் தெய்வத்தை நோக்கி அமரச் செய்து, பூஜை செய்யும் பிராமணர், அவளுக்குப் பூவும், சந்தனமும் வழங்கிய பின் தெய்வத்தின் காலடியில் வைக்கப்பட்ட தாலியை அவள் கழுத்தில் கட்டுவார்.

தாலி, தங்கத்தகடும், கறுப்பு பாசிமணிகளும் கொண்டதாக இருக்கும்.

கூடியிருப்பவர்களுக்கு வெற்றிலை பாக்கும், பூவும் வழங்கிய பின் ஊரின் முக்கிய தெருக்கள் வழியே அவளை வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வர். அதன் பின், தொடர்ந்து ஆடலும், பாடலும் கற்று வரும் அவள், திருமணம் சார்ந்த ஒரு சடங்கைச் செய்து கொள்வாள்.

நல்லதொரு நாளில் உறவினர்களை அழைத்து அப்பெண்ணின் தாய் மாமனோ, அவன் சார்பில் ஒருவனோ பெண்ணின் நெற்றியில் தங்கத் தகடு ஒன்றை அணிவிப்பான். அதன் பின் அவன் அவளைத் துõக்கிச் சென்று கூடியுள்ள விருந்தினர் முன் ஒரு பலகை மீது அமர்த்துவான். பிராமணப் புரோகிதர் ஒருவர் மந்திரம் ஓதிப் புனித நெருப்பை மூட்டுவார். பெண்ணின் தாயார், பெண்ணின் மாமனுக்குப் புதிய உடைகளை வழங்குவாள். அந்தப் பெண்ணோடு அன்று உடலுறவு கொள்ள செல்வந்தனான ஒரு பிராமணனோ, அது இயலாதாயின், வசதியற்ற ஒரு பிராமணனோ ஏற்பாடு செய்யப்படுவர்.

கோவிலுள்ள தெய்வத்திற்கு அடுத்தபடியாக அதனுடைய பிரதிநிதியாக பிராமணன் இருப்பதாலேயே அவனை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு தாசி இறப்பாளானால், கோவிலில் உள்ள சிலை மீதிருந்து கொண்டு வரப்பட்ட புதுச்சேலையை அவளுக்குப் போர்த்துவர். அவள் சேர்ந்துள்ள கோவிலிருந்து அவளுடைய பிணத்திற்கு மலர்கள் அனுப்பப்படுவதோடு கூட, அவளுடைய உடல் அடக்கம் செய்யப்படும் வரை அந்தக் கோவிலில் பூஜையும் நடத்த மாட்டார்கள். கோவிலில் உள்ள தெய்வம் அவளுடைய கணவனாகப் பாவிக்கப்படுவதால் அதுவும் தீட்டிற்கு ஆட்பட்டதாகக் கருதுவதே காரணமாம்...

— இப்படிப்பட்ட கேவலமான விஷயங்களை சட்டம் போட்டுத் தடுத்தவர்களை மனதினுள்ளே என்றென்றும் நாம் மறக்கக் கூடாது!

நன்றி தினமலர்