கங்குலி.. கருத்து சுதந்திரம்.. பச்சை விளக்கு ....

கருத்து சுதந்திரத்தை பாருங்கப்பா.. கங்குலி சரியா விளையாடலையாம் . இந்தியா மானம் போயிடுச்சாம் .. (என்னமோ இந்தியாவின் கௌரவமும் மானமும் கங்குலி மட்டையிலும், அவர் பந்தில் துப்புற எச்சியிலும் இருக்கிறமாதிரி ) ..அப்படியே மானம் போனாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மானம் அல்லவா போகும் .. வாரிய நிர்வாகிகளுக்கல்லவா சொரனையும் சூடும் இருக்கவேண்டும் ... நம்மவர்களுக்கு வருகிற ஆத்திரத்தை பாருங்கள் .. குஜராத் கலவரத்தினால் வராத ஆத்திரம், சாதி கட்சிகளின் கொட்ட்த்தினால் வராத ஆத்திரம் , தீவிரவாதிகளின் மேல் வராத ஆத்திரம், சரியாக மட்டை அடிக்கவில்லை என மட்டையடித்து ஒரு வெப்சைட் www.ihateganguly.com .. அதிகப்படியாக ஒரு பதிவு போடலாம் (தற்காப்பு ஆட்டம்!!) அதற்குமேலான முக்கியத்துவம் எதற்கு? எங்கேயாவது ஒரு செஞ்சுரி அடித்தால், ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றால் திரும்பவும் அவர் கடவுளாகிவிடுவார் .. இங்குதான் கோயிலும் கட்டுகிறார்கள் செருப்பையும் தூக்குகிறாரகள். என்றுதான் நிதான நடைமுறை வருமோ?


அப்பாடா .. எதோ ஒரு பதிவு போட்டாச்சு.. இன்னும் மூன்று மாதத்திற்கு கவலையில்லை.. பச்சைவிளக்கு எரியும் (என நினைக்கிறேன்)

தங்கர் வாங்கலையோ.. தங்கர் ..

என்னுள் முன்னரே எழுந்த கேள்வியை திருமாவும் இந்த வார ஆனந்த விகடனில் கேட்டுள்ளார் ..

1) தொப்புளில் பம்பரம் விட்டது தாய்க்குலத்தை கேவலப்படுத்தியதில்லையா? அதற்காக இந்த தலைவர் என்றைக்காவது மன்னிப்புக் கேட்டதுண்டா?

2) ஓட விட்டு, டாப் ஆங்கிலில், கேமிராவை வைத்த இயக்குனரை கண்டு என்றைக்காவது குஷ்பு கோபப்பட்டு கொதித்து எழுந்ததுண்டா?

3) ஏணியில் ஏற்றிவிட்டு, தோதான ஆங்கிலில் , கேமிராவை கொண்டு சென்ற இயக்குனரை , யாரது, ம்..ம் ஆங்.. விந்தியா, கண்டித்ததுண்டா?

ஓ...பணம் வாங்கியதால் இது எல்லாம் பிரச்சினையில்லை.. தங்கரும் பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு 'விபச்சாரிகள்' என பேசியிருந்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது!

டிஸ்க்ளைமர் ...

டிஸ்க்ளைமர் ...

அ) எனக்கு தங்கரை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் தங்கர் ஜாதியில்லை ..
ஆ) தங்கர் நடிகைகளை திட்டினதில் எனக்கு ஒரு வருத்தமுமில்லை .
இ) தஙகர் மன்னிப்பு கேட்டதும் என்னை பாதிக்கவுமில்லை ..
ஈ) பாலியல் தொழிலாளிகளின் மேல் மரியாதை வைத்திருப்போர் , நடிகைகளை அவர் பாலியல் தொழிலாளிகளோடு ஒப்பிட்டதை கண்டித்து கொதித்து எழுந்ததை கண்டு சிரிப்புதான் வந்தது .. அவர்கள் தங்கர் பாலியல் தொழிலாளிகளிடமல்லவா மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கவேண்டும் .


எனக்குள்ள ஒரே வருத்தம்.. இந்த கேவலமான ஆட்களையல்லவா நம் தமிழர், தலைவர் என்றும், முதல்வர் என்றும் தெய்வம் என்று கூறி களிக்கின்றனர் ..

குப்பயிலே மாணிக்கம்..??

முன்னொரு காலத்துல சொன்ன பச்சோந்தி, நாயி, சிங்கம் , கொரங்கு, நரி,கழுதப்புலி கதைகளுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. ..கணேசன் பதிவிலயும்,குயிலி பதிவிலயும் ஒரு அனானிமசு நண்பர் நம்மல குப்பயிலே கிடக்கிற மாணிக்கம்னு (LLTrashu) சொன்னதால ஒரேதா புல்லரிச்சுப்போயி அவரு நம்பிக்கைய எப்படிடா காப்பாத்துறதுன்னு ஒரே ரோசனைப்பண்ணி, மூளய கசக்கி , இத எழுதறேன் .

முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் வச்சுக்கிச்சாம் . முயல் வேகமா முன்னேறி ஓடிக்கிட்டு இருக்கும்போதே ' நாமதான் ரொம்ப வேகமா ஒடுரமே.. நம்மல எங்கே இந்த ஆமை முந்த போகுதுன்னு நினைச்சுக்கிட்டு, அங்கினக்குள்ளயே படுத்து தூங்கிடுச்சாம் .. மெதுவா ஊர்ந்து போன ஆமை வெற்றிக்கோட்டைத் தாண்டி ஜெயிச்சிருச்சாம் ..
நீதி : நாம எவ்வளவு திறமையானவங்களா இருந்தாலும் , எடுத்த செயலை முடிக்குமளவுக்கும் தடம் மாறிடக்கூடாது .

முயல் தன்னோட தப்ப உணர்ந்துச்சாம். அது , ஆமைக்கிட்டே போய் இன்னொருதடவை போட்டிக்கு அழைச்சுச்சாம் . இந்த போட்டியில, முயல் ஓட ஆரம்பிச்சு , எல்லைக்கோட்டைத் தாண்டும் வரை வேற சிந்தனையே இல்லாம , ஜெயிக்கனும்கிற குறிக்கோளோட ஓடி முதல்ல வெற்றிக்கோட்டை சேர்ந்துருச்சாம் .
நீதி : ' நாம செஞ்ச தப்புக்களிலிருந்து பாடம் படிச்சுக்கிட்டு அதை திருத்திக்கிட்டோம்னா வெற்றி நமக்குத்தான்'.

