சென்னை சென்றிருந்தபோது , என்னிடம் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் நலம் விசாரித்த அறுபது வயது பெண் , தமிழச்சிதான் என தெரிந்து அதிர்ந்துதான் போனேன் . தமிழரிடையே ஆங்கிலத்தில் பேசினால் காரியமும் எளிதாகும் மரியாதையும் கிடைக்கும் என்பதும் சில அனுபவங்களில் தெரிந்தது . ஆங்கில குதிரையை படுக்கை அறையில் கட்டிப்போட்டுள்ளோம் . ஆங்கில குதிரையை படுக்கை அறையில் கட்டிப்போட்டுள்ள நாம் ஏன் ஹிந்தி ஒட்டகத்தை தொழுவத்திலிருந்தே விரட்டி விட்டோம்? குதிரையோ ஒட்டகமோ அதற்குரிய இடம் தொழுவம்தானே . ஒட்டகத்தை கூடாரத்திற்குள் விடுபவனும் மூடன் . குதிரையை கூடாரத்திற்குள் வைத்துள்ளோம் என்றெண்ணி , ஒட்டகத்தை கலாயத்தில் கட்டாமல் விரட்டிவிட்டு , பாலைவன பயணத்தை வெறுப்பவனும் மூடனே .
தமிழ் பேசினால் கௌரவம் என்ற மனநிலை தமிழனுக்கு இருந்தால் அவன் எத்தனை மொழிகள் கற்றாலும் தமிழுக்கு அழிவில்லை. தமிழ் பேச கூச்சப்படுபவனுக்கு , ஆங்கிலமோ ஹிந்தியோ தெரியவேண்டியதில்லை சைகை மொழியே போதும், தமிழை அழிக்க. விரட்ட வேண்டியது ஹிந்தியையோ ஆங்கிலத்தையோ இல்லை, தமிழரின் மனநிலையைத்தான் .
வட இந்தியர் தமிழ் கற்காத போது நாம் ஹிந்தி கற்பது 'இளிச்சவாய்த்தனம்' என்பது , மொழியை ஊடகமாக பார்க்காமல் , மரியாதையை அதனுடன் இணைத்து பார்க்கும் போக்குதான். அவர்கள் தமிழ் கற்காமல் இருப்பது அவர்கள் இழப்புதான் . அதனால் அவர்கள் சில வாய்ப்புகளை இழக்கிறார்கள் . அதனால் நானும் சில வாய்ப்புகளை இழப்பேன் என்பது புத்திசாலித்தனம் இல்லையே . விரும்புகிறோமோ இல்லையோ ஹிந்தி பெரும்பான்மையான மாநிலங்களில் புரியப்படும் மொழியாக உள்ளது . அதனால் தான் அதை கற்பது தெலுங்கு , கொரிய மொழிகளை படிப்பதை விட புத்திசாலித்தனம் .
நான் ஹிந்தி வழி கல்வியை ஆதரிக்கவில்லை. அறிவியலை , வரலாறை நாம் நம் தமிழிலே கற்கலாம் .. அல்ல .. கற்கத்தான் வேண்டும் . ஹிந்தியை அதற்குரிய இடத்தில் முன்றாவது மொழியாக வைப்பதில் தவறில்லையே .ஹிந்தியை மூன்றாம் மொழியாக உள்ள கர்னாடக்கத்திலோ கேரளாவிலோ மொழிகள் அழிந்தாவிட்டது? அங்கே இலக்கியம் வளரவில்லையா? ஹிந்தி மட்டுமே நம் வளர்ச்சிக்கு தேவை என்று நான் சொல்லவில்லை . நம்முடைய திறமைகளால் இமயம் அளவு நாம் முன்னேறியிருந்தாலும் , ஹிந்தியும் தெரிந்திருந்தால் ஒரு இன்ச் அளவு அதிகமாக நாம் முன்னேறியிருப்போமே?
எனக்கு ஆயிரம் வழிகள் உள்ளது என அந்த ஆயிரம் வழிகளில் ஒன்றில் நுழைந்த அதிர்ஷ்டசாலிகளே , நான் பேசுவது அடுத்த ஆயிரத்தி ஒன்றாவது வழி பற்றி . நம்மை போல ஆயிரத்தில் ஒரு வழியில்கூட நுழைய முடியாதவனுக்காக , ஆயிரத்தியோராவது வழிக்காக , படித்தால் நஷ்டமில்லாத, அந்த ஹிந்தியை படித்தால் என்ன.?. நம்மவர்க்குத்தானே ‘ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடும்’ சிந்தனை இருந்தது .
நமக்கு தலைவனுக்கும் நடிகனுக்கும் வித்தியாசமும் தெரியவில்லை .மதத்திற்கும் மடத்திற்குமுள்ள வித்தியாசமும் தெரியவில்லை . மொழிக்கும் மரியாதைக்கும் சம்பதந்தமில்லை என்பதும் தெரியவில்லை .
நம்மை சுய இன்பத்தில் திலைக்க விட்டுவிட்டு ‘அவர்கள்’ போகிற பாதையை பார்த்தும் நாம் உணரவில்லையே?
ஒட்டகத்தை கட்டிப்போடு
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
கீழே கொடுக்கப்பட்ட என் கருத்துக்கள் கடந்த ஆண்டு திண்ணையில் நிகழ்ந்த விவாதத்தின் போது எழுதப்பட்டவை. பி. எஸ். நரேந்திரன் என்ற ஒரு நண்பர் எழுதிய கருத்துக்களுக்கு எதிர்வினையாக எழுதப்பட்டவை. உங்கள் கருத்துக்களுக்கும் அவருடைய கருத்துக்களுக்கும் அதிக ஒற்றுமை இருப்பதாக எனக்குப் பட்டதால் என்னுடைய மறுமொழியை இங்கு நேரமின்மையால் அப்படியே பதிக்கிறேன். என்ன இது ஒரு நீனீண்டடட பின்னூட்டமாகி விட்டது, மன்னிக்கவும் )-: பி. எஸ். நரேந்திரன் எழுதியவற்றையும் சேர்த்துப் படிக்க வேண்டுமெனில் திண்ணைப் பக்கங்களின் சுட்டிகளை இறுதியில் இணைத்துள்ளேன்.
பகுதி - 1
இந்தி படிக்காததால் வட மாநிலங்களுக்குத் தமிழர் வேலைக்குச் சொல்ல முடியவில்லையென்று தமிழ்நாட்டின் துக்ளக் கும்பல் சொன்னதையே கூறிக் கொண்டிருக்கிறீர்கள் ஏன்? சவாலாகக் கேட்கிறேன் கூறுங்கள், இந்தியாவின் பிற பகுதிகளில் வேலை கிடைத்த பின்னும், இந்தி தெரியாத ஒரே காரணத்தால் அங்கு செல்லாத ஒரு தமிழரின் பெயரையும், முகவரியையும் சொல்லுங்கள்.
