சினிமாவும் அரசியலும்

சினிமாவும் மக்களை ஏமாற்றுகிறது. அரசியலும் மக்களை ஏமாற்றுகிறது . சினிமாவில் காட்சிகளின் மூலம் மக்களை அழ வைக்கிறோம் . சிரிக்க வைக்கிறோம் . எமோஷனலாக வைக்கிறோம் . அரசியல் கட்சிகளும் இதே உணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்துகினறன. தலைவர்களின் அறிக்கைகள் , மேடை பேச்சுகளின் மூலம். இப்படி ஒரே காரியத்தைச் செய்யும் சினிமாவும் , அரசியலும் சில விஷயங்களில் மட்டும்தான் வித்தியாசப்படுகிறது .

சினிமாத் துறையில் எதிரும் புதிருமாக இருக்கும் நடிகர்கள், விழா மேடைகளில் சந்தித்துக் கொள்ளும்போது ஆரத் தழுவி அன்பு செலுத்துவார்கள் . மைக்கைப்பிடித்து பாசமழை பொழிவார்கள். உள்ளுக்குள் ஒருத்தர்மீது இன்னொருத்தருக்கு கருத்து வேறுபாடும் , கசப்பான எண்ணமும் இருக்கும் .
அரசியலில் இதற்கு நேர்மாறானது நடக்கும், மேடைகளில் ஒருத்தரை ஒருத்தர் திட்டித் தீர்ப்பார்கள். ஜென்ம விரோதி போல் வார்த்தைகளை வீசிக் கொள்வார்கள் .ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் அன்னியோன்யத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள் .

இது போன்ற சின்ன விஷயங்களைத் தவிர்த்து , மற்ற எல்லா வகையிலும் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை . தமிழக அரசியலில் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாக சினிமா கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தி வருவதற்கும் இந்த ஒற்றுமைதான் காரணம்.

அரசியலை மிஞ்சியதுதான் சினிமா. கயவர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்று சொல்வார்கள். சமீப காலமாக அந்த நிலைமை மாறி , சினிமா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது .
சமுதாயம், இன்று சினிமாக்காரர்களை தேவதூதர்களாக நினைக்கிறது. அதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளும் சினிமாக்காரர்களின் முதுகில் பயணம் செய்கின்றன் . கட்சிகளின் இந்தக் கணக்கு புரியாமல் நம் நட்சத்திரங்கள் அரசியலில் ஆரவம் காட்டி வருகின்றனர் . இவர்களது ஆரவ்த்தின் பிண்ணணி மக்கள் சேவை அல்ல . சினிமா மீது அவர்களுக்கிருக்கும் அவநம்பிக்கைதான் .

சினிமாவில் மார்க்கெட் போய்விட்டால் மனைவிகூட மதிக்கமாட்டாள் . அப்படியொரு நிலைமைக்கு வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் சினிமாவைப்போலவே கவர்ச்சிகரமான தொழிலாக இருக்கும் அரசியலுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறாரகள்.

இவர்கள் அரசியலை ஆக்ரமித்தால் , எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் ?

சினிமாக்காரர்களுக்கு ஈகோ பல மடங்கு அதிகம் . கல்யாண வீட்டுக்குப் போனால் மாப்பிள்ளையாகவும் , சாவு வீட்டுக்குப் போனால் சவமாகவும் இருக்க நினைப்பார்கள். எங்கும் நாமே முதன்மையான் ஆளாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள் .

இப்படிப்பட்ட சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உடைய சினிமாக் கலைஞர்களால் அவமானத்தையோ , புறக்கணிப்பையோ தாங்கிக் கொள்ள முடியாது .

பொதுவாகவே அரசியலில் தனிப்பட்ட ஒருவர் செல்வாக்குப் பெற முடியாது . அப்படிச் செல்வாக்குத் தேடி வரும்போது, கட்சித் தலைமையே கட்டம் கட்டி, அவரைச் செல்லாக் காசாக்கி வேடிக்கை பார்க்கும் . பல கட்சிகள் உருவானதற்கும் , பல தலைவர்கள் உருவானதற்கும் இப்படியான அரசியல் விளையாட்டுக்கள் தான் காரணமாக இருந்திருக்கின்றன.

இந்த அனுபவம் சினிமா கலைஞர்களுக்கு ஏற்படும்ப்பொது அவமானத்தை அதிக நாட்கள் அவர்களால் தாங்க முடியாது. தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபிப்பதற்காக உடனே தனிக்கட்சி தொடங்குவார்கள் . புற்றீசல் போல் பெருகும் நட்சத்திரங்களின் தனிக் கட்சிகள் தாக்குப் பிடிக்குமா என்றால் முடியாது என்ற சொல்வேன். சில வருஷங்கள் இயங்குவது போல் தெரியும். சில வருஷங்கள் பரபரப்பாக இயங்குவது போல் தெரியும் அப்புறம் அடங்கி போய்விடும் .

கலை வேறு , அரசியல் வேறு என்ற முடிவுக்கு வந்து மக்கள் தெளிந்து விடுவார்கள் . அந்த தெளிவின் அடிப்படையில் மக்கள் சொல்லும் தீர்ப்பு நட்சத்திரங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பது மட்டும் உறுதி.


- கேயார் எழுதிய 'இதுதான் சினிமா'விலிருந்து உருவப்பட்டது .


சினிமாத்துறையைப் பற்றி அவர் எழுதிய மற்றொரு பகுதி கீழே கொசுறாக..

சினிமாத்தோழில் முடங்கியதற்கு , ப. சிதம்பரம் கொண்டுவந்த வி.டி.ஐ.எஸ் திட்டம் ஒரு காரணம் . இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வெள்ளையாகிவிட்டது. இப்படி வெள்ளையாக்கப்பட பணம் சினிமாவில் புழங்கி வந்த பணம்தான் . வி.டி.ஐ.எஸ் திட்டத்தினால் அந்த பணத்தை இழந்துவிட்டது சினிமாத்துறை !