இப்ப ஆமை யோசித்துச்சாம்.. நாம எத்தன தடவ தரையில பந்தயம் வச்சாலும் தோத்துருவோம் . அதனாலே இப்ப தண்ணியில(குளம், ஆறுல இருக்கிற தண்ணிங்க!!) பந்தயம் வைக்கலாம்னு நினைச்சு முயல போட்டிக்கு கூப்பிட்டிச்சாம் .. முயலும் வந்து தண்ணிக்குள்ள நீச்சலடிக்க முடியாமே,தரையிலேயே தவிக்க, ஆமை நீந்தி ஜெயிச்சிருச்சாம் .
நீதி : 'ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும் , நம்மோட திறமை என்னான்னு கண்டுபிடிச்சு அதனை ஒழுங்கா செஞ்சா நமக்கு வெற்றி நிச்சயம்' .

இருவருக்குமுள்ள தனித்திறமையை இருவரும் புரிஞ்சுக்கிட்டு, ரெண்டு பேரும் ஆலோசனை செஞ்சு , தரையிலே பிரயாணம் செய்றப்போ முயல் ஆமையை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும், தண்ணியில நீஞ்சிரப்போ ஆமை முயலை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும் போகலாம்னு முடிவு பண்ணிட்டு , அப்படியே செஞ்சு சந்தோஷமாக நட்போட இருந்துச்சுங்களாம் ..
நீதி : இதுதாங்க கூட்டுப்பணி (Team work) . ஒவ்வொருத்தரும் அடுத்தவங்களோட திறமையை அங்கீகரிச்சு அதனோட பயனை அனுபவிச்சு, சண்ட போடாம(சாத்தான் வேதம்!!), சந்தோசமாக வாழனும்ங்க ..

ராமதாஸ் செய்த கேவலம்..

ராமதாஸ் மேல் அவ்வளவு நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வளவு கேவலமாக சென்றுவிடுவார் என கனவிலும் நினைத்திருக்கவில்லை . அதுவும் இலங்கை மண்ணில் .. இது நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது .. தற்போதுதான் என் கவனத்திற்க்கு வந்தது .இன்று தூக்கம் வருமா என்று தெரியவில்லை..

ராமதாஸ் என்னும் பெயரை வீரர்கள் பட்டியலில் பார்த்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சி இவ்வாறு ஆகும் என எனக்கு தெரியவில்லை? ஒரு ஈரிலக்க ஒட்டங்கள் எடுத்திருந்தாலும் பரவாயில்லை .. தொடக்க ஆட்டக்காரராக எவ்வளவு நம்பிக்கையுடம் மேற்கிந்திய அணி அவரை அனுப்பியது .. 9 பந்துக்களை சந்தித்து 1 ஓட்டம்தான் எடுக்கமுடிந்ததா அந்த ராமதாஸ் ர்யானுக்கு ..இது கேவலமில்லையா? நம்பிக்கை துரோகம் இல்லையா? எத்தனை கோடி இந்தியர்கள் மற்றும் மேற்கிந்திய சகோதரர்களை
ஏமாற்றியிருக்கிறார் . ஒரு 4 இல்லை.. ஒரு 6 இல்லை.. ரன்னும் ஆக குறைந்து. Strike Rate எல்லோரையும் விட குறைவு ...

R Ramdass b Maharoof 1 9 0 0 11.11

சுட்டி இங்கே ...



பின்னூட்டமிடுகிறவர்க்கு ஒரு டெம்ப்லேட் ..

மருத்துவர் மீதான ஊடக வன்முறையை பற்றி ஏற்கவவே இங்கு கூறியுள்ளேன் ..


அன்புமணி அவர்கள் போல நல்ல தந்தையாக இருங்கள் என்று சமீபத்தில் 1958யில் என் நண்பர் ரங்காச்சாரியிடம் கூறினது இப்போது நியாபகம் வந்தது . இது என்ன ஹைப்பர்லிங் என்று தெரியவில்லை .


உங்களை போன்றோரின் ஆதரவினால் சந்திரமுகி இன்று வெற்றிகரமான 112.75-ஆவது நாளை எட்டியுள்ளது ..

திருமாவும் கமல் மற்றும் கூத்தாடிகளும்...

கனடா வாழ் தமிழர்களின் தமிழுணர்வை பாராட்டியதற்காக பொங்கியெழுந்த முகமூடியின் பதிவிற்கான பின்னூட்டமாக இதனை எழுதுகிறேன் . ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் . கனடாவிலும் அவ்வாறே என எண்ணுகிறேன் .. அவ்வாறு இல்லாதபட்சத்தில் திருமாவின் அறியாமையை சுட்டிக்காட்டலாமே ஒழிய அதில் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை .. இதை கூறியதும் தமிழ்நாட்டு பத்திரிகையில்தான் என்பதால் 'இடம்' என்பதிலும் பிர்ச்சினையில்லை ..கமலின் சிங்கப்பூர் பேட்டிக்கும் , திருமாவின் குமுதம் பேட்டிக்கும் இடம் மிகப்பெரிய வேறுபாடு .. கமலின் புரிதலும் தவறு என்பது சிங்கப்பூரில் சில காலம் வாழ்பவன் என்ற முறையில் கூற முடியும் .

சிங்கப்பூரில் தமிழ் தேசிய மொழியாக இருத்தலும் , தமிழ் வளர்ச்சிக்காக அரசாங்கமும் தமிழார்வலர்களின் பணிகளும் தமிழ் ஊடகங்களின் உச்ச்ரிப்புகளும் பாராட்டப்படவேண்டியதாக இருந்தாலும் , கமல் எண்ணியிருப்பது போலல்லாமல் பொது மக்களிடையே ஆங்கிலம் கலக்காத தமிழோ, தமிழரிடையே தமிழ் என்ற எண்ணமோ தமிழக தமிழரிடையும் குறைவாகத்தான் உள்ளது .. ஒப்பு நோக்கி தமிழகத்தை குறை கூற வேண்டுமென்றால் அவர் சார்ந்த ஊடகந்தான் மிகத்தகுதியானது . அவர் பினாத்தியது தான் உண்மையென்று அவர் எண்ணியிருந்தால் அதனை அவர் தமிழகத்திலே, குறைந்தபட்சம் அவருடைய விசிலடிச்சான் கும்பல்களிடம் கூறியிருக்கலாம் அல்லது சிங்கப்பூரை புகழ்ந்துமட்டும் பேசியிருக்கலாம். அவருடைய சிங்கப்பூர் பேச்சுக்காக குறைந்தபட்ச கண்டனம் கூட தமிழகத்திலிருந்து வராமல் , கமலுடைய தமிழ் ஆர்வம் பற்றிய ஜல்லியடிப்புகள் தான் வருகின்றன .

இதனை விட கொடுமையாக தமிழகமக்களை மாடு மேய்க்கும் கூட்டம் என சிங்கப்பூரில் நடந்த கூத்தாடிகளின் கூட்டத்தில் கூறிய ராதாரவி மற்றும் சத்யராஜ் (புரச்சி தமிழனாம்) போன்றொருக்குக்கூட தமிழகத்திலே ஒரு எதிர்ப்பு இல்லை(சன்னின் ஒளிபரப்பிற்கு பின்னும்) .
ராதாரவிக்கு ஓட்டளித்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது தான் தமிழன் செய்தது ..

