திருமாவும் கமல் மற்றும் கூத்தாடிகளும்...

கனடா வாழ் தமிழர்களின் தமிழுணர்வை பாராட்டியதற்காக பொங்கியெழுந்த முகமூடியின் பதிவிற்கான பின்னூட்டமாக இதனை எழுதுகிறேன் . ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் . கனடாவிலும் அவ்வாறே என எண்ணுகிறேன் .. அவ்வாறு இல்லாதபட்சத்தில் திருமாவின் அறியாமையை சுட்டிக்காட்டலாமே ஒழிய அதில் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை .. இதை கூறியதும் தமிழ்நாட்டு பத்திரிகையில்தான் என்பதால் 'இடம்' என்பதிலும் பிர்ச்சினையில்லை ..கமலின் சிங்கப்பூர் பேட்டிக்கும் , திருமாவின் குமுதம் பேட்டிக்கும் இடம் மிகப்பெரிய வேறுபாடு .. கமலின் புரிதலும் தவறு என்பது சிங்கப்பூரில் சில காலம் வாழ்பவன் என்ற முறையில் கூற முடியும் .

சிங்கப்பூரில் தமிழ் தேசிய மொழியாக இருத்தலும் , தமிழ் வளர்ச்சிக்காக அரசாங்கமும் தமிழார்வலர்களின் பணிகளும் தமிழ் ஊடகங்களின் உச்ச்ரிப்புகளும் பாராட்டப்படவேண்டியதாக இருந்தாலும் , கமல் எண்ணியிருப்பது போலல்லாமல் பொது மக்களிடையே ஆங்கிலம் கலக்காத தமிழோ, தமிழரிடையே தமிழ் என்ற எண்ணமோ தமிழக தமிழரிடையும் குறைவாகத்தான் உள்ளது .. ஒப்பு நோக்கி தமிழகத்தை குறை கூற வேண்டுமென்றால் அவர் சார்ந்த ஊடகந்தான் மிகத்தகுதியானது . அவர் பினாத்தியது தான் உண்மையென்று அவர் எண்ணியிருந்தால் அதனை அவர் தமிழகத்திலே, குறைந்தபட்சம் அவருடைய விசிலடிச்சான் கும்பல்களிடம் கூறியிருக்கலாம் அல்லது சிங்கப்பூரை புகழ்ந்துமட்டும் பேசியிருக்கலாம். அவருடைய சிங்கப்பூர் பேச்சுக்காக குறைந்தபட்ச கண்டனம் கூட தமிழகத்திலிருந்து வராமல் , கமலுடைய தமிழ் ஆர்வம் பற்றிய ஜல்லியடிப்புகள் தான் வருகின்றன .

இதனை விட கொடுமையாக தமிழகமக்களை மாடு மேய்க்கும் கூட்டம் என சிங்கப்பூரில் நடந்த கூத்தாடிகளின் கூட்டத்தில் கூறிய ராதாரவி மற்றும் சத்யராஜ் (புரச்சி தமிழனாம்) போன்றொருக்குக்கூட தமிழகத்திலே ஒரு எதிர்ப்பு இல்லை(சன்னின் ஒளிபரப்பிற்கு பின்னும்) .
ராதாரவிக்கு ஓட்டளித்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது தான் தமிழன் செய்தது ..

அவர்களுக்கு கோயிலும் கட் அவுட்டும் கட்டுவதை நிறுத்தும் வரை தமிழ்மக்களை பற்றிய கூத்தாடிகளின் எண்ணம் மாறவே மாறாது ..

தேசப்பற்று - 8 வரி கவிதை

மசூதி இடித்து தேசமானம் காத்த அத்வானி நமஹ ..
இஸ்லாமியர் குறைத்து இந்தியர் சதவீதம் கூட்டிய மோடி நமஹ ..
இந்தியர் ஒற்றுமைக்காக செங்கல் அனுப்பிய ஜெயலலிதா நமஹ..
தேசத்திற்காக முற்றும் துறந்த உமாபாரதி நமஹ...
மாற்றான் தோட்டத்தின் ஒரே இந்தியன் பெர்ணான்டஸ் நமஹ..
இந்தியர் மானம் காக்கும் வாஜ்பாய் நமஹ..
இந்தியபற்றென்று கட்டுரை வடிக்கும் குருமூர்த்தி நமஹ..
தவிர்த்த மற்றெல்லோரும் - நமஹ நஹி .. நமஹ நஹி ...


8 வரி கவிதைப்போட்டிக்கு ஏதோ நம்மாலான சிறு பங்களிப்பு...


முகமூடியின் செக்கூலரிசம் - 8 வரி கவிதை பதிவிற்கும் இந்த பதிவிற்கும் உண்டு தொடர்பு என கூறிக்கொள்கின்றேன்.

