'பண்ணீர் புஷ்பங்களே..' என்ற பாடல்தான் எனக்கு முதலில் அறிமுகம் . என் குரலுக்கு சரியாக அமையும் பாடல் என (தவறாக) நினைத்து, ஏதாவது ஒரு போட்டியில் இதை பாட வேண்டும் என எண்ணியிருந்தேன் . (நல்ல காலம் அது ஈடேரவில்லை.) பின்பு ஒரு முறை சிங்கப்பூர் வானொலியில் (ஒலி 96.8), 'உறவுகள் தொடர்கதை' என்ற பாடல் ஒலியேற்றப்பட்டபோது , அந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது . முதல்முறை அது எந்த படத்தின் பாடல் என கவனிக்கத் தவறியதால் , மீண்டும் அந்த பாடலை ஒலிபரப்புவார்களா என காத்திருந்த பொழுது, ஒலி அறிவிப்பாளர் கீதா அவர்களால் திரும்பவும் ஒலிபரப்பப்பட்டபோது, 'அவள் அப்படித்தான்' எனக்கு அறிமுகமானது. அதுமுதல் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவே முதலானது . நண்பர்களுடான பகிர்தலில் இது ஒரு பாலச்சந்தர் படம் என்றே தவறான தகவலே எனக்கு கிடைத்தது, ஞாயிறன்று வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்வரை .
இதுவும் ஒரு வகையான பாலச்சந்தர் வகைப் படமே . ஆனால் 'படாபட்' என கிறுக்குத்தனமாக உளரும் கதாநாயகி இல்லை இதில், லூசுத்தனமான விடுகதை போடும் கதாப்பாத்திரங்கள் இல்லை . இரத்தமும் சதையுமாக நம்மிடையே இருக்கும், நாமாக இருக்கும் கதாபாத்திரங்களே இவை . இவன் நல்லவன், இவன் கெட்டவன் என தீர்ப்புகள் இல்லை, க்ளைமாக்ஸில் திருந்துவனும் இல்லை, திருத்துபவனும் இல்லை . தீர்வும் இல்லை.
இரு கதாநாயகிகள் ஒருவனை காதலித்து, கதாநாயகன் அதில் ஒருத்தியை திருமணம் செய்யும்போது, இன்னொரு கதாநாயகி , இன்னொருவனை திருமணம் செய்தால், கற்பு போய்விடும் என, அந்த கதாநாயகியை சாகடிக்கும் தமிழ் சினிமா சூழலில் , இந்த படத்தில் , ஏற்கனவே இருவரால் காதலிக்கப்பட்டு, அதில் ஒருவனிடம் கற்பையும் பறிகொடுத்து அதனையும் மிகவும் மனத்தெளிச்சியுடனே செய்தவள், ஒரு கள்ளக் காதலனைக் கொண்டவளின் மகள் , இந்த கதாநாயகி என்பதே ஒரு புதுமை . இதில் நடித்த ஷ்ரீப்ரியாவிற்கு பாராட்டுகள் .
'எனக்கு ஒரு பசி , என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு பசி' என ஒரு காபரே ஆட்டக்காரி சொல்வது முதல் ஆரம்பிக்கிறது படத்தில் சாட்டையடிகள், உங்களுக்கும் எனக்கும் . கதாநாயகன் பெண்களை பற்றி குறும்படம் எடுக்க கோவையிருந்து சென்னை வருகிறான் . பெண்ணுரிமை பேசுகிறான் . கதாநாயகியின் சோகங்களை பரிவுடனே கேட்டுக்கொள்கிறான் . அவளின் 'கற்பு' கதை தெரிந்து அவளை காதலிப்பதாக 'க்ளைமாக்'சில் , அவளிடமில்லை , அவள் தோழியிடம் சொல்லி தன் புனித பிம்பத்தை காத்துக்கொண்டு, திருமணம் செய்வதோ , 'பெண்ணுரிமை' பேசாத , ஒரு அடக்கமான பெண்ணை .. .
கதாநாயகி , போலி வேஷங்களை சாட்டையடி அடிப்பவள். சோஷியல் ஒர்க்கரை பேட்டி காண செல்லும்போது, வேறு எந்த மேக்-அப்பும் வேண்டாம் , சோஷியல் ஒர்க்கர் என்னும் மேக்-அப்பே போதும் என்று சொல்பவள், ஆனால் தன் பெற்றோர் பாரிஸில் உள்ளனர் என போலி வேடம் போட எத்தளிப்பவள். சமூகத்திற்காக கணவன் மனைவியாக இருக்கும் பெற்றோர்களாலும், தன்னை காதலித்து சீரழித்தவன் தன்னையே தங்கை எனக்கூறி உறவுகளை கொச்சைப்படுத்துவதாக வாதம் செய்பவள் , உறவுகளை வெறுப்பதாக கூறுபவள் , உறவுக்காக, அன்புக்காக ஏங்கி ஒருமுறை இல்லை, இரு முறை ஏமாந்தாலும் மூன்றாம் முறையும் காதலிக்கிறாள் ஏமாறுவதற்காகவே .