அவர்களுக்கு கோயிலும் கட் அவுட்டும் கட்டுவதை நிறுத்தும் வரை தமிழ்மக்களை பற்றிய கூத்தாடிகளின் எண்ணம் மாறவே மாறாது ..

தேசப்பற்று - 8 வரி கவிதை

மசூதி இடித்து தேசமானம் காத்த அத்வானி நமஹ ..
இஸ்லாமியர் குறைத்து இந்தியர் சதவீதம் கூட்டிய மோடி நமஹ ..
இந்தியர் ஒற்றுமைக்காக செங்கல் அனுப்பிய ஜெயலலிதா நமஹ..
தேசத்திற்காக முற்றும் துறந்த உமாபாரதி நமஹ...
மாற்றான் தோட்டத்தின் ஒரே இந்தியன் பெர்ணான்டஸ் நமஹ..
இந்தியர் மானம் காக்கும் வாஜ்பாய் நமஹ..
இந்தியபற்றென்று கட்டுரை வடிக்கும் குருமூர்த்தி நமஹ..
தவிர்த்த மற்றெல்லோரும் - நமஹ நஹி .. நமஹ நஹி ...


8 வரி கவிதைப்போட்டிக்கு ஏதோ நம்மாலான சிறு பங்களிப்பு...


முகமூடியின் செக்கூலரிசம் - 8 வரி கவிதை பதிவிற்கும் இந்த பதிவிற்கும் உண்டு தொடர்பு என கூறிக்கொள்கின்றேன்.

வினை எதிர்வினை

ராமதாஸ் , திருமாவைப்போல் ஊடகத்தாக்குதலுக்குள்ளானோர் எவருமல்லர் என்பது குழலி அவர்களின் விசனம் .. இது உண்மையா..? வேறு எவரும் இவர்களைப் போல விமர்சிக்கப்படவில்லையா என்பதின் மேலோட்டமான என் எண்ணங்கள் ..

இந்திரா காந்தியின் 'எமர்ஜென்சி' காலம் இன்றும் விமர்சிக்கப்படவில்லையா? ராஜீவ் மீதான போபார்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக எத்தனை கட்டுரைகள், எத்தனை மேடைப்பேச்சுகள். குற்றச்சாட்டை நிரூபிக்கும் முன்னரே அவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவில்லையா நாமும் நம் பத்திரிகைகளும் ..

கருணாநிதியின் வாரிசு அரசியலை கேலி செய்யும் செய்திகளை பார்த்ததேயில்லையா நீங்கள் .. வைகோவை கட்சியை விட்டு நீக்கின காலக்கட்டத்தில் கருணாநிதியின்பால் விழுந்த விமர்சனங்கள் எத்தனை? ஊழலின் ஊற்றுக்கண்ணாக கருணாநிதியை கூறுகிறவர்கள் எத்தனை பேர்? .. ஜெ.வின் ஆணவ ஆட்சிக்காகவும், ஊழலுக்காகவும் , ஆடம்பர திருமணத்திற்காகவும் அவர் மேல் விழுந்த விமர்சனங்கள் கருணாநிதி அனுபவித்த விமர்சனங்களை விட குறைந்ததா என்ன?

ஜெவின் ஊழலை எதிர்த்து வைகோ தொடங்கிய நடைபயணம் போயஸ் தோட்டத்தில் நிறைவு பெற்றப்பொது வைகோவுக்கு விழுந்த ஊடக அடிகள் எத்தனை? அவர் தி மு க வுடன் திரும்பவும் கூட்டணி அமைத்துக்கொண்டபோது அவர்க்கு கிடைத்த விமர்சங்கள் மறந்துவிட்டதா?

அத்வானியின் தேர்பயணத்திற்கும் , பாபர் மசூதி இடிப்பிற்கும் பத்திரிகைகளில் விமர்சனம் இல்லையா என்ன? குஜராத் படுகொலைகளுக்கு மோடியின் மேல் விழுந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடக விமர்சனங்கள் எத்தனை ?

ஏன் ரஜினி , விஜய்காந்த் போன்றோரின் திரைப்பட வசனங்களுக்காக அவர்கள் நம்மால் விமர்சிக்கப்பட்டதில்லையா என்ன?

மோடியின் குஜராத் படுகொலைகளையோ , மசூதி இடிப்பையோ , வாரிசு , ஆடம்பர, ஊழல் அரசியலையோ நியாபடுத்தவில்லை நான் .. ஒவ்வொருவர் செய்த வினைகளுக்கு தகுந்த எதிர்வினைகளை ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள் என்பதே என் கருத்து .

மரம் வெட்டியதும், வாரிசு அரசியலும் , ஆபாச பேச்சுக்களும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது எனறு நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை .. திருமா விடயத்தில் அவரின் தலித் முன்னேற்ற பணிகள் விமர்சிக்கப்படவில்லை(ஆதரிக்கப்படவில்லையெனினும்) .. அவரின் ராஜினாமா பலராலும் பாராட்டவேப்பட்டது .. நான் முன்பே கூறியது போல சிறிதும் முக்கியமும் அவசியமும் இல்லாத திரைப்பட பெயர் மாற்றம் போன்ற அரசியலே விமர்சிக்கப்பட்டது ..ராமதாஸ் , திருமா கூட்டணி குறித்தான விமர்சனங்களும் தி மு க , ம தி மு க கூட்டணி குறித்தான விமர்சனங்களை ஒத்ததே என எண்ணுகிறேன் .

வேண்டுமானால் உங்களுக்காக ராமதாஸுக்கு என்னாலான ஊடகத்தடவல் ..

தமிழ்நாட்டின் நலனுக்காக தன் தாய்மேல் பழி வந்தாலும் பரவாயில்லை என ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்த நம் அன்பு தலைவர் , தன் மகனை இந்திய நலனுக்காக மந்திரியாக்கி தியாகம் புரிந்தவர் .. தன் வாரிசுகளிடமிருந்து தமிழைக் காப்பாற்ற அவர்களுக்கு ஆங்கில கல்வி கொடுக்குமளவுக்கு தமிழுணர்வு மிக்கவர் .

அந்நியன்

படம் டிபிக்கல் ஷங்கர் பார்முலாவுக்குள் அடங்குகிறது. அநியாயங்களைத் தட்டிக் கேட்க தள்ளப்படும் சாதாரணமான கதாநாயகன், ஆங்காங்கே புகுத்தப்பட்ட கிராபிக்ஸ், கொஞ்சமாய் ரிசர்ச் செய்து சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயமாக ‘கருடபுராணம்’ .அந்நியன் கரூட புராணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புரூடா புராணம்.கரூட புராணமே ஒரு புரூடா எனப்படும் போது அப்பட்டமான புரூடாக்களை எப்படி எடுத்துக் கொள்வது?