வட இந்தியாவுக்கு வேலை செய்யச் செல்லும் தமிழர் இந்தி தெரியாமல் முதல் ஒரு வருடம் சிரமப்பட்டிருக்கலாம். மற்ற தென் மாநிலத்தவரும் இந்தி நன்றாகத் தெரியாததால் சிரமப்பட்டிருக்கின்றனர் என்பதை நான் டெல்லியில் பணியாற்றிய பொழுது கூறக்கேட்டிருக்கிறேன். தமிழர்களை விட கொஞ்சம் குறைவாகச் சிரமப்பட்டிருப்பர் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பெரும்பாலான தமிழர், குறிப்பாக ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்கள், ஓரிரு வருடங்களுக்குள் இந்தியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கூட பார்த்தறியாத நான், டெல்லிக்குச் சென்ற ஒரே வருடத்தில் எழுத்துக்களை வாசிக்கத் தெரிந்து கொண்டேன், பேசுவதையும் ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆங்கிலம் நன்கு தெரிந்தும் உச்சரிப்பு வேறுபாட்டால் அமெரிக்காவில் கூட முதல் வருடம் நாம் சிரமப் பட்டிருக்கிறோம். பின்னால் போகப் போக எல்லாம் பழகிவிடும்.
உலக வரலாற்றில் மொழி, பண்பாடு போன்றவற்றால் முற்றிலும் வேறுபட்ட நாடுகளுக்குக் கூட பிழைப்பைத் தேடி எளிதாக இடம் பெயர்ந்து சென்ற இனங்களில் தமிழர்கள் மிக முக்கியமானவர்கள் (படிக்க: Guilmoto, C.Z., 1993. The Tamil Migration Cycle, 1830-1950, Economic and Political Weekly, January 16-23, 111-120.). அவர்களுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று பணிபுரியும் தமிழர்கள் யாருமே தமிழ்நாட்டில் இந்தி மற்றும் ஏனைய மொழிகளைத் கற்றுக் கொண்டவர்களில்லை. இப்படிப்பட்ட முழுப்பூசணிக்காய் உண்மையை துக்ளக் கும்பல்கள்தான் சோற்றில் மறைக்கிறார்கள்.
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் இந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லாமல் கோடிக்கணக்கில் இருக்கும் இந்தியர்களை என்ன சொல்வது? முட்டாள்கள் என்கிறீர்களா அல்லது தகுதியில்லாதவர்கள் என்கிறீர்களா?
இந்தியென்ன எந்தவொரு மாற்று மொழியைத் கற்றுக் கொள்வதிலும் நிறைய நன்மைகளுண்டு, தீமைகள் எதுவுமேயில்லை என்பதை அனைவரும் அறிவர். அதற்கான எந்தத் தடையும் தமிழ் நாட்டிலில்லை. குறைந்தபட்ச செயல்பாட்டுக்கான இந்தி கற்க வேண்டும் என்ற ஆவல் உண்மையிலேயே இருந்தால் 40 ரூபாய்க்கு கிடைக்கும் 40 நாள் மொழிக்கல்விப் புத்தகங்களை வாங்கிப் படித்தாலே போதும். ஆனால் துக்ளக் கும்பல் விரும்புவது வேறு. வட நாட்டுக்கு வேலைக்குச் செல்ல நினைக்கும் இளைஞர்கள் மக்கள் தொகையில் 1% கூடத் தேறமாட்டார்கள். அந்த 1 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களைக் காரணம் காட்டி அனைத்து மக்களின் வரிப்பணத்தில் தேவையோ இல்லையோ, விருப்பமோ இல்லையோ எல்லாரையும் இந்தி படிக்க வைக்க வேண்டும்.
கட்டாயப் படுத்தப்பட்டு தங்களுடைய வரிப்பணத்திலேயே எல்லா மக்களும் இந்தியைக் கற்றபின் எல்லாம் இந்திமயமாக்கப் படவேண்டும். அதன் பின்னால் இந்தியைத் தூக்கி குப்பையில் எறிந்து விட்டு, வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்தைத் திணித்து தங்களுடைய மேலாண்மையை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டும். தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தங்களுடைய தனித்தன்மையை இன்னும் இழக்காமலிருப்பதற்கு தமிழ்நாட்டில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்ச்சிதான் காரணம் என்றும், அந்த எழுச்சிதான் இந்திவெறி பிடித்தவர்களின் வேகத்தைத் தடுத்தி நிறுத்தியது என்று Frontline பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளரும் முன்னாள் துணைவேந்தருமான யூ. ஆர்.அனந்தமூர்த்தி. அது தற்பொழுது என் நினைவுக்கு வருகிறது.
இந்தியை ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் பொழுதே, தொலைக்காட்சியில் துக்ளக் கும்பல் போட்ட ஆட்டம்தான் நாம் அறிவோமே. ஆகாஸவாணி என்பதை வானொலி என்றும், ‘தூரதர்ஷண்’ என்பதை ‘தொலைக்காட்சி’ என்றும் மாற்றுவதைப் பாவமென்று கூறிய இப்பிறவிகள் இன்று வெட்கங்கெட்டுப்போய் சென்னை அலைவரிசைக்குப் ‘பொதிகை’ என்று பெயர் வைத்ததேன்? தமிழ்ப்பற்று வந்து விட்டதாக நினைக்கிறீர்களா? தனியார் தொலைக்காட்சிகள் வந்ததால், தங்களுடைய திண்ணைக்கே ஆபத்து என்று அறிந்ததனால் பரிதாபமாக தொலைக்காட்சியை விட்டு விட்டு இப்பொழுது சாலையோர மைல் கற்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்!
இந்தியாவின் உண்மையான மேம்பாட்டுக்கு வழி சமூக, பொருளாதார வளர்ச்சியே!
சொல்லப்போனால் துக்ளக் கும்பல்களுக்கு இந்தி மேலும், இந்தியாவின் மேலும் கூட பற்றில்லை. தங்களுடைய மேலாண்மையை நிறுவதைத்தவிர எந்த நோக்கமுமில்லை. உண்மையிலேயே இந்தியாவின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் அக்கறையிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களை விட பல வகைகளிலும் பின்தங்கியிருக்கும் இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் அப்பாவி ஏழை எளிய மக்களின் எழுத்தறிவுக்கு, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிக்க வாரி வழங்கும் பெரும்பணத்தைச் செலவழிக்கலாம். மீதிப் பணத்தை புலம் பெயர்ந்து வாழ விருப்பப்படும் எந்த இந்தியரானாலும், தங்களைப் புது இடங்களுக்குத் தயார் செய்ய தேவைப்படும் பொழுது மட்டும் இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இலவசமாகக் கற்றுத் தர எல்லா மாநிலங்களிலும் மொழி மையங்களை ஏற்படுத்தலாம்.
புத்திசாலித் துக்ளக் கும்பல்களுக்கு இதுவெல்லாம் தெரியாததல்ல. கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள், மக்கள் கேணைகளாக இருக்கும் வரை. பல்வகை மொழிகள், மதங்கள் மற்றும் பண்பாடுகளின் ஊற்றுக்கண்ணாய்த் திகழும் பாரதத்தை, இந்து-இந்தி-சமஸ்கிருத மயமாக்கி, பாஸிச சாதியக் கட்டுமானத்தை மீட்டெடுத்து, பாட்டாளி மக்களைச் சுரண்டி தங்கள் வயிற்றை நிரப்புவதே அவர்களது ஒரே நோக்கம். அதில் பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை. பாபர் மசூதியை இடித்து இந்து-முஸ்லீம் கலவரத்துக்குக் காரணமாக இருந்தது இரண்டு கட்சிகளின் கூட்டு சதிதான். தேசியம் பற்றிப் பேசிக்கொண்டே நதிநீர் சிக்கல்களிலெல்லாம் பிராந்திய வெறியை ஊட்டி, மாநிலக்கட்சிகளை விடக் கேவலமாக நடந்து கொள்வது இந்த இரு கட்சிகளும்தான்.