வினை எதிர்வினை

ராமதாஸ் , திருமாவைப்போல் ஊடகத்தாக்குதலுக்குள்ளானோர் எவருமல்லர் என்பது குழலி அவர்களின் விசனம் .. இது உண்மையா..? வேறு எவரும் இவர்களைப் போல விமர்சிக்கப்படவில்லையா என்பதின் மேலோட்டமான என் எண்ணங்கள் ..

இந்திரா காந்தியின் 'எமர்ஜென்சி' காலம் இன்றும் விமர்சிக்கப்படவில்லையா? ராஜீவ் மீதான போபார்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக எத்தனை கட்டுரைகள், எத்தனை மேடைப்பேச்சுகள். குற்றச்சாட்டை நிரூபிக்கும் முன்னரே அவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவில்லையா நாமும் நம் பத்திரிகைகளும் ..

கருணாநிதியின் வாரிசு அரசியலை கேலி செய்யும் செய்திகளை பார்த்ததேயில்லையா நீங்கள் .. வைகோவை கட்சியை விட்டு நீக்கின காலக்கட்டத்தில் கருணாநிதியின்பால் விழுந்த விமர்சனங்கள் எத்தனை? ஊழலின் ஊற்றுக்கண்ணாக கருணாநிதியை கூறுகிறவர்கள் எத்தனை பேர்? .. ஜெ.வின் ஆணவ ஆட்சிக்காகவும், ஊழலுக்காகவும் , ஆடம்பர திருமணத்திற்காகவும் அவர் மேல் விழுந்த விமர்சனங்கள் கருணாநிதி அனுபவித்த விமர்சனங்களை விட குறைந்ததா என்ன?

ஜெவின் ஊழலை எதிர்த்து வைகோ தொடங்கிய நடைபயணம் போயஸ் தோட்டத்தில் நிறைவு பெற்றப்பொது வைகோவுக்கு விழுந்த ஊடக அடிகள் எத்தனை? அவர் தி மு க வுடன் திரும்பவும் கூட்டணி அமைத்துக்கொண்டபோது அவர்க்கு கிடைத்த விமர்சங்கள் மறந்துவிட்டதா?

அத்வானியின் தேர்பயணத்திற்கும் , பாபர் மசூதி இடிப்பிற்கும் பத்திரிகைகளில் விமர்சனம் இல்லையா என்ன? குஜராத் படுகொலைகளுக்கு மோடியின் மேல் விழுந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடக விமர்சனங்கள் எத்தனை ?

ஏன் ரஜினி , விஜய்காந்த் போன்றோரின் திரைப்பட வசனங்களுக்காக அவர்கள் நம்மால் விமர்சிக்கப்பட்டதில்லையா என்ன?

மோடியின் குஜராத் படுகொலைகளையோ , மசூதி இடிப்பையோ , வாரிசு , ஆடம்பர, ஊழல் அரசியலையோ நியாபடுத்தவில்லை நான் .. ஒவ்வொருவர் செய்த வினைகளுக்கு தகுந்த எதிர்வினைகளை ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள் என்பதே என் கருத்து .

மரம் வெட்டியதும், வாரிசு அரசியலும் , ஆபாச பேச்சுக்களும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது எனறு நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை .. திருமா விடயத்தில் அவரின் தலித் முன்னேற்ற பணிகள் விமர்சிக்கப்படவில்லை(ஆதரிக்கப்படவில்லையெனினும்) .. அவரின் ராஜினாமா பலராலும் பாராட்டவேப்பட்டது .. நான் முன்பே கூறியது போல சிறிதும் முக்கியமும் அவசியமும் இல்லாத திரைப்பட பெயர் மாற்றம் போன்ற அரசியலே விமர்சிக்கப்பட்டது ..ராமதாஸ் , திருமா கூட்டணி குறித்தான விமர்சனங்களும் தி மு க , ம தி மு க கூட்டணி குறித்தான விமர்சனங்களை ஒத்ததே என எண்ணுகிறேன் .

வேண்டுமானால் உங்களுக்காக ராமதாஸுக்கு என்னாலான ஊடகத்தடவல் ..

தமிழ்நாட்டின் நலனுக்காக தன் தாய்மேல் பழி வந்தாலும் பரவாயில்லை என ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்த நம் அன்பு தலைவர் , தன் மகனை இந்திய நலனுக்காக மந்திரியாக்கி தியாகம் புரிந்தவர் .. தன் வாரிசுகளிடமிருந்து தமிழைக் காப்பாற்ற அவர்களுக்கு ஆங்கில கல்வி கொடுக்குமளவுக்கு தமிழுணர்வு மிக்கவர் .