அம்பியாக அப்பாவியாகவும் ரெமோவாக குதூகலமாகவும் அந்நியனாக ஆக்ரோஷமாகவும் முகம் மாற்றி உடல் மாற்றி குரல் மாற்றி நடிக்க இன்னொரு கமல் வந்திருக்கிறார். விக்ரமின் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு அதிகம் ஒன்றுமில்லை. அம்மாஞ்சி அம்பியாக ஐய்யங்கார் குடுமியுடன் அவர் செய்யும் நடிப்பு பார்க்க சகிக்கவில்லை. ரெமோ பெர்சனாலிட்டியிலும் இயற்கைத்தன்மையை இழந்து அவர் நடிப்பு காட்சியளிக்கிறது. அந்நியன் பெர்சனாலிட்டியில் நடிப்பு ஓகே .ரூல்ஸ் ராமானுஜமாக இருக்கும் அம்பியின் காரெக்டரில் நல்ல நகைச்சுவை மற்றும் நறுக் நாட்டு நல சிந்தனைகள். அன்னியனா அம்பியா என்று கேட்டால், அன்னியன் காரெக்டருக்குத் தான் முதல் பரிசு.

இன்னொரு ஹீரோ பீட்டர் ஹெய்ன்! ஆக்ஷன் காட்சிகளோ பிரமிப்பு வகை ..குறிப்பாக , கராத்தே ஸ்கூலில் ஏழெட்டு டஜன் ஆட்களை மூர்க்கமாக விக்ரம் அடித்து நொறுக்கும் சண்டைக் காட்சி. பல கேமிரா கோணங்களை வைத்து எடுத்த குங்பூ பைட் சீக்வென்ஸ் அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால் அந்த புதுமைகளை மேட்ரிக்ஸ் ஹாலிவுட்டிலும், பாய்ஸ் பாடலிலும் பார்த்துவிட்டதால் அந்த புதுமை கொஞ்சம் புளிக்கிறது.

விவேக் - வாரே வாவ். நீண்ட நாளுக்கப்புறம் ஒரு கலக்கல் காமெடி செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு காதலிக்க ஐடியா கொடுக்கும் அதே புளித்து வெறுத்துப் போன சமாச்சாரங்களை இந்த படத்திலும் செய்கிறார்.

சதா அழகாயிருக்கிறார். பட்டுப்புடவையிலும் ஐயங்கார் வீட்டு அழகாகவும் கண்ணுக்கு விருந்தளிக்கிறார்.அந்நியனிடம் மாட்டிக்கொண்டு அவர் அவஸ்தைப்படும் அந்த சில நிமிடங்களில் சதாவிடமிருந்து அருமையான நடிப்பை வரவழைத்திருக்கிறார் இயக்குனர். சதா சாதா..

லுங்கி கட்டிகொண்டு, சுத்தமற்ற தன்மையில் சைக்கிளில் செல்லும் கருப்பு நிற இளைஞன்(சார்லி), தன் பாட்டிற்கு தேமேனென்று சென்று கொண்டிருக்கும் அம்பியின் மீது துப்புகிறான். ஒரு காலத்தில் சமூகத்தால் மிகவும் மதிக்கப்பட்ட பிராமண வாழ்க்கை, இன்று மற்றவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை அந்த காட்சி அற்புதமாய் படம் பிடித்தாலும், அந்த காட்சி ஜாதி அடையாளங்களை மீறி காண்பிக்கப் பட்டிருக்கிறது. பார்ப்பனன் மட்டுமே யோக்கியமானவன் போல காட்டப்படுவதும், அயோக்கியர்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதோர் போன்று சித்தரிக்கப்படுவதும் இயக்குனரின் ஆதிக்க வெறியை நிலைநாட்டும் செயலே அன்றி வேறொன்றுமில்லை. சற்றே உற்று நோக்கினீர்களேயானால், சங்கீத அகாடெமி தலைவராக இருக்கும் நீலுவின் பாத்திரம் மட்டும் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்பட்டு, தவறு செய்பவராகவும் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர் கூட அன்னியரால் மிரட்டப்படுகிறாரேயொழிய, கொலை செய்யப்படுவதில்லை என்று ஆராய்ந்து நோக்கினால் யாராலும் சுலபமாய் கண்டுபிடிக்க முடியும்.’


பல கோடிகளை கொட்டி கிராபிக்ஸ்,பிரமாண்டம் என்ற குப்பைகளை தருவதில் வல்லவர் சங்கர்.சங்கரின் அந்நியன் படமும் இதில் தப்பவில்லை. சமுதாய பிரச்சனை, நாட்டிலுள்ள பிரச்சனை என்பதை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு தீர்வு தருகிறேன் என்ற பெயரில் கதையை கொலை செய்வதில் வல்லவர் சங்கர். பிரச்சனைகளை ஆழமாக சொல்லாமலும் படம் பார்ப்பவர்களுக்கு பிரச்சனைகளைப் புரிய வைக்க முடியாமலும் பிரமாண்டத்தையும், கிராபிக்ஸையும் துணைக்கழைத்துக் கொள்வார் இயக்குநர் சங்கர். மேற்கத்திய பாதிப்பால் மேற்கத்திய படங்களின் சாயலை போட்டோ காப்பியடிக்க அந்நியன் வரை முயன்றும் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணன் என்ற பெயரில் வாசகர் கேள்விகள் எல்லாம் எழுதுவாரே…அவரது பெயர் கூட படத்தில் ஒரு கதாபாத்திரமாய் உலாவ விட்டிருப்பது, ஷங்கர் டச் தான்.

பின் குறிப்பு:

இந்த விமர்சனத்திற்கான உளவியல் காரணீகளுக்கான காலக்கட்டம் 'அந்நியன்' வெளிவந்த அன்று முதலில் வெளியான விமர்சனத்திலிருந்து , நேற்று இரவு நான் அப்படத்தை பார்த்த பின் நண்பர் படத்தை பற்றிய கருத்தை கேட்கும்போது நான் முழித்த வரையிலான காலக்கட்டம் .

கருத்து உதவி : ஷங்கர் .

தொழில்நுட்ப உதவி : கன்ட்ரோல் சி, கன்ட்ரோல் வி ..

பொது சிவில் சட்டம்

இடஒதுக்கீடு, இரண்டாயிரம் வருடம் வன்கொடுமைகள் அனுபவித்தற்காக தாழ்த்தப்பட்டோர்க்கு வழங்கும் ஒரு சலுகை எனக்கூறும் நம் அரசாங்கங்கள், அந்த சலுகையை கிறிஸ்தவ தலித்களுக்கு வழங்க மறுப்பது எப்படி நீதியாகும்? கிறிஸ்தவருக்குள் சாதியில்லை என ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் , கிறிஸ்தவ தலித்களும் இரண்டாயிரம் வருடமாக வன்கொடுமையை அனுபவித்தவர்களின் வாரிசுகள்தானே?