வெட்கங்கெட்ட தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகள் அவர்களின் முன்னால் மாறி மாறி மண்டியிட்டு பல்லக்குத் தூக்கி வருகின்றன. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் ஒரு சட்ட மன்றத்தொகுதியைக் கூட வெற்றி பெறத் துப்பில்லாத பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகளுக்கு பெரும்பாலான தொகுதிகளை விட்டுக் கொடுத்து, கொள்கையடிப்படையில் தங்களுடன் இணைந்து துணிவுடன் போராடும் பொதுவுடைமைக் கட்சிகளையும், தலித்தியக்கங்களையும் இறுதி வரை இழுத்தடித்து அவமானப் படுத்தும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அழிந்து போனால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம்.
பகுதி - 2
இந்தி மட்டுமல்லாமல் வேறு எந்த மொழியைக் கற்றுக்கொள்ளுவதாலும் பயன்களே நிறைய உள்ளன. தமிழ் நாட்டில் இந்தி படிக்கக் கூடாது என்ற தடையிருந்தால் உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது. தாராளமாக எந்த மொழியை வேண்டுமானாலும் (இந்தி உட்பட) நீங்கள் விரும்பினால் படிக்கலாம், எந்த ஒரு மொழியையும் (தமிழ் உட்பட) விருப்பமில்லா விட்டால் படிக்காமலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் கேட்பதோ அனைத்து மக்களும் அரசு செலவில் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பது.
வாதத்துக்காக மிகைப்படுத்தியே எடுத்துக் கொள்வோம், இந்தி தெரியாததால் வட இந்தியாவுக்கு சென்று வேலை தேடும் வாய்ப்பை இழந்த உங்கள் நண்பரைப் போன்ற இளைஞர்கள் 6 இலட்சம் என்று வைத்துக் கொள்வோம், தமிழ் நாட்டின் மக்கள் தொகையான 6 கோடியில் அவர்கள் ஒரு விழுக்காடு. அவர்களுக்காக ஆறு கோடி மக்களும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது நியாயமா?
உங்கள் நண்பரைப் போன்று நானும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். வறுமையின் காரணமாகவே என் தம்பி 18 வயதில் பாலிடெக்னிக் பட்டத்தோடு டெல்லிக்கு ஒரு தனியார் நிறுவன வேலைக்கு அனுப்பப்பட்டார். தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டதால் ஆங்கிலம் கூட சரியாகப் பேச வராது. பாலாஜி பதிப்பகத்தின் இந்திப் புத்தகம் தான் அவருடன் சென்ற ஒரே துணை. ஒரு வருடம் நிறையச் சிரமப் பட்டிருக்கிறார், ஆனால் ஒரே வருடத்தில் சரளமாக இந்தி பேசக் கற்றுக் கொண்டார். அதே வேலையில் காஷ்மீர், கல்கத்தா, புவனேஸ்வரம், விஜயவாடா, பெங்களூர், திருவனந்தபுரம் என பல ஊர்களுக்கு மாற்றப் பட்டிருக்கிறார். சென்ற இடங்களிலெல்லாம் முதல் வருடம் மிக அல்லலுற்றிருக்கிறார். மேற்கு வங்காளத்திலும், ஆந்திரத்திலும், ஏன் மகராஷ்டிரத்தின் உட்பகுதிகளில் கூட இந்தி தெரிந்தால் மட்டும் போதாது. அந்தந்த மொழியும் அறிந்திருக்க வேண்டும். இன்று அவருக்கு பெரும்பாலான இந்திய மொழிகள் நன்கு தெரியும். பட்ட சிரமங்களினால் ஆங்கிலத்திலும் தேர்ந்து விட்டார். தற்பொழுது சில வருடங்களாக சொந்தமாகத் தொழில் செய்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். அந்த உந்துதலுக்கான காரணம், உங்கள் நண்பரைப் போன்ற அதே குடும்பச் சூழல்தான் எங்கள் வீட்டிலும், திருமணத்துக்காகக் காத்திருந்த இரண்டு சகோதரிகள் உட்பட. பொறியியல் தொடர்பாகப் படிக்காததால் நான் அதுபோல வடக்கே வேலை தேடி செல்லாமல், தமிழ்நாட்டிலும் வேலை கிட்டாமல் மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றேன். கிடைத்திருந்தால் நானும் அப்படியே சென்றிருபேன்.
பிழைப்பை நாடி வேறு இடத்துக்குப் போனால் அங்குள்ள மொழியையும், பண்பாட்டையும் முதலில் மதிக்கத் தெரிய வேண்டும். அங்குள்ள மொழியை எப்பாடு பட்டாவது கற்றுக்கொள்ள வேண்டும். அப்படியல்லாமல் என்னுடைய அரசாங்கம் என்னை நட்டாற்றில் விட்டு விட்டது என்று அழுது புலம்பலாமா? ஜப்பானில் வேலை கிடைத்தால், ஜப்பானிய மொழியை நான் தான் கற்க வேண்டும், அதை விட்டு தமிழ்நாட்டில் எனக்கு ஜப்பானிய மொழியை பள்ளிக்கூடத்தில் கற்றுத்தரவில்லையே என்று அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது என்ன நியாயம்?
நீங்கள் குறிப்பிட்ட நண்பர்களைப் போன்றவர்கள் 6 ஆயிரம் பேர்கள் தேறுவார்களா என்பது சந்தேகம். முன் சொன்னது போல 6 இலட்சம் என்றே வைத்துக் கொள்வோம், ஒரு விழுக்காடு என்பது கணிசமான அளவுதான். அவர்களுக்காகவும் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். என்ன காரணமாகயிருந்தாலும் சரி, மாநிலம் விட்டு மாநிலம் பெயர்ந்து வாழ விரும்பும் மக்களுக்கு அப்படிச் செல்லும் முன் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்தோடோ பயிற்சி அளிக்கும் மொழி மையங்கள் ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கூடத்தில் தேர்வுக்காகப் படித்து மறந்து விடுவதை விட இப்படிப் பயிற்சியளிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று மற்ற தென் மாநிலங்களைச் சேர்ந்த நண்பர்கள் பலர் என்னிடம் சொல்லியிருக்கின்றனர்.
தேவை அதிகமானால் மாவட்டம், வட்டம் அளவில் கூட மொழி மையங்கள் ஏற்படுத்தலாம். அவை இந்தியை மட்டுமல்லாமல், தேவைப்படுபவர்களின் தொகையைப் பொறுத்து எல்லா மொழிகளையும் கற்றுத்தர வேண்டும். அவற்றைத் தவிர மொழி பெயர்ப்புப் பணிகளிலும் அம்மையங்கள் ஈடுபட்டு இந்திய மக்களிடையேயான நல்லுறவு மையங்களாகவும் திகழலாம். இவை தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல், வட இந்தியாவிலும் நிறுவப்பட வேண்டும். உண்மையான கூட்டாட்சி மத்திய அரசாங்கம் இதைத்தான் செய்திருக்கும். இப்படிச் செய்திருந்தால் அதைப் பாராட்டியிருக்கலாம். அதைவிட்டு மொழியை வைத்து (தற்பொழுது மதத்தையும் வைத்து) ஆதிக்க அரசியல் நடத்தி, பிரிவினை உணர்வுகளைத் தூண்டி விட்டது மத்திய அரசுதான். அதற்கு எதிராகத்தான் மொழியை வைத்து பிழைப்பு அரசியல் நடத்தி ஆங்கில மேலாதிக்கத்துக்கு வழி செய்து வந்துள்ளன திராவிட இயக்கங்கள். இதையெல்லாம் சுட்டிக் காட்டினால் என் போன்றோரைத் தேச விரோதிகள் என்றும், குறுகிய வட்டத்தில் சிந்திப்பவர்கள் என்றும் குற்றஞ்சாட்டுவார்கள்.
