காவிரி காமெடி

ஒரு ஃப்ளாஷ் பேக் .. கபிணி அணைகட்டுக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு ஒருபுறம். …ஜே ஜே உண்ணாவிரதம் இருந்து ‘காவிரி கொண்ட கலைத்தாய்’ என்ற பட்டம் வாங்கியதும், வாழப்பாடி ராஜிநாமா செய்து அம்மாவின் அருளாசி பெற்ற கூத்துக்கள் என அரசியல்வாதிகள் கூத்துக்கள் ஒருபுறம் இருக்க .. இரு வருடங்கள் முன்னால் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என சினிமாக்காரர்கள் பண்ணிய கூத்து இருக்கே..(அது சரி .. சினிமாவையும் தமிழக அரசியலையும் பிரிக்க முடியுமா என்ன?)
கன்னட நடிகர்கள் தமிழ் படங்கள் பெங்கலூரில் ஓடுகிற வெறுப்பில் , ராஜ்குமார் ( பாபா படம் மட்டும் ரிலீஸ் பண்ண ரஜினி இவர் காலில் விழுந்தது கவனத்துக்கு உரியது) தலைமையில் ஊர்வலம் போனதில் ஆரம்பித்த காமெடி , தமிழக சினிமாக்காரர்களால் (அரசியல்வாதிகளின் இயக்கத்தில்) , இனிதே நடந்து , காவிரி பிரச்சினையே , அதில் மறைந்து போய் விட்டது .
முதலில் , கன்னட நடிகர்கள் தமிழ் படங்களை எதிப்பதால் வந்த வெறுப்பினாலும் , தமிழ் சமுதாயம் கேள்வி (தமிழ் சமுதாயம் தீர்வுகளை சினிமாக்காரர்களிடமே கேட்டு பழகி போய்விட்டது ) கேட்குமே என்றுதான் நெய்வேலி போராட்டத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் . ரஜினி, கர்நாடகத்திலுள்ள தன் சொத்துகளுக்கு ஆபத்து வரும் என்ற பயத்தினாலோ , பாபா படத்திற்க்கு பங்கம் வரும் என்ற எண்ணத்தினாலோ அல்லது உண்மையான சகோதர பாசத்தினாலோ இதை எதிர்க்க இந்த காமெடியில் சூடு பிடித்துவிட்டது .
ரஜினியை ‘தமிழின துரோகி ‘ என கூறி ஓரம் கட்டலாம் என்ற அம்மாவின் ப்ளான் ஒர்க்-அவுட் ஆக நெய்வேலி போராட்டம் – கமல் சிம்ரன் காதல், ராஜேந்தர் கொதிப்பு , விஜய்க்காந்தின் கூட்டம் சேர்ப்பு, அதனால் சரத்தின் கொதிப்பு, ஸன் - ஜே ஜே டீவீக்கள் சண்டை , பாரதிராஜாவின் ‘க(த)ன்னி ‘ பேச்சு என, தமிழ் சினிமாவில்கூட காண கிடைக்காத சுவாரஷ்யமான மசாலாக்களோடு - முடிந்தது . ரஜினி அவுட்…ரஜினி ரசிகர்கள் ரஜினி கொடும்பாவி எரிப்பதாக செய்தி ..இமேஜ் போய் விட்டதாக ஒரு மாயை. என்ன செய்வது ? இமேஜையும் காப்பாற்ற வேண்டும் , சகோதரர்கள் மற்றும் ராஜ்குமாரிடம் கெட்ட பெயரும் வாங்க கூடாது .. என்ன செய்யலாம்? உண்ணாவிரதம் இரு ..கூட்டம் சேர்..பிரச்சினையை திசை திருப்பு .. நடக்கவே நடக்காத, நடந்தாலும் , இப்போ பசியை தீர்க்க உதவாத நதி இணைப்பை பேசு .. அதற்கு ஒரு கோடி என சொல்லி நல்ல பேர் வாங்கு ..என அந்த உண்ணாவிரத கூத்தும் முடிந்தது .
இதற்கிடையில் நதிநீர் இணைப்புக்காக ரஜினி டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார் என்று ஏதோ ‘கங்கை கொண்டான்’ , ‘கடாரம் கொண்டான்’ என்ற ரீதியில் பேசப்பட்டு , ஆனால் அவர் இமயமலை சென்று திரும்பும்போது , 30 வருஷ தன் பேரான ‘ரஜினி’ யை மறந்து ‘இந்த விஜயகாந்த் நினைத்தால் ..’ என்று பன்ச் டயலாக் விட்டது தனி காமெடி ட்ராக் .
ஒன்றரை ஆண்டுகள் கழிந்து , தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ‘அவுட்கோயிங்’ பிரதமரிடம் பேசியதோடு , ராமதாஸ் , சந்திரமுகி , பொண்ணு கல்யாணம் என்று போய்விட்டார் . அரசியல்வாதிகள் வழக்கம் போல அடுத்த தேர்தல் மற்றும் சண்டைகளில் இறந்கி விட்டார்கள் , பத்திரிக்கைகள் ஜெயலெக்ஷ்மி , செரீனா என்று அடுத்த ஸ்கூப் தேடி போய்விட்டன .. நாமும் நல்ல ஒரு காமெடி பார்த்த திருப்தியில் சங்கராச்சியார் ஷோ பார்த்து கொண்டிருக்கிறோம் .
இந்த போட்டியில் ஜே ஜே ஜெயித்தாரா? கருணாநிதி ஜெயித்தாரா ? ரஜினி ஜெயித்தாரா ? பாரதிராஜா , விஜயகாந்த் ஜெயித்தார்களா? அல்லது கன்னட சினிமா கூட்டம் ஜெயித்ததா? என உறுதியாக சொல்ல முடியாது . ஒன்று மட்டும் உறுதி .. ஜெயித்தது விவசாயிகள் அல்ல.. நடந்ததும் காவிரி போராட்டம் அல்ல.

1 comments:

said...

தாஸ்,
சரியான இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கீங்க..உங்க கோபங்களுக்கு சரியான வடிக்கால் இந்த வலைப்பூ..போட்டு தாக்குங்க! வாழ்த்துக்கள்..!!