மூன்றாவதாக ஒரு கேரக்டர் . கதாநாயகன் கமலின் நண்பனாக, கதநாயகி ப்ரியாவின் முதலாளியாக, ரஜினிகாந்த் . நம்மில் பலரின் பிம்பம் . பெண்களை போகப்பொருளாக எண்ணுபவன் . தன் சொந்தக்காலில் நிற்கலாம் என பெண்கள் நினைப்பதையே பாவம் என நினைக்கும் ஆச்சாரியான்(?) அவன் . சந்தர்ப்பம் கிடைக்கும்போது , கதாநாகியிடம் கலவிக்கும் ஆயத்தமாகிறான். அவள் அறைந்தவுடன் , கற்பழிக்க எத்தளிக்கவில்லை. 'உன்னை அடைந்தே தீருவேன்' என பொதுவான வில்ல வசனம் பேசவில்லை..... அந்த இடத்தை விட்டே ஓடிவிடுகிறான் . வாய்ப்பு கிடைக்கும் வரை நல்லவன் நம்மைப்போலவே .
கதாநாயகின் இரண்டாவது காதலன். ரவீந்தர் என நினைக்கிறேன் . நல்லவன். பக்திமான் . கதநாயகியுடனான உறவுக்குப்பின் தவறு செய்துவிட்டதாக அழுகிறான் . தவறை தெரிந்தே செய்த பின் , அதனை மறைத்து, பின்னர் உணராமல் செய்து விட்டதாக பாவமன்னிப்பு கேடபவர் எத்தனை பேர். ஆனால் இச்சை முடிந்தவுடன் தன் வேஷம் கலைந்து தன் காதலியை சகோதரி என்கிறான் . பக்திமான்களுக்கே உரிய புத்தி. குரூரம். வெளிவேஷம் .
க்ளைமாக்சில் நாயகன் மனைவியிடம் (சரிதா?), நாயகி 'பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்' எனக்கேட்க, அவள் ' எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என 'அதனால்தான் நீ சந்தோஷமாய் இருக்கிறாய்' என்பாள் கதாநாயகி. ’அவள் மீண்டும் இறந்து போனாள், அவள் இறப்பாள், பிறப்பாள், இறப்பாள். . . . அவள் அப்படிதான்’’என்ற பின் குரலோடு படம் முடியும் . இந்த படத்தில் எந்த தீர்ப்பும் சொல்லப்படவில்லை . யாரும் திருந்தவில்லை. எனவே அவள் மட்டுமில்லை அவர்கள் எல்லோருமே அப்படித்தான் .
இயக்குனர் ருத்ரையா மனித உறவுகள் , எண்ணங்களோடு ஒரு காவியமே உருவாக்கியிருக்கிறார் . பாலச்சந்தர் போன்றவர்கள் அளவுக்கு மீறி போற்றப்படும் சூழலில், ருத்ரையா போன்றோர் வாய்ப் பில்லாமல் தவிப்பது தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு . பெயரை வைத்து அவர் தெலுங்கர் என நினைத்தேன். ஆனால் அவர் சேலம் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்தவர் என்றும், இன்றும் திரைப்படம் எடுப்பதே இலட்சியமாக இருப்பதாகவும், கார்த்திக்கை வைத்து ஒரு த்ரில்லரை உருவாக்கும் பணியில் இருப்பதாகவும் ஒரு நண்பர் மூலமாக அறிந்தேன் . குத்தாட்ட கூமுட்டைகளிடமிருந்தும் பஞ்ச் வசன பரதேசிகளிடமிருந்தும் தமிழ் சினிமாவுக்கு எப்போது விடுதலையோ ?
அவள் அப்படித்தான் - விமர்சனம்
Labels: திரை
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அறிமுகம் & விமர்சனத்திற்கு நன்றி.
கொசுவர்த்தி சுருளை உங்க பேர் சொல்லி கொளுத்திக்கறேன்.....
இந்தப் படம் என் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தது. தூர்தர்சனின் மழலை நிகழ்ச்சிகளில் நடிப்பதற்காக சிறுவர்களை பதிவு செய்து வைத்திருக்க சொன்னார்கள். நானும் ரெஜிஸ்டர் செய்து காத்திருந்தேன். குழந்தைகள் வருடத்தில் (19080/1981) ஹரிஹரன் இயக்கத்தில் ஏழு வயது சிறுவன் தேவை என்பதால் பலரும் வருவிக்கப்பட நானும் 'ஸ்க்ரீன் டெஸ்ட்'க்கு சென்று காத்திருந்தேன்.