உங்கள் சிந்தனைக்காக இன்னொரு எடுத்துக்காட்டையும் கூற விரும்புகிறேன். நான் சென்னையில் வேதியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பொழுது அடிக்கடி பாரி முனை நைனியப்ப நாயக்கன் தெருவுக்குச் செல்ல வேண்டி வரும். அங்குதான் அறிவியல் உபகரணங்கள் மற்றும் வேதிப்பொருள்கள் விற்கும் கடைகள் அனைத்தும் இருந்தன (இப்பொழுது எப்படியெனத் தெரியாது). அந்தக் கடைகள் அனைத்தும் வட இந்தியர்களுக்குச் சொந்தமானவை. ஒரு நாள் அவர்களுடைய கிட்டங்கியிலிருந்து சில பொருள்கள் வர வேண்டியிருந்ததால் அதிக நேரம் காத்திருக்க நேர்ந்தது. கடை உரிமையாளர் என்னை அமரச்செய்து உபசாரம் செய்து பேசிக் கொண்டிருந்தார். என்னுடன் ஓரளவு ஆங்கிலத்தில் பேசிய அவர் கடைச்சிறுவனுடன் இந்தியில் ஓரிரு தமிழ் வார்த்தைகள் கலந்து பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் இது பற்றி கேட்ட பொழுது சொன்னார், அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் இந்தி சரியாகப் புரிந்து கொள்ள முடிய வில்லை, இப்பொழுது நன்றாகப் புரிந்து கொண்டு, அரை குறையாகப் பேசவும் ஆரம்பித்திருக்கிறான் என்று. வியப்பாக நோக்கிய என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவர் சொன்னார், தான் இருபது ஆண்டுகளுக்கு மேல் படித்த தமிழை விட அவன் இரண்டு வருடங்களில் கற்றுக் கொண்ட இந்தி அதிகம் என்று.
அவர் மேலும் கூறும் பொழுது அவர் நண்பரைப் பற்றிச் சொன்னார். அவரும், அவரது நண்பரும் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் பம்பாயிலிருந்து சென்னைக்கு வர முடிவு செய்த பொழுது, வேதிப்பொருள்கள் விற்பனையில் பம்பாயில் போட்டி அதிகம் இருந்ததாகவும், சென்னையில் அவ்வளவு அதிகம் இல்லை எனவும், அதனால் பம்பாயில் கொள் முதல் செய்து சென்னையில் கடை வைத்து விற்க முடிவு செய்து சென்னைக்குப் புறப்பட்டனர். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாகப் பேச வராது, அப்படியே பேசினாலும், சென்னையில் அந்தக் காலத்தில் ஆங்கிலத்தை வைத்து மேல் தட்டு வர்க்கத்திடம் மட்டும்தான் உரையாட முடியும். தற்காலத்திலோ ஆங்கிலம் மட்டுமே தெரிந்தால் போதும் என்பதால் மற்ற மாநிலங்களிலிருந்து வந்து பிழைப்பு நடத்த இலகுவாக உள்ளது என்றார். ஆனால் அக்காலத்தில் தமிழ் தெரியாததால், அவர் முதல் சில வருடங்கள் மிகச் சிரமப் பட்டிருக்கிறார். ஆனால் அவரது நண்பர் அப்படி சிரமப்பட்டு வாழப் பிடிக்காமல், பம்பாய்க்குத் திரும்பி அங்கு வியாபாரப் போட்டியினால் வெற்றியடையாமல் நொடித்துத் தற்பொழுது வேறு நிறுவனத்தில் பணி புரிகிறார்.
இந்த எடுத்துக்காட்டுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். குஜராத்தில், பள்ளிக்கூடத்தில் கட்டாய பாடமாகத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறீர்களா? அல்லது நான் சொல்லியிருக்கும் யோசனை, அதனை விட நல்லது என்கிறீர்களா? இதெல்லாம் மத்திய அரசை ஆண்ட தலைவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா? தமிழ் மட்டுமே கொஞ்சம் தெரிந்து, ஆங்கில மொழி கூடத் தெரியாத அப்பாவி கிராம மக்கள் தபால் அட்டையிலும், தபால் கவர்களிலும் தமிழைக் கண்டதில்லை. தந்தி அனுப்புவதற்கும், மணியார்டர் அனுப்புவதற்கும் உள்ள படிவங்களில் தமிழ் கிடையாது. வங்கிகளுக்குப் போய் ஒரு கணக்கு (அக்கவுண்டு) திறக்க வேண்டுமானால் தமிழ் இல்லை. இன்று கூட மாறியிருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. இவர்கள் எல்லாம் மனிதர்களாக உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? அமெரிக்காவிலும் கனடாவிலும் தமிழர்கள் கணிசமாக வாழும் இடங்களில் தேவைப்பட்டால், வாகன ஓட்டுதலுக்குரிய தேர்வைத் தமிழில் எடுக்கலாம். தொலை பேசிக் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு இந்திய மொழிகளில் வாடிக்கையாளர்களை அவர்கள் மொழியில் அழைக்கின்றன. நாமோ ஒரு அடிப்படைப் பிரச்சினையை அரசியலாக்கி சண்டை போட்டுக் கொன்றிருக்கிறோம்.
எனவே நம் வர்க்கத்தைச் (class) சேர்ந்த ஒரிருவர் வட இந்தியாவில் வேலை தேட முடியவில்லை என்பதை மட்டும் பார்க்காதீர்கள். ஒட்டு மொத்தமாகப் பிரச்சினையின் எல்லாத் திசைகளிலும் ஆழமாக யோசியுங்கள். அப்பொழுதுதான் தாகூர் நூல்களைப் படிக்கவில்லை என்பவற்றை விடத் தலையாய மொழிப் பிரச்சினைகளும் இந்தியாவில் உண்டு என்பது தெரிய வரும். சாகித்ய அகடமி இந்தியாவின் நல்ல நூல்கள் பலவற்றை ஒரு மொழியிலிருந்து வேறு மொழிக்கு அருமையாக மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கின்றனர். அதை படிக்க முடியவில்லை என்பது நம்முடைய அறிவுத்தேடலில் உள்ள கோளாறு.
திண்ணைப் பக்கங்கள்
------------------
http://www.thinnai.com/pl0101043.html
http://www.thinnai.com/pl0108042.html
http://www.thinnai.com/pl0115041.html
மிக்க நன்றி.