'சிறுபான்மையர் சட்டங்களை வைத்து தன் சொத்துக்களை காத்தும், தன் பாக்கெட்டுகளை நிரப்பும் ,தம் அதிகாரங்கள் குறைக்கப்படும் சூழல்களின் மட்டும் பொங்கியெழும் மத குருமார்களும், பணக்காரர்களும் , சாதாரண பொது மக்களின் பிரச்சினைகளின்போது 'மறு கன்னத்தையும்' காட்ட அறிவுரை வழங்கவும் தவறுவதில்லை ..பொது சிவில் சட்டம் பேசும் கட்சிகளும் , இந்த உரிமையை 'பொது சிவில்' சட்டதிற்குள் கொண்டு வருவதே இல்லை .


என்னுடைய முந்தைய பதிவில் இந்த கருத்து பத்தோடு பதினொன்றாக மறைந்துவிட்டது ..அந்த கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த பதிவின் நோக்கம் .

வலைப்பதிவில் தமிழ் துரோகம் ..

மறைமுகமாக ஒரு தமிழின துரோகம் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது ..இது எத்தனை பேருக்கு புரிந்துள்ளது எனத் தெரியவில்லை.. சொரணை கெட்ட தமிழன் எப்போதும் அப்படித்தான். தன் உரிமை பறிபோவதுகூட தெரியாமல் பராக்கு பார்த்துக்கொண்டிருப்பான் . தனக்கு கொம்பு முளைத்திருக்கிறது என்று நினைக்கும் வலைப்பதிவாளன் கூட இந்த விடயத்தில் ஏமாந்துதான் போகிறான் .. என்ன செய்வது அவனும் தமிழன் தானே .

நான் சொல்ல வருவது இன்னுமா புரியவில்லை.. தமிழனுக்கு புரியாது !.. பின்னூட்டங்களில் தமிழ் எழுத்துகளை தெரியவிடாமல் , வலைப்பதிவில்(blogspot) உள்ள தமிழின துரோகிகள் , தமிழ்பெயர்களை ?????? என்று மாற்றும் தொழில்நுட்பத்தை செய்து, எல்லோரையும் ஆங்கிலத்தில் தம் பெயர்களை மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர் . நம் வலைப்பதிவரும் அவர்களின் சூழ்ச்சி தெரியாமல் , பெயர்களை ஆங்கிலத்தின் எழுதும் அவலச்சூழலில் மாட்டிகொண்டுள்ளனர் ..

இதனை கண்டிக்கும் வகையில் , என் பெயரை -L-L-D-a-s-u--..(எழுத்துகளின் மீது தார் அடிக்க முடியாமல் செய்திருக்கும் மைக்ரோசாஃப்டின் தமிழ் துரோகத்தையும் கண்டிக்கிறேன் )..

Image hosted by Photobucket.com

மாற்றியுள்ளேன் ..

பி.கு ...

தார் அடித்து நான் தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கையில் , என்னை தமிழ் வளர்ப்போர் லிஸ்டில் சேர்க்காமல், தன் பெயரிலே ஆங்கிலத்தை கலக்கும் அல்வாசிட்டி ,மற்றும் மாயவரத்தான், இட்லி வடை , பாலா போன்றோரை சேர்த்த தினமலர் போன்ற பார்ப்பண ஏடுகளை கண்டிக்கிறேன் .

பிதாவே எங்களை மன்னியும்

அன்பு சகோதரர்க்குள் சாதி பார்த்து தீண்டாமை வளர்த்து, தேவாலயத்தை பூர்வாஷிரமாக்கியதற்காக ,பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் கல்லூரி , பள்ளி சொத்துக்களை காக்க உரிமை குரல் கொடுத்துவிட்டு , ஈராயிர வருஷ கொடுமைகளுக்கு ஆளான தலித்தின் உரிமைகளுக்கு (சாதி எங்களுக்குள் இல்லையென பொய் சொல்லி ) குரல் கொடுக்காத குற்றத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

அன்பை பரப்ப சொன்னவர் நீர் .. அரசியல், கலாச்சார விடயங்களுக்கான மதமாய் மாற்றி , வன்முறையில் செயல்படுவற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

கட்டாய மத மாற்றத்தை நீர் வெறுப்பீர் எனத்தெரிந்தும், சட்டம் கொண்டு வந்தோரை எதிர்த்து அரசியல் நடத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

யார் ஆட்சிக்கு வந்தாலும், மாலையோடு காத்திருக்கும் குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உமது வார்த்தைகளை பேசாமல் , அரசியல் தலைவரின் கொ.ப.சே வாக இருந்ததற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் விழாக்களின் நாயகராக நீரில்லாமல், அரசியல் தலைவர்களின் நாயகர்களாக்கி, அவர்களின் நாய் பேச்சுகளுக்கு கைதட்டியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் கூட்டத்தை நாடக குழுவாக்கி , ஊனமுற்றோராய் நடிப்போரை கதாநாயகர்களாக ஆக்கும் எங்கள் அவலங்களுக்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உமக்கு ஏஜண்டுகள் நாங்கள், நாங்கள் ஜெபித்தால்தான் நீர் செவிமடுப்பீர் என ஊரை ஏமாற்றி ,ஜெபிக்க சொல்வோரிடம் , கூலி கேட்கும் ஏஜண்டாக இருப்பதற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

'மருத்துவர் நோயுற்றோர்க்கே' என்று நீர் சொன்னதை மறந்து , எங்கள் கான்வென்டுகளில் படித்த பணக்கார குடும்ப குழந்தைகளுக்கு மட்டுமே இடம் கொடுக்கும் கயமைத்தனத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

யாருக்கும் தெரியாத மொழி ஒன்றை பேசி இது உமது மொழியென கூறி உம்மை தனிமைப்படுத்திய குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .


பாப் பாடலை எதிர்த்து, அதற்கு சற்றும் குறைவில்லாத 'அல்லேலூயா' நடனம் ஆடி உம்மை கேவலப்படுத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உலகம் அழிய தேதி குறித்தமைக்காகவும், தேதியை வெட்கமில்லாமல் மாற்றி திரிந்தமைக்காகவும்,பிதாவே எங்களை மன்னியும் .