சில காட்சிகள் நடிக்க சொன்ன பிறகு, 'உனக்கு பிடித்த படம் எது' என்று கேள்வி கேட்டார்கள். அப்போது(ம்) எல்லா திரைப்படங்களையும் பார்த்து முடித்து விடும் எனக்கு அவள் அப்படித்தான் மட்டும் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அபிமான நட்சத்திரங்கள் இருவரும் நடித்திருந்தும் இன்னும் பார்க்க இயலாததால், மனதில் தங்கியிருந்த இந்தப் படத்தை சொன்னேன்.
'அட... அது எங்க யூனிட் படமாச்சே! உனக்கு எப்படி அந்தப் படம் பிடித்த படம்?' என்று ஆச்சரியப்பட்டு சினிமா சான்ஸ் வாங்கிக் கொடுத்த படம்.
ரொம்ப நாள் கழித்து சமீபத்தில் கேடிவி-யில் பார்க்க கிடைத்தது.
இது தொடர்பான இன்னொரு சிறப்பான விமர்சனம்: சுரேஷ் கண்ணன் :: பிச்சைப்பாத்திரம்: அவள் அப்படித்தான் - திரைப்படத்தைப் பற்றிய என் பார்வை
இரண்டு இடங்களில் அதீத எண்ணப் பிரயோகம்:
1. -----பக்திமான்களுக்கே உரிய புத்தி. குரூரம். வெளிவேஷம் .-----
பிடித்த மேற்கோள்: Generalization is the mother of all sins (Assumption is the mother of all misunderstandings. Generalization is a special case of assumption.)
2. ----வாய்ப்பு கிடைக்கும் வரை நல்லவன் நம்மைப்போலவே .----
ஆஹா... பொதுஜனப் பிரியராக 'நம்மை' என்று பலரையும் சேர்த்து சமூகத்தைக் குற்றஞ்சாட்டுவதை விட்டுடுங்க :-) ['என்னை'ப் போலவே என்று எழுதினால், வாசகன் படிக்கும்போது, அவனுக்கும் பொருந்தினால் குறுகுறுத்துக் கொள்வான்; 'உன்னை'ப் போலவே என்றால், ஏதோ ....னந்தா எழுதும் சுயமுன்னேற்றத் தொடரின் பிரயோகம் போல் கேட்டுக் கொள்வான் ;-)]
ரொம்ப நல்ல விமர்சனம் பண்ணியிருக்கீங்க... அருமையான புரிதல்கள்...
ரொம்ப நல்ல விமர்சனம் பண்ணியிருக்கீங்க... அருமையான புரிதல்கள்...
எனக்கு மிகவும் பிடித்த படம். கடைசி காட்சியில் சரிதா பெண் சுதந்திரம்னா என்னங்க என்று கமலை கேட்பதும், அறியாமை ஒரு வரம் என்பதை சொல்லாமல் சொல்லும் முகபாவமும் அருமை.
பிரமாதமான படம். ருத்ரையா ஒரு under-recognized phenomenon. அவள் அப்படித்தான் cynical-ஆக வாழ்வியல் அனுபவங்களை அணுகிய படம். கட்டுடைத்தல், மீள்பார்வை, புதிய கேள்விகள், மறு உருவாக்கம் என்பதெல்லாம் காலம் காலமாக நடந்து வரும் சமூக நிகழ்வு-ருத்ரையாவின் இந்தப்படம் திரைப்படத்தில் அதனைப் படம் பிடித்த ஒரு அபூர்வச் சித்திரம். எனக்குப் பிடித்த, சிந்தனையைத் தூண்டிய வசனம் அபலைப்பெண்களைக்கான சமூக சேவகியிடம் கேட்கப்படும் கேள்வி: "அபலைகள் இல்லையென்றால் உங்கள் சமூக சேவைக்கு வேலையில்லாமலேயே போய் விடும் அல்லவா?" (வசனம்: வண்ண நிலவன்). சமூக சேவை என்ற பெயரில் கொழுத்துத்திரியும் அவல ஒட்டுண்ணிகளை அன்றே இனம் கண்ட படம் இது.
"உறவுகள் தொடர்கதை..." - ஏசுதாஸ் குரலில் அழகான பாட்டு, (எழுதியவர்: கங்கை அமரன்(!) என நினைவு). இசைவான இசை.