சொ. சங்கரபாண்டி
ஆம் . எனக்கும் என்னோடு இரு தமிழர்க்கும் (ஒருவர் என்னைப் போலவே ஹிந்தி தெரியாதவர் , மற்ற பெண் தனிவழி ஹிந்தி கற்ற 'சோ' கூட்டத்தைச் சார்ந்தவர்) . ஈஈT-Jஏஏ cஒஅசிங் வேலையில் நல்ல சம்பளத்தில் சேர்ந்தோம் . நாங்கள் ஹிந்தி தெரியாத காரணத்தினால் , சில மாதங்கலிளே தொடரமுடியவில்லை. அந்த வலி உங்களுக்கு தெரியாதது அல்ல . அந்த சோ கூட்ட பெண் இன்றும் அங்கு உள்ளார் . என் பாடு பரவயில்லை, அந்த வாய்ப்பை தவறவிட்ட நண்பர் நான் இரு வருட-ங்களுக்கு முன் வரை போராடிக்கொண்டிருந்தார் .
என்னோடு படித்தவர்களிலே வட இந்தியாவுக்கு ஹிந்தி தெரியாததால் என வர பயப்ப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா? நான் கலந்து தோற்ற ஒன்றின் நான் வற்புருத்தியும் வராத் நண்பன் வந்திருந்தால் அவன் திறமைக்கு வேலை கிடைத்திருக்கும் . இப்போது த்மிழக அர்சு வேலையில் இருக்கும் அவன் அங்கு இதை விட நல்ல வேலைக்கு சென்றிருந்தால் இவனோட் த்ற்போதைய வேலை மற்ற தமிழனுக்கு கிடைத்திருக்கும் . இது ஒரு சங்கிலித் தொடர் .
ஆந்கிலத்தால் வேலை வாங்கும் அறுபது லட்சம் பேருக்காக ஆறு கோடி பேர் ஆங்கிலம் படிக்கும்போது ஆறு லட்சம் பேருக்காக படிக்கக்கூடதா ? நீங்கள் பரிந்துரைத்த முறையையாவது செய்யலாமே?
sorry,
ஈஈT-Jஏஏ cஒஅசிங் - IIT Coaching Centre
சங்கரபாண்டி,
மிக அருமையான விளக்கம்..கட்டுரையை மீண்டும் இங்கே ஏற்றியதற்கு மிக்க நன்றி .உங்கள் மாற்று யோசனை முற்றிலும் ஏற்கத்தக்கது.
தாஸ்,
உங்களைப் போல 6 லட்சம் பேருக்காக 6 கோடி பேரை கட்டாயமாக இந்தி படிக்க சொல்லுகிறீர்கள் .இன்னொருவர் அவரோடு சேர்ந்த 60 ஆயிரம் பேருக்காக 6 கோடி பேரும் பிரஞ்சு படிக்க வேண்டுமென்பார்..இன்னொருவர் அவரேடு சேர்ந்த 6000 பேருக்காக 6 கோடி பேரும் ஜப்பான் மொழி கண்டிப்பாக படிக்க வேண்டுமென்பார்..இதற்கு என்ன முடிவு?..எந்த மொழியும் சொந்த காரணங்களுக்காக கற்றுக்கொள்ள விரும்புவோர்க்கு தமிழகத்தில் தடை இருக்கிறதா என்ன?
Joe,
when are you going to change your name to 'Soe' , if you love Tamil that extend .
Visayan
ஜோ
எப்படி ஆங்கிலத்தை மற்ற மொழிகளைவிட இரண்டாம் மொழியாக முக்கியத்துவம் பெறுகிறதோ அதனை போல நம் நாட்டில் பெரும்பான்மையோர்க்கு புரியும் மொழியாக ஹிந்தி இருப்பதால் மற்ற மொழிகளை விட முக்கியத்துவம் பெருகிறது.
சினிமா ஆசாமிகளான நம் தலைவர்கள், ஹிந்தி சினிமா போட்டியாகி பொழப்பை கெடுக்குமோ என்று பயந்தார்கள் என்றால் …….. நாம் ஏன் ஹிந்தியைப் பார்த்து பயப்பட வேண்டும் ?
//நாம் ஏன் ஹிந்தியைப் பார்த்து பயப்பட வேண்டும் ?//
பயப்பட வேண்டாம்..ஏற்கனவே இருக்கும் இரு மொழிக்கல்வியோடு இன்னொன்றயும் சுமத்தி கண்டிப்பாக படிக்க சொல்லும் போது ,அதற்குரிய அவசியத்தையும் ,பலனையும் ,அது தற்போதைய கல்வியில் ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராய்ந்து முடிவு செய்வது அவசியம்...இந்தி படிக்காமலேயே தமிழகம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கல்விமான்களை உருவாக்குவதில் முன்னணியில் தான் இருக்கிறது..அனைவரையும் இன்னொரு மொழியும் சேர்த்து கற்க சொல்லும் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுக்க வேண்டாம்..உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக இந்தி படிப்பது வேறு ..ஒன்றாம் வகுப்பிலிருந்து 3 மொழி கற்பது வேறு .திணிக்கப்பட்ட ,அதிக தேவையில்லாத பயன் தராத அந்த சுமை மாணவர்களின் மற்ற பாடங்களின் தேர்ச்சியை பாதிக்கும் என நான் நம்புகிறேன் ..நீங்கள் இதிலிருந்து வேறுபடலாம்..இரண்டில் ஏதாவது ஒன்று உண்மை ..செத்தால் தானே சுடுகாடு தெரியும்.
//பெரும்பாலான தமிழர், குறிப்பாக ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்கள், ஓரிரு வருடங்களுக்குள் இந்தியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்//
Mr.Sankarapaandi...thanx for accepting anyhow HINDI is must to live in North India. If you are ready to learn it after landed there, why not it be during your studies itself?! May be you can condemn tamilnadu Tuglaq Gumbal.. but itz all because of tamilnadu 'K' Gumbal's inferiority complex ONLY.
அன்புள்ள மயிலாடுதுறையாரே,
முழுக் கட்டுரையும் படிக்கவில்லையா அல்லது திருவாளர் திருவாளர் சோரம் ஆசாமி போல சுய முகவரிக்காக சில வரிகளை மட்டும் பொறுக்கிக் கொள்ளும் மாய வரம் கொண்டு அலைகிறீரா?
உங்களுக்குப் புரிய வைக்க நினைப்பதை
விட நாங்க இந்தியையே படித்து விடலாம். என்ன அடுத்து கட்டாய சமஸ்கிருதம் என்பீர், அப்புறம் கட்டாய ஜெர்மன் என்பீர். நாங்கள் எல்லாம் இந்த தலைமுறையில் தான் ஏதோ எழுதப் படிக்கவே ஆரம்பித்துள்ளோம்.
அதனால, நீங்கள் மட்டும் இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன் எல்லாம்
படிச்சு அந்தந்த ஊர்கள்ல போய் குடியேறுங்கள். தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கையும் எங்க பிறப்புலேயே இல்லாம இருக்கும் பொழுது இந்தி படிச்சா மட்டும் வந்துடப் போதா என்ன?
எங்களுக்காக நீங்க வருத்தப்பட்டு
உங்க வாழ்க்கையை கோட்டை விடாதீங்க.அது ஆண்டவனுக்கே அடுக்காது.
சொ. சங்கரபாண்டி
அய்யா சங்கரபாண்டியனாரே..
யாரு முழு கட்டுரையை படிக்கலைன்னு முழுசும் படிக்கிறவங்களுக்கு நல்லாவே புரியும் சார்.