நானும் ரஜினியும்: ஒரு ஃப்ளாஷ் பேக்

பள்ளியில் படிக்கும்போது ஆன்டுக்கொருமுறை சினிமா கூட்டி செல்லும் என் அப்பா , ‘ரஜினியும் ராஜேஷ்குமாரும் தான் இளைஞர்களை கெடுக்கிறார்கள் ‘ என்ற எண்ணமுடையவராதலால் என்னை ரஜினி படம் பார்க்க அழைத்து கொண்டு போகாததில் வியப்பேதும் இல்லை . ஆதலால் நான் காலேஜ் வருமளவும் ரஜினி படம் பார்த்ததில்லை . ஆனால் அவர் படம் பார்க்கும் முன்னால் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு என் மெட்ராஸ் மாமாவின்
‘இன்ஃபுலன்ஷினால்’ வந்தது . ஏ வி எம்மில் மாப்பிள்ளை ஷூட்டிங் . என் வயது சிறுவன் ஒருவனும்( ஒரு டைரக்டர் பையன் , உம்மனாம் மூஞ்ஜீ .. விஜயாக இருக்குமென்று எனக்கு இப்போது சந்தேகம் .. நாட் ஷுயர்) நானும் நட்பாகி கொன்டு , மற்றவர்களோடு ரஜினிக்காகவும் அமலாவுக்காகவும் வெயிட் பண்ணிகொண்டிருந்தோம் . ரஜினி பைக்கில் ஸ்டையிலாக வருவார் , மேக்-கப் போட்டு கொள்ளமாட்டார் , தலை சீவ மாடார் என ரஜினி ரசிகனான என் நண்பன் சொன்ன வார்தைகளை நம்பி ரஜினியை பைக்கில் எதிர்பார்த்துகொன்டிருக்க, அவர் வந்ததோ காரில் .. முதல் ஏமாற்றம் .. மேக்-கப் போட்டிருந்ததும் , தலை சீவியதும் அடுத்தடுத்த எமாற்றங்கள் . ஏதோ அவரிடம் கை கொடுத்து , சிரிப்பை தனியே வாங்கினாலும் ரஜினிமட்டில் எனக்கு ஏமாற்றம் தான் . ‘சின்ன சின்ன ‘ நடிப்பசைவுகலுக்கும் சுற்றி இருந்தோர் கை தட்டியதும் நடிப்பு ஈஸி என்ற மன நிலையே வந்தது . ‘முதல் இரவு’ காட்சியாக அப்போது கருதப்பட்ட , ரஜினி-அமலா காலேஜ் சந்திப்பு காட்சியும் , ரஜினி- சிவாஜி ராவ் என்ற கமெடியனும் காலேஜ் ஹாஸ்டல் கேட் ஏறி குதிக்கிற ஸீனும் பார்த்துவிட்டு வந்தேன் . (வேறு ஷூட்டிங்கில் சீதாவை பார்க்கும் அவசரத்தில் சீதா அப்பா-அம்மாக்கிடையில் புகுந்ததால் சீதா அப்பா கோபம் கொண்டு திட்டியது தனி கதை) . .

கல்லூரி நாட்களில் ரஜினி படத்தை விடாது பார்த்தாலும் , பிறகு ரஜினியின் பழைய படங்களில் ரஜினியின் நடிப்பை, முக்கியமாக தில்லு முல்லு , ஜானி , முள்ளும் மலரும் , நெற்றிக்கன் ரசித்தாலும் மாப்பிள்ளை மட்டும் இன்னும் பார்க்க முடியவில்லை .

பி . கு : தலைப்பு மட்டும் ஜூ.வி , குமுதம் ,…….. தலைப்புகளின் பாதிப்பு . கொஞ்சம் ஓவர்தான்னு தெரியும் .

சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்குடிதாங்கி பாராட்டு!

இந்த தலைப்புதான் இந்த செய்தியை படிக்கத்தூண்டியது ..அடுத்த தேர்தலுக்குள் பல வாய்ப்புகளையும் எடை போடும் கட்டத்திற்குள் ஐயா உள்ளதால் , ரஜினியையும் கட்டிப்பிடிக்க ஆயத்தமாகிறார் என்ற எண்ணத்தோடு படிக்கும்போது , ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை வாசிக்க நேர்ந்தது .( சுகாதாரத்துறை அமைச்சரை பாராட்டியது அதிர்ச்சி இல்லை!!) .

நுழைவுத்தேர்வை தடை செய்ததால்( இது சரியா என்பது தனி), ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசையை குலுக்கல் முறையில் தெரிவு செய்ய போகிறார்களாம் .. இந்த யோசனையை சொன்ன அதிகாரியை 'தமிழின(?) துரோகி' என ராமதாஸ் சொன்னாலும், 'முட்டாள் அதிகாரி' என்பதே சரி என நினைக்கிறேன் ..

மருத்துவ , பொறியர்துறை மேற்படிப்பு காரணீயாக தமிழ் இல்லாத காரணத்தால் , தமிழை கவனமெடுத்து படிக்கும் உந்துதல் தமிழை முதற்பாடமாக படிக்கும் மாணவர்களுக்கே இருப்பதில்லை ..பலர் தமிழை ஒரு பாடமாகவே கூட தேர்வு செய்வதில்லை . தமிழையும் காரணீ பாடமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில், குலுக்கல் முறையை தேர்வு செய்த தமிழக அரசை கண்டிக்கிறேன். இதற்கு எதிராக கோரிக்கை விடுத்த முனைவர் ராமதாஸை இந்த விடயத்தில் பாராட்டுகிறேன்.

அடைக்கலராசும் பார்ப்பணீய சூழ்ச்சியும்

நம் வாழுகின்ற இந்த தருணத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கும் சில பெரியோரை பற்றியும், அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பட்ட அடிகளையும், பார்ப்பணீயத்தினால் அவர்கள் பட்ட வேதனைகளையும் பதிந்து , இருநூறாயிரம் ஆண்டுகட்கு பிறகும் இணையத்தை பார்க்கும் நம் வழித்தோன்றல்களுக்கு , இந்த சூழ்நிலையை படம் பிடித்து காட்டும் புனிதப்பணியை மேற்கொண்டுள்ளேன் .

தமிழகத்தின் புனித பூமியாம் திருச்சியில் , நகரத்தந்தை என அழைக்கப்பட்டவரும் , சுதந்திர போராட்ட வீரருமான திரு லூர்துசாமியின் தவப்புதல்வராக பிறந்தவர் அடைக்கலராசு . சிறுவயதிலே ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் உறுதுணையாகவும் இருந்தவர் இவர் . அன்னை இந்திராவின் சோசலிச கொள்கையினால் கவரப்பட்டு , இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சியான காங்கிரசில் இணைத்துக்கொண்டபோது, அன்னை இந்திரா எவ்வளவு மகிழ்ச்சியுற்றார் என்பதை திரு . எஸ் கே சாவ்லா தன் நூலில் விவரித்துள்ளார் .

ஏழைகளுக்கும் கூலி தொழிலாளர்க்கும் வேலை கொடுக்க எத்தனை கட்டடங்களை கட்டினார் , மக்களுக்கு மகிழ்ச்சியுற எத்தனை தியேட்டர்களை திறந்தார்.. ஏன், அவர் 80 அடி கட்-அவுட் தமிழகத்தில் முதன்முதலில் நிறுவியதும் ஏழைகளுக்காகத்தானே என நான் கூறினால் என்னை ஜாதி வெறியன் என ஜல்லியடிக்ககூடிய சாத்திய கூறுகள் இருந்தாலும் , நம் தமிழ் மக்களுக்கு உண்மைகளை உரக்கக்கூற நான் பின்வாங்கவில்லை .