ஆனால் இது போலவே பல படங்கள் வந்தால் சலிப்பாகி விடும் என்பதும் உண்மைதான், எப்போதாவது வருவதால்தான் பெருமை அடைகிறது- குறிஞ்சிப்பூ போல.
பி.கு: அது ரவீந்தர் அல்ல. சிவச்சந்திரன் (பட்டினப்பிரவேசம் "வான் நிலா நிலா அல்ல" ஞாபகம் வருகிறதா?).
ருத்ரைய்யாவின் இரண்டாவது படம் கிராமத்து அத்தியாயம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.
அதன் பின்பு அவரால் தலையெடுக்க முடியவில்லை.
கிராமத்து அத்தியாயம் மிகவும் திராபையான படம். அவ்வப்போது விஜய் டிவியில் போடுவார்கள். மிகவும் நல்ல பாடல்கள் அப்படத்தில் உண்டு
ஐயா,
வணக்கம்.நானும் ஓரு சிங்கபூர்வாசி.பொதுவாக நான் இது போன்ற பாடங்களை பார்பது இல்லை. அதற்கு காரணம்,வாழ்கையில் சோகங்கள் கடக்கையில்(while sailing through) இது எதற்கு தனியாக என்று தான். அன்று நான் அதிசயமாக இந்த படத்தை பார்க்க முயற்சித் போது என் கணவர் அதை தவிர்த்தார். காரணம் இப்போழுது தான் தெரிகிறது. அது “தன் வேஷம் கலைந்து தன் காதலியை சகோதரி என்கிறான்”. Funny too funny
வணக்கம்
அவனவன் வேட்டையாடு விளையாடு , சிவாஜின்னு அலையும்போது , நீ அவள் அப்படித்தான் , ருத்ரையான்னு திரியுரீயே, நீயும் அப்படித்தானா?
இப் படத்தை திரும்பவும் பார்க்க தேடிக்கொண்டிருக்கிறேன்..அருமையான படம்.
ஆர்வத்தைத் தூண்டிட்டீங்களே அழகான விமர்சனத்துல. எப்ப சான்ஸ் கிடைக்குதோ பாக்குறேன். பாட்டெல்லாம் நிறைய கேட்ட மாதிரி இருக்கு. படத்தைப் பத்தி கேள்விப் பட்டதே இல்ல. இப்ப உங்க விமர்சனம் படிச்சு எப்ப பாக்கலாம்னு ஆசைப் பட வச்சிட்டீங்க! :)
இரண்டு வாரம் முன்பு நண்பர் ஓருவர் இந்த படத்தோடு வந்து நாங்கள் அனைவரும் ஒன்றாக பார்த்தப் படம்.
மஞ்சு மறக்க முடியாத ஓர் வாழும் கேரக்டர்...
நல்ல விமர்சனத்திற்கு பாராட்டுகள் பல...
http://manikoondu.blogspot.com/2006/08/blog-post.html
மிக்க நன்றி
மயிலாடுதுறை சிவா...
பாலா ,
உங்கள் கொசுவர்த்தியை இங்கே கொளுத்தியதற்கு நன்றி . எந்த படத்தில் நடித்தீர்கள்? (வலைப்பதிவரில் யார் வேண்டுமானாலும் முதல்வரானாலும் என்க்கு மகிழ்ச்சி , உங்களைத்தவிர;)). நீங்கள் அறிவுறுத்திய கருத்திற்கு நன்றி. இனிமேல் கவனமாக இருக்கிறேன் .
இங்கே கருத்துகளை பகிர்ந்து கொண்ட வணக்கத்துடன், *இயற்கை நேசி* , தேன் துளி, அருனகிரி, ராஜ்குமார், ரவியா, மதுரா, சிவா, அனானி சகோதரி அனைவருக்கும் நன்றி .
Hellow Bala,
You acted in a movie ?? Which one dude?
unkalvimarsanam arumai nan mikavum rasithu partha padkalul ethum ondru tamil veli vantha padankalul mika mika arumaiyana padam unmayil ekalathukum porunthum padam comerciyal kupaikaluku mathil intha mathiri padankal parkum pothu tamil epothu enthamathiri padankalai aduthu edukapokirathu endru ekam than varukirathu
அருமையான படத்திற்கு அருமையான விமர்சனம் - சின்னக்குட்டி அவர்களின் பதிவில் இந்த முழு படத்தையும் பார்க்க நேரிட்டது, சிறிபிரியா அவர்களின் அபாரமான இயற்கையான நடிப்பு பிரமிப்பு - வசனங்கள் கத்தியில் எழுதியது போல் அவ்வளவு கூர்மை -இது போல் நம்மை படம் பிடித்து படமாக தரமாட்டார்களா என்று ஏங்க வைத்த படம் - நாகூர் இஸ்மாயில்
Post a Comment