நீங்க ஹிந்தி படிங்க, படிக்காம போங்க.. ஆங்கிலம் படிங்க, படிக்காம போங்க... தமிள் (ஆமாம் 'ள்' தான்!) படிங்க, படிக்காம போங்க.. யாரு கேட்டாங்க? ஒட்டு மொத்தமா ஹிந்தி எதிர்ப்புன்னு சொல்லி எங்க தலைமுறையையே ஹிந்தி படிக்காம வெச்சிட்டீங்களேன்னு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்கிறேன். என்னோட கேள்வி எல்லாம் எங்களை படிக்க வேண்டாம்னு சொல்லியிருக்கலாம். 'படிக்க கூடாது'ன்னு அல்லவா சொல்லிட்டீங்க? 'தனி'யா படிக்க வேண்டியது தானே அப்படீன்னு எல்லாம் அறிவுஜீவித்தனமா கேள்வி எழுப்பிறீங்களே... இப்படி எல்லாத்துக்கும் 'தனித்தனியா' பார்த்துகிட்டா அப்புறம் எதுக்காக ஒரு அரசாங்கம்?!
ஒவ்வொரு பிரச்னையிலும் நீங்க 'நூலை' மாட்டி பார்த்து அந்த கோணத்திலேயே உங்க கருத்தை வலியுறுத்துவதினால் 'உண்மை' கண்களை மறைத்து விடுகிறது. வேற ஒண்ணுமில்லை! அதனால என்ன சொன்னாலும் புரியாது. என்ன பண்றது? இப்போதான் நீங்க எழுத படிக்க தெரிஞ்சுகிட்டிருக்கீங்க அப்படீங்கிறதுக்காக நீங்க ஹிந்தி கத்துக்க ரெடியாறவரைக்கும் எல்லாருமே அதை படிக்க கூடாதுன்னு சொல்லிட்டீங்களோ?! சூப்பர் தான்!
//சென்னை அலைவரிசைக்குப் ‘பொதிகை’ என்று பெயர் வைத்ததேன்? தமிழ்ப்பற்று வந்து விட்டதாக நினைக்கிறீர்களா? தனியார் தொலைக்காட்சிகள் வந்ததால், தங்களுடைய திண்ணைக்கே ஆபத்து என்று அறிந்ததனால் பரிதாபமாக தொலைக்காட்சியை விட்டு விட்டு இப்பொழுது சாலையோர மைல் கற்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! //
நல்ல ஜோக் தான் இது! அப்படி பார்த்தால் சென்னைத் தொலைக்காட்சிக்கு (தமிழ்ப்பற்றுள்ளவர்களின் குடும்ப தொலைக்காட்சி பெயரை பின்பற்றி!) 'ராக் டி.வி.', 'மூன் டி.வி.' என்றெல்லாம் ஆங்கிலத்தில் அல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும். தனியார் தொலைக்காட்சிகளைப்பார்த்து பயந்து பெயரை மாற்றி வைத்தார்களாம். கேட்கிறவன் கே---யா இருந்தால் ______________..! அதே போல மைல் கல்களில் ஹிந்தி பெயர் எழுதியதை கண்டு பிடித்து கேள்வி கேட்டதும் உங்களுக்கு ஏன்யா பொத்துக் கொண்டு வருகிறது கோபம்?! யார் சொன்னால் என்ன... தப்பு தப்பு தானே?! அதை ஒப்புக் கொள்ள முடியாத 'க' கும்பல்கள் எதற்கெடுத்தாலும் பழியை அடுத்தவர் மீது போடுவது காலம் காலமாக நடந்து வருவதுதானே?! என்றைக்குதான் உங்கள் முதுகில் ஒட்டியிருக்கும் அழுக்கை பார்த்திருக்கிறீர்கள்?!
மயிலாடுதுரையாரே ,
உஙகள் பதிவுக்கு நன்றி .,
ஐ நா சபையில் ஹிந்தி பேசுபவர்களை நான் வெறுப்பது போலவே பார்லிமெண்டில் தமிழ் பேசுபவர்களையும் வெறுக்கிறேன் . மொழியை விட மக்கள் முக்கியம் . இங்கு பேச்சுக்காவது யாராவது 'தமிழர் வாழ்க ' என்று கூறுகிறாரா? தமிழ் மற்றும் தமிழ் சினிமாவினால் மட்டுமே தம் வயிறு வளர்க்கமுடியும் என உணர்ந்த 'மஞ்சள் துண்டு' மைனர்கள், தமிழை போதை பொருளாக்கி விற்று வயிறு வளர்க்கிறார்கள் .
ஜோ ,
உங்களுடைய பார்வையில் ஏற்பட்ட சிறு மாறுதலுக்கு நன்றி ,
/செத்தால் தானே சுடுகாடு தெரியும். /
அதனால்தான் நான் மற்ற தென் மாநிலத்தோர் மூன்றாம் மொழியாக ஹிந்தியை வைத்தால் ஒரு இழப்புமே அவர்கள் மொழிக்கு இல்லை என்று சொன்னேன் . நான் கவனித்த வரையில், இங்கு வரும் வட இந்தியர் தமிழில் ஒரு சில வார்த்தைகள் கூட கற்றுக்கொள்ள முடிவதில்லை . ஆனால், தெலுங்கர் சில நாட்களில் தமிழை ஓரளவாது கற்றுகொள்கிறார்கள். தமிழை மட்டுமல்ல , மாண்டரீனில் , மலாயில், நம்மைவிட அதிக அளவு கற்றுக்கொண்டுள்ளதை பார்த்திருக்கிறேன் .
அவர்கள் மூன்று மொழிகளை சிறு வயதிலே கற்றுக் கொள்வதால், மொழி கற்கும் திறன், நம்மையும், வட இந்தியரையும் விட அதிகமாய் உள்ளது என எனக்கு எண்ண தோன்றுகிறது .
சங்கரபாண்டி,
//
சவாலாகக் கேட்கிறேன் கூறுங்கள், இந்தியாவின் பிற பகுதிகளில் வேலை கிடைத்த பின்னும், இந்தி தெரியாத ஒரே காரணத்தால் அங்கு செல்லாத ஒரு தமிழரின் பெயரையும், முகவரியையும் சொல்லுங்கள்.//
உங்கள் சவாலை ஏற்றுக்கொன்டு நான் என்னைப் பற்றியும் என் நண்பனை பற்றியும் கூறினேனே .. ஒன்றும் பதிலில்லை . பலர் ஹிந்திக்கு பயந்து சென்னையைத் தாண்டி இன்டர்வியூ கூட செல்லுவதில்லையே .
//, இங்கு வரும் வட இந்தியர் தமிழில் ஒரு சில வார்த்தைகள் கூட கற்றுக்கொள்ள முடிவதில்லை . //
Mannikavum ..avargal kattru kolla muyalvathillai .
//, இங்கு வரும் வட இந்தியர் தமிழில் ஒரு சில வார்த்தைகள் கூட கற்றுக்கொள்ள முடிவதில்லை . //
Mannikavum ..avargal kattru kolla muyalvathillai .
//, இங்கு வரும் வட இந்தியர் தமிழில் ஒரு சில வார்த்தைகள் கூட கற்றுக்கொள்ள முடிவதில்லை . //
Mannikavum ..avargal kattru kolla muyalvathillai .