சிங்கப்பூர்க்கு அவர் வருகை அளித்தபோது, அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த இரண்டு மணிநேரத்திலும், தமிழ், தமிழ் வளர்ச்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.. அவருடைய 'தமிழ்த்தாய்' என்ற புத்தகத்தை படித்தீர்களென்றால் அவரின் தமிழ்பற்றும் , இலக்கிய இலக்கண அறிவும் உங்களுக்கு விளங்கும் .

அவர் நாடாளுமன்றத்தில் இடியென முழங்கி தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள் எத்தனை ? அதனையெல்லாம் செய்தியாக வராமல் பார்த்துக்கொண்டன இந்த பார்ப்பண பத்திரிகைகள் .. இவரை விட்டால் , தமிழ்நாட்டை இஸ்ரேலுடன் இணைக்கும் தம்முடைய கனவுக்கு குறுக்குசால் ஓட்டி விடுவார் என பயந்த சோ போன்ற பார்ப்பணகும்பல் , மூப்பனார் என்ற நேர்மைய்ற்றவருடன் கூட்டு சேர்ந்து ஓரம் கட்டியதை மறுக்கமுடியுமா?

பின் குறிப்பு: தலைவர் ஓ.ப(http://lldasu.blogspot.com/2005/05/part-i.html), சோசலிசவாதி அண்ணன் அ.ரா போன்ற தமிழகத்தின் தலை சிறந்தோரைக்கூட அறிமுக படுத்த வேண்டியுள்ள இந்த தமிழ் சூழல் மிகுந்த அலுப்பினை தருகிறது .. நான் இந்த பணியை என் பணிச்சுமைக்குமிடையே செய்ய வேண்டியுள்ளது .. அடுத்து நீதியரசர் தூத்துக்குடி பெரியசாமியை இந்த தமிழ் மக்களுக்கும் , வழித்தோன்ரல்களுக்கும் அறிமுகப்படுத்துவேன் . இந்த கேடுகெட்ட தமிழர்க்காக, அய்யா தமிழ்க்குடிதாங்கியின் பெருமைகளை அலசிய குழலியாரும் (http://kuzhali.blogspot.com/2005/04/1.html) , அண்ணன் தொல். திருமாவை பற்றி மணிக்கூண்டாரும்(http://manikoondu.blogspot.com/2005/05/blog-post_111655887144691553.html) எழுதி இந்த திருப்பணியை என்க்கு முன்னரே செய்துள்ளனர் .

விஜயகாந்த் புது கட்சி

சிவாஜி , விஜய ராஜேந்தர் , பாக்யராஜ் வழியில் , கேப்டன் என அறுவருப்பே இல்லாமல், தன்னை வருணித்துக்கொள்ளும் திரு. விஜயகாந்த் அவர்கள் , புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளாராம் .

http://thatstamil.indiainfo.com/news/2005/06/01/vijay.html

ரஜினிக்கு 6 தொகுதிகளில் கிடைத்த வரவேற்பு இவருக்கு தமிழ்நட்டின் 239 தொகுதிகளிலும் கிடைக்க வாழ்த்துகிறேன் .

பல சினிமா கதாநாயர்களை புறக்கணித்த தமிழ் சமூகம் இந்த 'மகாநடிகனை'யும் புறக்கணிக்கும் . தமிழ் சமுதாயம் சினிமா மாயையில் இல்லை என்பதையும் உலகுக்கு நிரூபிக்கும் .

ஓ.பன்னீர்செல்வமும் ஊடக வன்முறைகளும் - ஒரு அலசல் Part-I

ஒரு கோழையாக முதுகெலும்பு இல்லாதவராக , தமிழக ஊடகங்களால் நடத்தப்படும் ஊடக வன்முறையை எதிர்கொண்டு, ஓ. பன்னீர்செல்வம் அவர்களை பற்றி சொல்வது என் கடமையென நினக்கிறேன் . பன்னீர்செல்வத்தை இவ்வாறு தாக்குபவர்கள் க.அன்பழகனை , நெடுஞ்செழியனை, வைகோவை இவ்வாறு சொல்வதில்லையே ஏன் .. சாதிபற்றுதானே என நான் கூறினால் , என்னை சாதி வெறியனாக மட்டையடிக்க கூடிய சாத்தியக்கூறு இருந்தாலும் சில உண்மை விடயங்களை கூறுவது என் கடமையென விழைகின்றேன் .

திரைத்துறையை சார்ந்தவர்கள்தான் தமிழகத்தின் முதல்வராக முடியும் எனும் துர்பாக்கிய நிலையை முறியடித்து , அரிதாரம் பூசாத, சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த ஒருவனும் தமிழக முதல்வராக முடியும் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் .. சாதீய உணர்ச்சிகளை தூண்டி, கூட்டம் சேர்த்த சாதீய தலைவர்கள் கூட செய்ய முடியாத சாதனைகளை , அமைதி புரட்சியை நடத்திக்காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் . இவரில்லாமல் யார் யாரையோ புரட்சி தலைவர், தலைவி என காவடி தூக்குகிறது தமிழ் சமுதாயம் . ஆடை அவிழ்ப்பில் புரட்சி செய்தவர் தன்னை புரட்சி தலைவியாகவும், அச்சு பிச்சு கவிதை எழுதுபவர் தம்மை கலைஞராகவும், மற்ற உடண்பிறப்புகளை விட சற்றே அதிகம் படித்தவர் பல்கலைகழமாகவும் , அந்த அடையாளங்கள் கூட இல்லாதவர் தன் ஊர் பெயரை இணைத்து ஆர்க்காட்டார் , வாழ்ப்பாடியார் எனவும் அடையாளம் காட்டப்பட்ட தமிழ் சூழலில், முதல்வர் பொறுப்பு இருந்தபோதும் பட்ட பெயரகளை பற்றி சற்றொப்ப கூட கவலைப்படாமல் மேல்மக்கள் மேல்மக்களே என ஒவ்வொரு அரசியல்வாதியையும் வெட்கப்படவைத்தவர் அவர் .

அவர் முதல்வராக வந்த சூழல் எப்படிப்பட்டது? அமெரிக்காவிலே இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, உலகில் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொரு தமிழனும், இந்தியனும், ஏன் உலக மக்கள் ஒவ்வொருமே பயந்து கொண்டு இருந்த சூழலில், தைரியமாக நம்மையெல்லாம் காக்க நம்மில் ஒருவராக முதல்வரானவர் அவர் .அமெரிக்காவிலே பாதுகாப்பில்லாத அன்றைய நேரத்தில் , தமிழகத்தை பாதுகாத்தவர் அவர் .