//, இங்கு வரும் வட இந்தியர் தமிழில் ஒரு சில வார்த்தைகள் கூட கற்றுக்கொள்ள முடிவதில்லை . //
Mannikavum ..avargal kattru kolla muyalvathillai .
Sorry for multiple posts.
//பலர் ஹிந்திக்கு பயந்து சென்னையைத் தாண்டி இன்டர்வியூ கூட செல்லுவதில்லையே .//
So all tamil went to Bangalore,hyderabad with Hindi knowledge?nice arguement..Don't estimate everybody based on your personal experience.
Sorry for multiple posts.
//பலர் ஹிந்திக்கு பயந்து சென்னையைத் தாண்டி இன்டர்வியூ கூட செல்லுவதில்லையே .//
So all tamil went to Bangalore,hyderabad with Hindi knowledge?nice arguement..Don't estimate everybody based on your personal experience.
தாஸ்,
என்னுடைய கட்டுரையிலேயே உங்கள் கேள்விக்கு விடையும் இருந்ததே. அதாவது,
நீங்கள் சொல்வது போன்ற நண்பர்களின் நலம் கருதி (அவர்களின் தொகை ஒரு விழுக்காட்டுக்குக் கீழே இருந்தாலும் கூட) மொழி மையங்கள் அமைத்து புலம் பெயர்ந்து வாழ்வதற்கோ, வெறும் பயணத்தை முன்னிட்டோ, தரமான பயிற்சி அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - ஆரம்பப் பள்ளியில் படித்துப் பயனில்லாமல் மறந்து போவதை விட.
ஐ. நா. சபையில் பிரதமர் வாஜ்பாயி இந்தியில் பேசியது குறித்து மிகப் பெருமையடைந்தேன். நீங்கள் தவறாக நினைக்கிற படியோ அல்லது திரு. மாயவரத்தார் சரியாகத் திரிக்கும் படியோ நான் இந்தி மொழிக்கு எதிரானவன் அல்ல. மொழியை விட மொழி பேசும் மக்கள் முக்கியம். பாட்டாளி மக்கள் பேசும் மொழியை அரசாங்கமும், அதன் தலைமையும், ஆளும் மேல் தட்டு வர்க்கமும் எவ்வளவு தூரம் மதிக்கின்றனர் என்பதைப் பொறுத்து அவர்களின் மேல் அப்பாட்டாளி மக்களுக்கு உள்ள நம்பிக்கை வளரும்.
அந்த வகையில் இந்தியாவின் நலனை விட தன்னுடைய ஆங்கிலப்புலமையையும், வெள்ளைக்கார நட்பும் தான் முக்கியமென எண்ணி வெள்ளைக்காரத்துரை போல நடந்து கொள்ளும் நட்வர்சிங்கை விட, நூறு கோடி மக்களின் பிரதிநிதியாக வந்து நாற்பது கோடி மக்கள் பேசும் மொழியைப் பேசி நம் நாட்டின் சுயமரியாதையை உலகுக்கு உணர்த்தி விட்டுப் போகும் வாஜ்பாயி உயர்ந்தவர் (BJPயின் பாஸிஸ கொள்கைகளை நான் எதிர்ப்பவன் என்றாலும் கூட!)
இது வாசிங்டன் நகரில் பல வருடங்கள் வசித்து வரும் நான் என்னுடைய பிரெஞ்சு, ஜெர்மன், சைன, ஜப்பான் நண்பர்களிடமிருந்து கற்றுக் கொண்ட சுயமரியாதைப் பாடம். அந்த சுயமரியாதையின் அடிப்படையில் தான் என்னுடைய மாநிலத்தின் கோடிக்கணக்கான பாட்டாளி மக்களின் மொழியான தமிழ் மொழியையும் டெல்லியும் மதிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். அதற்காக இந்தியையோ மற்ற மொழிகளையோ வெறுக்கிறேன் என்று பொருளல்ல. இந்தியை திணிக்காதே. தேவைப் படும் மொழுது நாங்களே கற்றுக் கொள்ளுமாறு மொழி மையங்களை ஏற்படுத்துங்கள் என்று தான் கேட்கிறென். திரும்ப ஒரு முறை என்னுடைய கருத்துக்களைப் படிக்கவும். இதைத்தான் வலியுறுத்துகின்றேன்.
நன்றி - சங்கரபாண்டி.
அன்புள்ள மயிலாடுதுறையாரே,
துக்ளக் கும்பல் என்றவுடன் நூலை மாட்டிப் பார்ப்பது உங்கள் குற்றம்.
நூல் மாட்டுவதிலோ, நூல் மாட்டியவர்களிடமோ எனக்கு எந்த
பிரச்சினையுமில்லை. எனக்கு எத்தனையோ நெருங்கிய நண்பர்களில்
நூல் மாட்டியிருப்பவர்களும் உண்டு.
என்னுடைய பிரச்சினையெல்லாம் நூல் மாட்டியவர்கள்தான்
உயர்ந்தவர்கள் என்று நினைக்கும் அல்லது அந்த சிந்தனையைக்
கட்டிக்காக்கும் முயற்சியில் எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும்
காஞ்சி மடம், சோ இராமசாமி, ஆர்.வி., இந்து ராம், ப. சிதம்பரம்,
போன்றவர்கள்தான். இவர்கள்தான் துக்ளக் கும்பல்கள், இவர்களில்
நூல் மாட்டியிருப்பவர்களும் உண்டு, அல்லாதவர்களும் உண்டு.
பார்ப்பனிய, வேளாள மேலாண்மையும், இந்தி - சமஸ்கிருத மேலாண்மையும் தான்
இவர்களது கொள்கை.
அந்த வகையில், நீங்கள் குறிப்பிடும் 'க' கும்பல்களும் இவர்களில்
அடக்கம். இவர்களை 'க'(றுப்பு) கும்பல் என்று அழைப்பதை விட
'நிதி' கும்பல் என்று அழைப்பது பொருத்தமாயிருக்கும். எனென்றால்
'நிதி' குவிந்தவுடன இந்த 'நிதி'கள் (கருணாநிதி, உதயநிதி, கலாநிதி,
தயாநிதி ...) வந்த பாதை மறந்து, பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டும்
கும்பலாய்ப் போய்விட்டது. அவர்களை உங்களுடன் சேர்த்துக்
கொள்வதில் பெருமை கொள்ளுங்கள்.
பணம் வந்தால்தான் தமிழனுக்கு சுயநலம்தானே முக்கியம்.
சன், மூன் என்ன, பணம் கொடுத்தால் நீங்கள் சொல்லும் எந்த
பெயரையும் வைக்கும் இந்தக் கும்பல். அதனால் தான் மைல்
கல்லில் தமிழை எடுத்து இந்தி பதித்ததைப் பார்த்துச் சும்மாயிருந்தது.
தமிழ் நாட்டின் குக்கிராமத்தில் ஒடும் இரயில் கழிப்பிடத்தில் கூட
அறிவிப்புகள் ஆங்கிலமும், இந்தியிலும் மட்டுமே தொடர்கின்றன.
நன்றி - சங்கரபாண்டி.
//மொழி மையங்கள் அமைத்து புலம் பெயர்ந்து வாழ்வதற்கோ, வெறும் பயணத்தை முன்னிட்டோ, தரமான பயிற்சி அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் //
உளமாற ஏற்றுக் கொள்கிறேன். National Highways--ல் தமிழோடு ஹிந்தி இருந்தாலே கதறும் தமிழ் பற்றாளர் என கூறுவோர், சுற்றுலா வரும் வட நாட்டவரால், பயனுறுவது தமிழர்களும்தான் என்பதை மறைத்து,.. தார் அடித்து, தம் தமிழ் பற்றை காட்டுபவர், இதனையா செய்வார்கள் .
ஜோ ,
தம் அனுபவத்தில் கற்காமல் 'மஞ்சள் துண்டு' ஓநாய்களின் கதை வசனத்தை பார்த்தா கற்றுக் கொள்ளச்சொல்லுகிறீர்கள்.ஆனால் அவர்கள் குடும்பத்தினரின் வாழ்க்கை முறையிலிருந்து நாம் உணரவேண்டியது நிறைய...
ஐ நா சபையில் ஹிந்தி பேசி நம் 'வெட்டி' கவுரதை காண்பிப்பதைக் காட்டிலும் , நம்மை நம் மக்களின் நிலமைகளை முன்னேற்றுவதும் , நம் நிலையை பலரும் புரிய வைபபதும்தான் உண்மையான கௌரவம்.
Sorry for not posting in Tamil
//தம் அனுபவத்தில் கற்காமல் 'மஞ்சள் துண்டு' ஓநாய்களின் கதை வசனத்தை பார்த்தா கற்றுக் கொள்ளச்சொல்லுகிறீர்கள்.//
Dos,
What I meant is Pls don't generalise everything 'just' by your persoanl experience..
Another thing..Pls take my opinions as my opinions..I am not a stupid to make my opinions just because of 'manjal thundu' person. At the same time just because you hate 'Manjal thundu' ,it doesn't mean whatever 'manjal thundu' supports are wrong or whoever have a same opinion in certain issues are 'manjal thundu' supporters .
சங்கரபாண்டி, காலகாலத்துக்கும் அழுகிபோன அதே வாதத்தை திரும்ப திரும்ப முன்வைக்க சில ஜாதிவெறி இனவெறி கேஸுகளுக்கு தேவையிருக்கலாம். இதுகளோடு போய் விவாதம் எல்லாம் செய்ய உங்களுக்கும் விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டதா? நரேந்திரன் மாதிரி அசடுகளிடம் பேச எதாவது இருக்கலாம். தெரிந்தே மொள்ளமாறித்தனம் செய்பவர்களிடம் பேசி பயன் ஏதாவது உண்டா?
//ஐ. நா. சபையில் பிரதமர் வாஜ்பாயி இந்தியில் பேசியது குறித்து மிகப் பெருமையடைந்தேன். //
சங்கரபாண்டி, ஸாரி உங்க கருத்தையும் நான் ஒழுங்கா படிக்கலை. இங்க எழுத எனக்குதான் விவஸ்த்தை இல்லை.
தமிழ் சினிமா வசனகர்த்தாக்களாக இருந்த நம் தலைவர்கள் தம் வயிற்று பிழைப்பு , ஹிந்தியால், ஹிந்தி சினிமாவால், கெட்டுவிடுமோ என்று பயந்ததினால் வந்தது .
Chandramukhi songs :உங்க தலைவர் பாட்டுல ரொம்ப தெலுங்கு கலந்திருக்கு..மூச்சுக்கு 300 தரம் தமிழ் என்று சொல்லும் உங்க தலைவர் ,மீண்டும் தமிழனை முட்டாள் ஆக்கி விட்டார்....
Anonymous ,
எந்த அனானிமஸ் காலிலாவது விழுவேனே ஒழிய எந்த சினிமாக்காரனையும் தலைவன் எனச் சொல்லமாட்டேன் .
தமிழ் தமிழ் என ஏமாற்றுவது ரஜினிகாந்த் இல்லையென நினைக்கிறேன் ..அது வேறு காந்த்.
//ஜாதிவெறி இனவெறி கேஸுகளுக்கு தேவையிருக்கலாம்/
ஹிந்திக்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம் என்று இந்த முட்டாளுக்கு தெரியவில்லை ..
I accept authors view
I accept authors view
//இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் இந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லாமல் கோடிக்கணக்கில் இருக்கும் இந்தியர்களை என்ன சொல்வது? முட்டாள்கள் என்கிறீர்களா அல்லது தகுதியில்லாதவர்கள் என்கிறீர்களா?//
//மேற்கு வங்காளத்திலும், ஆந்திரத்திலும், ஏன் மகராஷ்டிரத்தின் உட்பகுதிகளில் கூட இந்தி தெரிந்தால் மட்டும் போதாது.//
சங்கரபாண்டி அவர்களே சரியாகச் சொன்னீர்கள்.
இதுதவிர, இந்தி மூன்றாம் மொழியாகப் பயிற்றுவிக்கப்படும் மாநிலங்களில் உள்ள மக்களை விட தமிழர்கள் ஆங்கிலத்தை சிறப்பாக பேசுகின்றனர், எழுதுகின்றனர் என்ற என் மலையாள நன்பரின் கருத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
எனக்கு தமிழ், ஆங்கிலம் தவிர இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளும் எழுத, படிக்க, பேசத் தெரியும். இது நான் பள்ளியிலோ, கல்லூரியிலோ சென்று கற்கவில்லை. பணி நிமித்தமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றியபோது, என் சுய விருப்பத்தின் பேரில், என்னுடன் பணியாற்றிய மத்தியப் பிரதேச நண்பரின் உதவியுடன் கற்றது. அவருக்கு ஆங்கிலமும் தெரியாது. எப்படி சாத்தியமாயிற்று? ஆர்வமும் முயற்சியும்தான்.
//இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் இந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லாமல் கோடிக்கணக்கில் இருக்கும் இந்தியர்களை என்ன சொல்வது? முட்டாள்கள் என்கிறீர்களா அல்லது தகுதியில்லாதவர்கள் என்கிறீர்களா?//
//மேற்கு வங்காளத்திலும், ஆந்திரத்திலும், ஏன் மகராஷ்டிரத்தின் உட்பகுதிகளில் கூட இந்தி தெரிந்தால் மட்டும் போதாது.//
சங்கரபாண்டி அவர்களே சரியாகச் சொன்னீர்கள்.
இதுதவிர, இந்தி மூன்றாம் மொழியாகப் பயிற்றுவிக்கப்படும் மாநிலங்களில் உள்ள மக்களை விட தமிழர்கள் ஆங்கிலத்தை சிறப்பாக பேசுகின்றனர், எழுதுகின்றனர் என்ற என் மலையாள நன்பரின் கருத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
எனக்கு தமிழ், ஆங்கிலம் தவிர இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளும் எழுத, படிக்க, பேசத் தெரியும். இது நான் பள்ளியிலோ, கல்லூரியிலோ சென்று கற்கவில்லை. பணி நிமித்தமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றியபோது, என் சுய விருப்பத்தின் பேரில், என்னுடன் பணியாற்றிய மத்தியப் பிரதேச நண்பரின் உதவியுடன் கற்றது. அவருக்கு ஆங்கிலமும் தெரியாது. எப்படி சாத்தியமாயிற்று? ஆர்வமும் முயற்சியும்தான்.
Why those Cho groups not advise to learn Sanskrit, the Holy Language....?
Post a Comment