அவர் ஆட்சி சமயத்திலே டெல்லியிலே என்ன நடந்தது? நாடாளுமன்ற தாக்குதல் .. பயங்கரவாதிகள் டெல்லி நாடளுமன்றத்திலே தாக்குதல் நடத்தினர் .. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் ஏன் தமிழக சட்டமன்றத்தை தாக்க வில்லை . அந்த துணிச்சல் ஏன் அவர்கட்கு வரவில்லை . அண்ணன் பன்னீர்செலவம் அஞசா நெஞ்சம் உள்ளவர்.. தீவிரவாதிகள் வாலாட்டினால் அதை ஒட்ட அறுத்தெரிவார் என்ற பயத்தினால்தானே .

அவர் ஆட்சியிலே நடைபெற்ற கல்வி கொள்கை சீர்திருத்தம் , கவர்னர் பற்றிய டெல்லி மாநாட்டில் அனைவரின் பாரட்டையும் பெற்ற தலைவரின் உரை, கண்ணகி சிலை அகற்ற படுத்தியதால் திணிக்கப்பட்ட போராட்டம் , இந்தியா டுடே போன்ற பார்ப்பணீய ஏடுகள் அவர்க்கு எதிராக் நடத்திய ஊடக வன்முறை போன்றவற்றை அடுத்தடுத்த படிவுகளில் பதிகிறேன்,. நன்றி ..

சிங்கப்பூரில் தமிழ் பட்டப்படிப்பு

இன்றைய வசந்தம் சென்ட்ரலில் வந்த செய்தி தமிழர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.. சிங்கப்பூர் மேலான்மை-திறந்தவெளி பல்கலைக்கழகம் (SIM-OUC ) , மதுரை காமராஜர் பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பத்திருக்கிறது. தமிழ் வளர இந்த மாதிரியான ஆக்கபூர்வமான செயல்களில் சிந்திக்காமல் தியேட்டர்களில் தமிழை தேடும் கும்பலை என்னவென்று சொல்வது ?

எந்தவொரு நல்ல நிகழ்ச்சியிலும் நம்மையும் தொடர்பு படுத்திப்பார்ப்பதும் ஒரு சந்தோஷம்தானே .. நான் படித்த பல்கலைக்கழகமும் , நான் சில வருடங்கள் முன்பு வேலை பார்த்த SIM-OUC ம் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பித்திருப்பதும் என்னை பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது ... மல்ட்டி லின்குவல் வெப்சைட் என்பதால் பூச்சி பூச்சியான சீன எழுத்துகளோடு போராடிக்கொண்டிருந்த எனக்கு தமிழை கையாலும் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தமாகவும் உள்ளது .

சந்திரமுகியும் டாக்டர் பிரகாசும் ..

சந்திரமுகி கதை பல வழிகளில் தெரிந்ததாலும் , சிங்கப்பூரில் டிக்கெட் விலை 15 வெள்ளியாய் இருப்பதாலும் (மற்ற படங்கள் 8 அல்லது 10 வெள்ளிகள்) , தியேட்டர் சென்று படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை . தீபாவளியன்று வசந்தம் சென்ட்ரலில் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன் .. இணைய தளத்தில் சந்திரமுகியை இலவசமாக கிடைக்கிறது என்றும் அதற்கு காரணம் புலித்தலைவர் பிரபாகரன்(?) முதற்கொன்டு இலங்கை தொழிலதிபர் வரை பல செய்திகள் வர, டாக்டர் பிரகாசின் வலைத்தள முகவரிகளை பிரசுரித்த நம் பத்திரிகைகள் கண்டிப்பாக இதனையும் பிரசுரிப்பார்கள் என தேடினேன்.. சமூக பொறுப்புணர்வோடு(!!) யாரும் இந்த வலைத்தளங்களை பிரசுரிக்கவில்லை .

கார்த்திக் அரசியல்-2

Image hosted by Photobucket.com
நம் தமிழர் கூட்டம் இவ்வாறு நடிகர் பின்னே அலைகிறதே என கவலையாகயிருந்தாலும் , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காத, ஓப்பனிங் கொடுக்கமுடியாத கார்த்திக்குக்கே இவ்வளவு கூட்டம் வரும்போது , விஜயக்காந்த் போன்றோர்க்கு வரும் கூட்டத்தை வைத்துக்கொண்டு அவ்ருடைய பலத்தை (?) கண்டு நிம்மதியாய் உள்ளது .

வில்லன் விவேக்

சுனாமி மீட்பு பணியில் விவேக் ஓபராய் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது . அவரின் உடலுழைப்பும், செலவிட்ட காலமும் .... பிரமிப்பாக உள்ளது . இப்படியும் ஒரு மனிதர், அதுவும் சினிமா நடிகர் தற்போது இருப்பாரா என ஆச்சரியமாக உள்ளது . ஒரு ஹிந்தி நடிகர் செய்கிறாரே, லட்ச லட்சமாக தமிழில் சம்பாதித்த தமிழ் நடிகர்கள் ஒன்றும் பெரிதாக செய்யவில்லையே என்ற குரலும் தமிழகத்திலே கேட்கத்தான் செய்கிறது .

21 லட்சம் கொடுத்து விட்டு தன் 'தனி வழி'யில் போவதையோ அல்லது ஒன்றுமே கொடுக்காமல் இருப்பதையோ நாம் விமர்சிக்கமுடியாது . அது அவரவர்களின் சொந்த விருப்பம் . ஒவ்வொருவரும் அவரவருடைய பணத்தின், நேரத்தின் முதலாளிகள் .
ஆனால் ,அவர்கள் 'தமிழனுக்காக உயிரை கொடுப்பேன் ' என பஞ்ச் டயலாக் விடும்போது நம் தமிழினம் அவர்களின் பொய் முகத்தை உணர வேண்டும். தமிழக தமிழரை மேல் நாட்டு மேடைகளிலே விமர்சித்துவிட்டு வரும் நடிகர்களுக்கு மாலை போட , அவர்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய போட்டி போடும் நம் தமிழினம் இனியாவது உணர்ந்து திருந்துமா? நல்ல வேலை, அவர்களில் எவரும் விவேக்கைப் போல் சேவை செய்யவில்லை . சிறு சிறு அசைவுகளுக்கும் அதிக சம்பளம் வங்கும் இவர்கள் , அதே விகிதப்படி , இந்த சேவைக்கு முதல்வர் நாற்காலி எதிர்பார்ப்பார்கள் .

ஒன்று மட்டும் நிச்சயம் , விஜயக்காந்த் , ரஜினிக்காந்த் போன்றோர்க்கு விவேக் ஒரு கொடூரமான வில்லன் . காமெடி விவேக்கின் கோபமே அதற்கு சாட்சி .